சிங்கள, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தம்பு | தினகரன்


சிங்கள, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தம்பு

டபிள்யூ. எம். எஸ். தம்பு (வில்லியம் மெக்கோவன் செல்வசாமி தம்பு) 1902 - அக்டோபர் 23ஆம் திகதி பிறந்தவர். இலங்கைத் தமிழரும் பிரபல சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆவார். இவர் 1950கள், 60களில் பல புகழ் பெற்ற சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார். இந்தியாவிலும் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.  

யாழ்ப்பாணத்தில் பிறந்த தம்பு, சட்டம் பயின்று கொண்டிருந்த போது திரைப்படத்துறையில் ஆர்வம் காரணமாக படிப்பைக் கைவிட்டு சென்னை சென்றார். 1944 ஆம் ஆண்டு ‘பிரபாவதி’ என்ற தமிழ்ப் படத்தை வேறொருவருடன் கூட்டாகத் தயாரித்தார். பின்பு தனித்தும் சில படங்களைத் தயாரித்தார். தெய்வ நீதி (1947), கலாவதி (1951), நம் குழந்தை (1955), வைரமாலை (1956) உட்பட ஆறு தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்தார். இந்தியத் தமிழ்த் திரையுலகில் இவர் சிலோன் தம்பு என அழைக்கப்பட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி. ஆர். சுந்தரத்துடன் இணைந்து திரைப்பட ஏற்றுமதி, இறக்குமதித் தொழிலிலும் ஈடுபட்டார். இலங்கை திரும்பிய இவர் யாழ்ப்பாணத்தில் ‘ரீகல்’ என்ற பெயரில் திரையரங்கு ஒன்றைத் திறந்தார். அத்துடன் கொழும்பின் புறநகரான வெல்லம்பிட்டியில் ஆர்.ரீ. ஸ்டூடியோ என்ற பெயரில் திரைப்படக் கலையரங்கு ஒன்றையும் நிறுவினார்.   1958 ஆம் ஆண்டில் சேப்பாலி என்ற சிங்களத் திரைப்படத்தை தனது மகன் ரொபின் தம்புவுடன் இணைந்து தயாரித்து வெற்றி கண்டார். இத்திரைப்படம் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து பல சிங்களத் திரைப்படங்களை இலங்கையில் தயாரித்தும் இயக்கியும் வெளியிட்டார். 1970 ஆம் ஆண்டில் வெண்சங்கு என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார். டபிள்யூ. எம். எஸ். தம்புவின் மகன் ரொபின் தம்பு ஒரு பிரபல சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆவார். இருவரும் இணைந்து பட திரைப்படங்களைத் தயாரித்தனர். ரொபின் தம்புவின் மகனின் பெயர் சஞ்சீவ் தம்பு. இவரும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டவராவார். 


Add new comment

Or log in with...