எழுக தமிழுக்கு ரெலோ ஆதரவு | தினகரன்


எழுக தமிழுக்கு ரெலோ ஆதரவு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பு தனது ஆதரவை தெரிவித்தது.

எழுக தமிழ் பேரணிக்கு கூட்டமைப்பு ஆதரவை வழங்குவதா இல்லையான என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரையில் அறிவிக்கப்பட்டாத நிலையில் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பு தான் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இப் பேரணிக்கான ஆதரவை தெரிவித்து ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிக்காந்தா அறிக்கையொன்றையும் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வீழ்ந்து கிடக்கும் எம் இனத்தின் எழுச்சியையும் மீட்சியையும் மறுமலர்ச்சியையும் இலக்காகக் கொண்டு, மீண்டும் வந்திருக்கும் 'எழுக தமிழ்' நிகழ்ச்சி, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்த நிலையில், விடுதலையை நேசிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களையும் ஓரணியில் திரட்டி, உலகறிய எம் தேசிய அபிலாசைகளை உரத்துக் கூறும் உன்னத நாளாக எதிர்வரும் திங்கட்கிழமையைப் பிரகடனப்படுத்தி நிற்கின்றது.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...