பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை மாற்றியமைப்போம் | தினகரன்


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தலைவிதியை மாற்றியமைப்போம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகவுள்ளது. அவர்களின் பிள்ளைகள் கொழும்பில் அடிமைகளாகவே தொழில் புரிகின்றனர். தொழிலாளர்களின சமூக வாழ்க்கையை கட்டியெழுப்பி உயர்ந்த வேதனத்தை பெறும் வகையில் அவர்களது தலைவிதியை மாற்றியமைப்போம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டை நாசமாக்கியுள்ளவர்களுக்கு மீண்டும் நாட்டையாள இடமளிக்க வேண்டுமா?. தனியொரு நபரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. கூட்டு பொறுப்பின் மூலம் அதுசாத்தியமாகும். இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் வேறு கட்டியெழுப்புவதற்கு நாடுகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 71வருடங்களாக நாட்டை ஆண்ட இரண்டு கட்சிகளும் நாட்டை நாசமாக்கிவிட்டன. தொடர்ந்து இந்த நாட்டை நாசமாக்க இடமளிக்க வேண்டுமா?. நாட்டை பொறுப்பேற்றுக்கொள்ள நாங்கள் தயாராகவுள்ளோம். இந்த நாடு வளமானதும், வளர்ச்சியடையக் கூடியதுமான நாடாகும்.

தனிஒரு நபரால் நாட்டை முன்னேற்ற முடியாது. இது கூட்டு செயற்பாட்டின் மூலம் தான் முடியும். கூட்டு பொறுப்பின் பிரகாரம்தான் உலகில் அனைத்து நாடுகளும் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஊழல் - மோசடியற்ற தூய்மையான அரசியல்வாதிகளும், தொழிலாளர் வர்க்கமும் நாட்டை கட்டியெழுப்ப அவசியமாகும். தோட்டத் தொழிலாளர்களின் சமூக வாழ்க்கை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது. மந்தபோஷனத்தால், இரத்தச் சோகையதல், நிறைகுறைந்த பிள்ளைகள் அதிகமாக காணப்படுகின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களே தோட்டத் தொழிலாளர்களாகும். அவர்களின் உழைப்பு இன்று நாட்டின் அன்னியச் செலவாணியில் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையை கொண்டுசெல்ல போதுமான ஊதியம் இல்லை.

அதேபோன்று தொழிலாளர்களின் பிள்ளைகள் கொழும்பில் அடிமைகளாக தொழில் புரிகின்றனர். அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டும். நிச்சியமாக நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் அவர்களின் வாழ்நிலையை உயர்த்தி இந்நாட்டின் ஏனையவர்களுக்கு சமாந்தர பிரசைகளாகவும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கின்ற மக்களாகவும் அவர்களது தலையெழுத்தை மாற்றியமைப்போம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...