காலமாற்றத்துக்கு ஏற்ற விட்டுக்கொடுப்பே அவசியம் | தினகரன்


காலமாற்றத்துக்கு ஏற்ற விட்டுக்கொடுப்பே அவசியம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அலரி மாளிகையில் பியகம, களனி தொகுதிகளின் தனது பழைய கட்சி ஆதரவாளர்கள் சிலருடன் உரையாடிய சந்தர்ப்பத்தில் முக்கியமானதொரு தகவலை வெளிப்படுத்தியிருக்கின்றார். தனது வாழ்க்கையில் 70 வயது வரை இலங்கை அரசியல் அரங்கில் பல்வேறு பதவிகளையும் வகித்த தனக்கு அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதில் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார். கட்சியின் தலைவர்கள் அடுத்தடுத்து உயிர்த்தியாகம் செய்த சந்தர்ப்பங்களில் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று நெருக்கடியான காலகட்டங்களில் கட்சியை பாதுகாப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஐக்கிய தேசிய கட்சி நெருக்கடிகளை சந்தித்த பல்வேறு சந்தர்ப்பங்களிலும், கஷ்டமான ஒவ்வொரு சூழ்நிலையிலும் கட்சியை பாதுகாத்த ஒரே தலைவர் என்ற பெருமைக்குரியவராகவே ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். இதனை எவராலும் மறுத்துரைக்க முடியாது. அவர் ஒரு ஜனநாயக அரசியல் ஆளுமைமிக்க தலைவராகவே எப்போதும் மிளிர்கின்றார். அவரது வழிநடத்தலில் கட்சி எந்தளவுக்கு பாதுகாக்கப்பட்டதோ அதேபோன்று தேசத்தை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதிலும் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருப்பதையும் மறுக்கவியலாது. கட்சி நெருக்கடிகளை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் அதனை பாதுகாத்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொள்ள முடியுமாக இருந்தால் அதற்கு முன்வருவதாகவும் முடியாது போனால் வெளியேறிப் போகப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

அன்னாரது இக்கூற்று அவரது மனவேதனையை வெளிப்படுத்துவதாகவே நோக்க முடிகிறது. நாட்டின் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு பார்க்கும் போது இந்த அரசியல் ஆளுமையை இழக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இல்லை என்பதை அரசியல் அவதானிகள் பலரும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அவரை யாரும் வெளியேறுமாறு கேட்கவில்லை. இன்றைய காலத்தின் தேவை கருதி இளைய தலைமுறைக்கு விட்டுக்கொடுத்துச் செயற்பட முன்வருமாறுதான் கேட்கின்றனர். எதிர்வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில் எதிரணியுடன் நேருக்கு நேர் மோதக்கூடிய ஓர் இளம் தலைமைக்கு வாய்ப்பளித்து கட்சியை மேலும் வலிமைபெறச் செய்யுமாறு தான் கோருகின்றனர். கட்சியிலிருந்து அவரை ஒதுங்கிப் போகுமாறு கேட்டதாக தெரியவில்லை.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பல தலைவர்களை இழந்தனர். பயங்கரவாத காலகட்டத்தில் பலர் கொல்லப்பட்டனர். கட்சி பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆனால் அத்தனை நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டு கட்சியை பலம்கொண்டதாக கட்டியெழுப்புவதில் அவர் வெற்றி கண்டவராவார். அவரது அந்த ஆளுமை துளியளவும் குறைத்து மதிப்பிட முடியாததாகும். எந்தவொரு காலகட்டத்திலும் நாடு மறக்க முடியாத தலைவராகவே ரணில் போற்றப்படத்தக்கவராவார். கட்சியில் எவரும் அவரை குறைத்து மதிப்பிடவில்லை. அவரது ஆளுமையை கட்சி முழுமையாக நம்புகின்றது. ஆனால் காலத்தின் தேவை கருதி ஓர் இளம் தலைமைக்கு விட்டுக்கொடுக்குமாறு தான் கேட்கின்றனர். கட்சியிலிருந்து வெளியேறச் சொல்லவுமில்லை, பதவி விலகக் கோரவுமில்லை. காலமாற்றத்துக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செயற்படுமாறு தான் கேட்கின்றார்கள்.

அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் மதிக்கப்படக்கூடிய ஒரு தலைவராகவும், நாடு மறக்க முடியாத தலைவராகவும் ரணில் காணப்படுகின்றார். அவரது ஜனநாயக அரசியல் ஆளுமை விதந்து பாராட்டப்படக்கூடியதொன்றாகும். சர்வதேச மட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட ஆளுமை கொண்ட அரசியல் தலைவர். எவராலும் நிராகரிக்கமுடியாத ஓர் அரசியல் மதியூகியாக உலகம் அவரைப் பார்க்கின்றது.

ஆனால் இன்றைய காலகட்டத்தின் தேவை கருதி ஒரு இளம் தலைமைக்கு வழிவிட வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. ஒரு விட்டுக்கொடுப்பைச் செய்யுமாறு தான் இளைய தலைமுறை கேட்கின்றது. பிரதமரின் 70 வருட வாழ்க்கைப் பயணத்தில் யாரும் குறைகண்டதாகவே காணமுடியவில்லை. கட்சிக்குள்கூட எந்த எதிர்ப்பும் கிடையாது. கட்சியை எப்படி அவர் கட்டிக்காத்தார் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துவைத்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியை அழிந்துவிடாமல் பலம் மிக்கதாக கட்டியெழுப்பிய பெருமையை கட்சி அவருக்கு வழங்கி இருக்கின்றது. இன்றளவும் கூட தலைமைக்கு கட்டுப்பட்டே நடந்துகொள்வதை அவதானிக்க முடிகிறது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான சக்திகள் எவரும் இல்லை. அவரை கட்சி முழுமையாக நம்புகின்றது. அங்கு அவருக்கு எதிரிகள் என யாரையும் சுட்டிக்காட்ட முடியாது என அரசியல் அவதானிகள் பலரும் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்து வருகின்றனர். கட்சிக்குக் கிடைத்த பெரும் சொத்தாகவே அவர் மதிக்கப்படுகின்றார். அவரை இழக்க கட்சி தயாராக இல்லை என்பதை பலரும் பல சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வந்துள்ளனர்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பில் புதியவர் ஒருவர், இளம் தலைவர் களமிறக்கப்படுவதன் மூலம் எதிரியை நேருக்குநேர் மோதக்கூடியதான பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என இளைய தலைமுறை நம்புகின்றது. அதற்கு தலைமைத்துவம் விட்டுக்கொடுப்புடன் வழிவிட வேண்டுமென்றே கோரப்படுகின்றது. ரணில் வெளியேற வேண்டுமென்று யாருமே கேட்கவில்லை. அவர் இருந்துதான் இந்த விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டுமென்றுதான் கோருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே ரணில் விக்கிரமசிங்க சற்று ஆறுதலாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவர் அரசியலிலிருந்து வெளியேறுவதை கட்சியில் எவரும் விரும்பமாட்டார்கள். ஜனநாயகத்தையும், கட்சியையும் பாதுகாத்த அவர் தொடர்ந்தும் கட்சியுடன் சங்கமித்தே இருக்கவேண்டும் என்று தான் கட்சியின் முழுமையான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் அவரது விட்டுக்கொடுப்பு: ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கட்சியை தொடர்ந்து பாதுகாக்கவும் அவரது தலைமைத்துவத்தை பாதுகாக்கவும் சரியான தீர்வாக அமையும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...