தமிழர் அறிவுத் திறனை பறைசாற்றிய ஒப்பற்ற நூல் திருக்குறள் | தினகரன்


தமிழர் அறிவுத் திறனை பறைசாற்றிய ஒப்பற்ற நூல் திருக்குறள்

“மானிட வர்க்கத்தின் மாபெரும் தத்துவப்பேழை”

“யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருக்குறள் பெருவிழாவின் நிறைவுநாள் நிகழ்வில் மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஆற்றிய உரையின் ஒரு பகுதி”

திருக்குறள் என்பது தமிழில் எழுந்த தமிழரின் அறிவுத்திறத்தை உலகத்திற்குப் பறைசாற்றிய ஓர் ஒப்பற்ற நூல். உலக அரங்கில் தமிழின் பெருமையை உயர்த்திக்காட்டும் மிகச்சிறந்த நூல்.

 திருக்குறளை ஏன் ‘உலகப் பொதுமறை என்று சொல்கிறோம்? திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட ஒரு நூலாக இருந்தாலும், ‘தமிழ்’ என்ற மொழியின் பெயர் அதில் எங்குமே இல்லை. ‘தமிழர்’ என்ற இனத்தின் பெயரும் அதில் எங்குமே இல்லை. ‘தமிழ்நாடு’ என்ற நாட்டின் பெயரும் அதில் இல்லை.

எந்த ஒரு சமயத்தின் பெயரோ அல்லது கடவுளின் பெயரோ அதில் இல்லை. ஆக, ஒரு மொழிக்கோ, ஓர் இனத்திற்கோ ஒரு நாட்டிற்கோ ஒரு சமயத்திற்கோ உரிய நூலாக இல்லாமல் உலகம் அனைத்திற்குமாக எழுதப்பட்ட ‘உலகப் பொது நூல்’ திருக்குறள். அதனால்தான் அது உலகப் பொதுமறை என்று போற்றப்படுகின்றது.

மனித குலத்திற்கே பெருவிளக்காக எழுந்து வழிகாட்டும் ஓர் ஒப்பற்ற நூல் திருக்குறள். ஒழுக்கவியல் மற்றும் நன்னெறிக்கோட்பாடு பற்றி எழுந்த பெரும் உலக இலக்கியங்களில் ஒன்றாக திருக்குறள் விளங்குகிறது. “மானிட வர்க்கத்தின் மாபெரும் தத்துவப்பேழை” என்றும், “வெள்ளித்தட்டில் வைத்த தங்கக் கனி” என்றும் திருக்குறள் மேல்நாட்டவரால் போற்றப்படுகின்றது. இரண்டு வரிகளில், அழகான சந்தத்தோடு, ஆழமான வாழ்வியல் தத்துவங்களைக் கொண்டதாக திருக்குறள் அமைந்துள்ளது.

இற்றைக்கு 2000ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தின் பழம்பெரும் மொழிகளின் இலக்கியங்கள், குறிப்பாக இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சமஸ்கிருதம் போன்ற மொழி இலக்கியங்கள் - சமய சார்பு இலக்கியங்களாக இருந்தன. அரசர்களையும், தேவர்களையும், கடவுளரையும் புகழ்ந்து எழுதப்பட்ட இலக்கியங்களாக இருந்தன.

 ஆனால் இதே காலப்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட திருக்குறள் என்ற இலக்கியம் மனிதருக்காக எழுதப்பட்ட இலக்கியம். மனிதரை முழுநிலையில் உருவாக்க எழுதப்பெற்ற நூல். மனிதருக்காக உலக மொழிகளில் எழுதப்பெற்ற முதல் நூல் இது ஒன்றுதான். ஏனைய அறநூல்கள் அனைத்தும் சமயம் சார்ந்தவை.

ஒரு மேல்நாட்டு கிறிஸ்தவ போதகர் தமிழ் மக்களின் வாழ்வியல் வரலாற்றுக் குறிப்புகளை அறியும் நோக்கோடு ஒரு நூலைக் கையில் எடுத்தார். அது திருக்குறள்! அதை அவர் எடுத்துத் திறந்தபோது அவர் கண்ணில் ஒரு குறள் தென்பட்டது. “மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன் ஆகுல நீர பிற” (ஒருவன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை எல்லாம், ஆரவாரத் தன்மை உடையவையாகும்) அதாவது, நாம் மனத்தால் தூய்மையாக இருப்போமானால், நாம் பேசுகின்ற பேச்சு, நாம் பார்க்கின்ற பார்வை, நாம் கேட்கின்ற அனைத்துமே தூய்மையுடையதாக இருக்கும்.

