குருநாகல் தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயர் | தினகரன்


குருநாகல் தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயர்

வெற்றிடமான குருநாகல் மாவட்ட தேசியப் பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.  குருநாகலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் மறைவையடுத்து வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எச்.எம்.டி.பி. ஹேரத்தை நியமிக்க குருநாகலை மாவட்ட தேர்வுக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், குறித்த நியமனம் சட்டரீதியானது இல்லை என சாந்த பண்டார சுட்டிக்காட்டியிருந்தார். 

தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருந்த சாந்த பண்டார, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் நோக்குடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாவும் செய்திருந்தார். 

என்றாலும், எச்.எம்.டி.பி. ஹேரத்தின் பெயர்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்கின் பிரகாரம் இரண்டாம் இடத்தில் உள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதால் வெற்றிடமான குருநாகல் மாவட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மீண்டும் சாந்த பண்டாரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நேற்றுமுன்தினம் அனுப்பி வைத்துள்ளார்.  

இதேவேளை, மறைந்த மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்துக்கு 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சந்திரசிறி கஜதீரவுக்கு அடுத்ததாக விருப்ப வாக்கைப் பெற்றிருந்த மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.  

அடுத்த பாராளுமன்ற அமர்வில் சாந்த பண்டாரவும், மனோஜ் சிறிசேனவும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்;.  


Add new comment

Or log in with...