கடும் வரட்சியால் 7 இலட்சத்து 81 ஆயிரத்து 952 பேர் பாதிப்பு | தினகரன்


கடும் வரட்சியால் 7 இலட்சத்து 81 ஆயிரத்து 952 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் கூடுதல் பாதிப்பு

நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு அடை மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. எனினும், அநேகமான பகுதிகளைச் சேர்ந்த 7இலட்சத்து 81ஆயிரத்து 952பேர் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் பதிவாகியுள்ளது. 

இதனடிப்படையில், யாழ். மாவட்டத்திலேயே ஆகக்கூடுதலாக 76ஆயிரத்து 673பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பட்டியலிட்டுள்ளது.  

வட மாகாணத்தைச் சேர்ந்த 24இலட்சத்து 5ஆயிரத்து 890பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மன்னார் மாவட்டத்தில் 66ஆயிரத்து 115பேரும் கிளிநொச்சியில் 42ஆயிரத்து 370பேரும் முல்லைத்தீவில் 61ஆயிரத்து 154பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, வானிலை அவதான நிலையம் நாட்டின் கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வட மாகாணங்களில் அடை மழைபெய்யுமென அறிவித்துள்ளது. சில இடங்களில் 75மில்லி மீற்றரிலும் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மழைபெய்யும் காலப்பகுதியில் காற்று மற்றும் மின்னல் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்ெகாள்ளப்பட்டுள்ளனர். 

இதேவேளை, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசத்திலும் அடைமழை பெய்யுமென்றும் இதன்போது வீசும் காற்று தென்மேற்கு நோக்கி மணித்தியாலத்துக்கு 30தொடக்கம் 40கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடல் பிரதேசமும் புத்தளத்திலிருந்து மன்னாரூடாக காங்கேசந்துறையூடான கடற்பிரதேசமும் கொந்தளிப்பாக காணப்படுமென்றும் இதன்போது வீசும் காற்று மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அடைமழை பெய்யும் சந்தர்ப்பத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்று மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...