 நம் மனம் தூய்மையாக இருக்கிறது. இதைப் பார்த்ததுமே அந்த அறிஞருக்கு வியப்பு மேலிட்டது. அதுமட்டுமல்ல அவர் வெட்கி நாணி, தலைகுனிந்தார். “இவ்வளவு அரிய சிந்தனையை, கருத்தினை வாழ்வாகக் கொண்டு வாழ்கின்ற இந்த மக்கள் மத்தியிலா நான் என்னுடைய கருத்தினை கொண்டுவந்து பரப்ப வந்தேன்? நான் கொல்லத் தெருவில் ஊசி விற்க வந்துவிட்டேன் ” என்று இந்தக் குறளைப் படித்துவிட்டு அவர் சொன்னார்.   அவர் வேறு யாருமல்ல இத்தாலி நாட்டில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த கத்தோலிக்க் குருவான கொன்ஸ்ரான்டின் பெஸ்கி அடிகளார் - பிற்காலத்தில் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்டவர். திருக்குறள் போன்ற நூல்களைப் படித்தபோது தமிழர்பற்றி அவர் கொண்டிருந்த தனது தாழ்வான சிந்தனையை மாற்றிக்கொண்டார்.

இந்தியாவின் விடுதலை தந்தை மகாத்மா காந்தி. அவர் ஒரு குஜராத்திகாரர். தமிழர் அல்லர். அமெரிக்காவில் இருந்து வருகின்ற ஒரு ஏட்டிலிருந்த கட்டுரையைப் படித்தபோது அதிர்ந்துபோனார்.

அந்தக் கட்டுரை ரஷ்யாவில் இருந்த லியோ ரோல்ஸ் ரோய் என்ற பிரபல எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. அந்தக் கட்டுரையில் மாந்த நேயத்தைப் பற்றி விளக்கப்பட்டிருந்தது. “போரும் அமைதியும்” பற்றிய கருத்துக்களை அந்தக் கட்டுரையில் அந்த எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.

அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு மகாத்மா காந்தி ரோல்ஸ் ரோய்க்கு ஒரு கடிதம் எழுதினார். “உங்களுடைய கட்டுரை அருமைiயாக இருக்கிறது. எனது நாட்டு மக்களுக்கும் இந்தக் கருத்துக்கள் மிகவும் தேவையாக இருக்கின்றன. எனவே, இந்தக் கட்டுரையில் இருந்து சில பகுதிகளை என் நாட்டு மக்களுக்கு மொழி பெயர்த்து வழங்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுடைய ஒப்புதலை நான் கேட்கிறேன்” என்று எழுதினார்.

அதற்கு அந்த ரஷய எழுத்தாளர், “என்னுடைய சிந்தனையை நீங்கள் சிலாகித்துப் பாராட்டியமைக்கு நன்றி. இந்தச் சிந்தனைகளுக்கு உரியவர் நான் அல்ல. இந்தச் சிந்தனைகளுக்கு உரிய அரிய நூல் உங்களுடைய நாட்டில்தான் இருக்கிறது. உங்களுடைய நாட்டில் உள்ள அந்த நூலைப் படித்துவிட்டுத்தான் அந்தக் கருத்துக்களை என்னுடைய நூலிலும், கட்டுரையிலும் புகுத்தினேன்.

அந்த நூல் உங்கள் நாட்டின் தென் பகுதியில் உள்ளது. அது திருக்குறள் என்ற நூல்” என்றார். அந்தக் கடிதத்தைப் படித்தபோது மகாத்மா காந்தி அதிர்ந்து போனார். “நான் இந்தியாவில் இருக்கிறேன். இந்த நாட்டின் தலைவர்களில் ஒருவனாக இருக்கிறேன். ஆனால் இதுவரை இப்படிப்பட்ட ஒரு நூல் இருப்பதை நான் அறியாமல் இருக்கிறேனே” என தன்னையே நொந்துகொண்டார். உடனே தன் நண்பர்களை அழைத்து திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பை கண்டுபிடித்துத் தரும்படி கேட்கின்றார்.


Add new comment

Or log in with...