இதயம் என்ன இரும்பா? | தினகரன்


இதயம் என்ன இரும்பா?

இந்த நவீனத் தொழில்நுட்பக் காலத்திலும் உலக அளவில் மனித உயிரிழப்புக்கு முதன்மைக் காரணமாக இருப்பது இதயம் சார்ந்த நோய்களே. நாம் மனது வைத்தால் இதைத் தவிர்க்க முடியும். குறிப்பாக, முதுமையில் தினமும் மாரடைப்புடன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் பல நோயாளிகளைப் பார்க்கிறேன். தனக்கு இதயம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பது தெரிந்தும், அதை அலட்சியப்படுத்தியவர்களாகவும் அல்லது தனக்கு இதய நோய் வராது என்கிற அலட்சிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள். எனவே, இதயத்தைப் புரிந்துக்கொள்வதன் மூலம் பல நோய்களுக்கு வாசல் கதவை திறக்காமல் இருக்க முடியும்.

வயது ஏற ஏற இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழல்களில் விரைப்பும் தடிப்பும் அடைப்பும் அதிகரிக்கும் சாத்தியம் அதிகம். அது மட்டுமல்ல இதயத் தசைகளிலும் பல்வேறு தேய்மானங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கும். இதை புரிந்துக்கொண்டால் எந்தெந்த பிரச்சினைகள் இதயம் என்கிற இன்ஜினைப் பழுதாக்கும், எப்படி பழுதுபடாமல் இதயத்தை பக்குவமாக காக்க முடியும் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

என்ன நடக்கிறது

நம் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு ஐந்து லிட்டர் உச்சி தலை முதல் உள்ளங்கால்வரை ரத்தத்தை பாய்ச்சுகிறது. தாயின் கருவறையில் நான்காம் மாதம் தொடங்கி உயிர் இருக்கும்வரை ஓய்வறியா சூரியனாக உழைக்கும் இந்த இதயத் தசைகள் உரம் பெற, ரத்தம் தேவை.

இதயத் தசைகளுக்கு ரத்தம் அனுப்பும் ரத்த குழல்களின் பெயர் கரோனரி (Coronary) ரத்தக் குழல்கள். இந்த ரத்தக் குழல்களில் கொழுப்போ வேறு பல காரணங்களாலோ அடைப்பு ஏற்பட்டால் எந்தப் பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன், மற்ற சத்துக்கள் செல்லாமல் அப்பகுதித் தசைகள் பழுதடையத் தொடங்கி, இதய செயல்பாடு குன்றத் தொடங்கும் அல்லது நின்றுவிடும். அதனால்தான் மாரடைப்பில் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் பேரிழப்பு என்கிறது மருத்துவ உலகம்.

மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளவர்கள்

40 வயதுக்கு மேல் உள்ளவர்கள்,

 மாதவிலக்கு சுழற்சி நின்ற பெண்கள்

ரத்தத்தில் மிகைக் கொழுப்பு உள்ளவர்கள்

இருக்க வேண்டிய அளவைத்   தாண்டிய உடல் பருமன்

குடும்பத்தில் ஏற்கெனவே எவருக்காவது இதயம் சார்ந்த நோய்கள் இருந்தால்

மதுவையும் புகையையும் இரு கண்களாகக் கருதுபவர்கள்

நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தும், அதை கட்டுப்படுத்தத் தவறி வாழ்பவர்கள்

உடல் உழைப்பையும் உடற்பயிற்சியையும் அயர்ச்சியாக நினைப்பவர்கள்

நாவைக் கட்டுப்படுத்தாமல் உண்பவர்கள்

அடிக்கடி நொறுக்குத் தீனி, துரித உணவு, பேக்கரி உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, உப்பை அதிகம் உட்கொள்பவர்கள்

எப்போதும் பரபரப்புடன், மன உளைச்சலுடன் இருப்பவர்கள்

நேரடி அறிகுறிகள்  (Classic Chest pain)

நெஞ்சு எலும்பின் பின்புறம் (Retrosternal), நெஞ்சின் முன்பகுதியில் பிழிவது (squeezing) போலவோ (அ) இறுக்குவது (Tightness) போலவோ வலி இருக்கும்.

தொண்டைக்குழி, நெஞ்சு எலும்பின் கீழ்பகுதியின் (Xiphoid) புறத்தில், அக்குள் பகுதிவரை வலி பரவும். இந்த வலி கத்தியால் கிழிப்பதுபோல (அ) நெஞ்சுப் பகுதியில் இனம் புரியாத கனம் (Heaviness), அழுத்தம் (Pressure), அடைப்பதுபோல வரலாம்.

அதிகமாக வியர்த்துக் கொட்டி உடலே சில்லிட்டும் போகலாம், வாந்தி எடுக்கலாம். இப்படி ஏற்படுகிற வலி கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு, கைகளுக்கும் பரவலாம். குறிப்பாக இடது கைகளுக்கு. இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது

மறைமுக அறிகுறிகள் (Non classic Chest pain)

நெஞ்சின் முன்பகுதியில் வலி சில விநாடிகள் தோன்றி மறைவது அல்லது சில மணி நேரம் தொடர்ந்து இருந்தால்

சிறிய வேலையிலோ கழுத்து அசைவிலோ வலி வந்தால்

சின்னச் சின்ன வேலையிலும் வலி வருவது, நடந்தால் மூச்சு வாங்குவது அல்லது எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் போதே மூச்சு வாங்குவது

குமட்டல், தலை பாரம், பலவீனம், மனக்குழப்பம், தோள்பட்டை, கைகள், தாடைப் பகுதியில் வலி.

வயிற்றின் மேல் பகுதியில் வலி, வியர்வை அதிகம் இருந்தால் (ஆண்டாசிட் மருந்துகள் குடித்து வலி குறைந்தாலும் 50வயதுக்கு மேல் உள்ளவர்கள் இ.சி.ஜி. எடுத்து பார்க்கவேண்டும்)

செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்

ரத்த அழுத்தம்

இ.சி.ஜி (12 Lead EEG)

ரத்தத்தில் கொழுப்பு (Lipid profile), நீரிழிவு - சிறுநீரகச் செயல்பாடு

தேவைப்பட்டால் எக்கோ (Echo), டிரெட்மில்

மாரடைப்பு வந்துள்ளதா என்பதை அளவிடும் பிரத்தியேக ரத்தப் பரிசோதனைகள்

 


Add new comment

Or log in with...