விபத்தில் நினைவிழந்த கிராம உத்தியோகத்தர் மரணம் | தினகரன்


விபத்தில் நினைவிழந்த கிராம உத்தியோகத்தர் மரணம்

விபத்தில் நினைவிழந்த கிராம உத்தியோகத்தர் மரணம்-Madurankuliya Accident-Ameen GS Dead

மதுரங்குளி, நல்லாந்தளுவ பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (09) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.

முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட புழுதிவயல் கிராமத்தில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த மதுரங்குளி, நல்லாந்தளுவ கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் முஹம்மது அமீன் (46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற கடந்த திங்கட்கிழமை (09) சுபஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு மீண்டும் வீடு நோக்கி வீதியோரத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கும் போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த கிராம உத்தியோகத்தரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலை என்பவற்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த புதன்கிழமை (11) மீண்டும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு புத்தளம் தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த கிராம உத்தியோகத்தர் நேற்று (14) காலை உயிரிழந்துள்ளார்.

கீழே வீழ்ந்ததன் காரணமாக தலையில் ஏற்பட்ட பலத்த அடியினால் மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட மூளை இறப்பினால் இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் ஜனாஸா புத்தளம் 5ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததுடன் பின்னர் அவரது பிறந்த ஊரான நல்லாந்தளுவ கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நேற்று (14) இரவு 10.30 க்கு விருதோடை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - ஆர். றஸ்மின்)


Add new comment

Or log in with...