ஏமாற்றப்படும் சிறுபான்மை சமூகம்! | தினகரன்


ஏமாற்றப்படும் சிறுபான்மை சமூகம்!

தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இம்மாத இறுதியில் வேட்புமனு கோருவதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விடுக்கவிருக்கின்றார். ஏற்கனவே 18 கட்சிகள் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டன. இன்னும் பலர் களத்தில் இறங்கக் கூடுமென எதிர்பார்க்க முடியும். ஆனால் எத்தனை பேர் தேர்தலில் குதித்தாலும் போட்டி மும்முனையாகத்தான் இருக்கப் போகின்றது.

சிறுபான்மைச் சமூகங்களின் நிலைமை குறித்தே இங்கு நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. சிறுபான்மைக் கட்சிகளும், சிறிய கட்சிகளும் விடுக்கின்ற அறிக்கைகளைப் பார்க்கின்ற போது அவர்களது உள்நோக்கம் நன்கு தெரிகிறது. அக்கட்சிகளின் இலக்கு என்னவென்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

சிறுபான்மை மக்களின் தலைவர்கள் தேர்தல் காலங்களில் வீரவசனம் பேசி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் அமைதியாகி விடுவர். சில கட்சிகள் ஆட்சிக்கு வரும் அரசுடன் இணைந்து பதவிகளைப் பெற்று அங்கு அடைக்கலமாகி விடுவதுண்டு. அதன் பின்னர் தமது மக்களுக்காக அவர்களால் வாய் திறக்க முடிவதில்லை. இவ்வாறான கருத்தொன்றை ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்திருக்கின்றார். அவரது கூற்று நியாயமானதொன்றாகவே தெரிகிறது. அரசுக்குள் அடைக்கலமாகி விட்டதன் பின்னர் தாம் சார்ந்த சமூகங்களுக்கு பிரச்சினை வரும்போது அவர்கள் அமைதியாகி விடும் நிலைதான் ஏற்பட்டு விடுகின்றது.

'அரசாங்கம் தவறிழைத்தாலும் நாங்கள் அரசுடன்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்காக சேவை செய்ய முடியும் என்று அத்தலைவர்கள் கூறுகின்றனர்.

'அவர்களது சமூகம் பாதிக்கப்படுகின்ற போது, பாராளுமன்றத்தில் அவர்களுக்காக எம்மைப் பேசுமாறு கோருகின்றனர். இவர்களைத்தான் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமது தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன' என்று ஹந்துநெத்தி சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயக அரசியலில் இதனையே நாம் தொடர்ந்தும் காணக் கூடியதாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலநேரம் வந்து விட்டது. இந்த சிறுபான்மைத் தலைவர்கள் மக்களிடம் போய் என்ன கேட்கப் போகின்றார்கள்? மக்களிடம் போய் சமூகத்தின் இருப்புக்காகவும், உரிமைக்காகவுமே நாம் பேசுகின்றோம் எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் என்ன நடக்கின்றது? எந்தப் பக்கமிருந்து தமக்கு கூடுதல் இலாபம் கிட்டும் என்றுதான் பலர் பார்ப்பதுண்டு. எத்தனை முழு அமைச்சு, அரை அமைச்சு என்ற ஆதாயக் கணக்கையே பார்க்கின்றனர். கடைசியில் எவர் வெற்றி பெற்றாலும் அவர் பக்கம் இணைந்து கொள்கின்றனர். ஒன்றாக கூடியிருந்தவர்களைக் கூட மறந்து விடுகின்றனர். இதுவே அவர்களது அரசியலாகி விட்டது.

கடந்த காலத்தை மறந்து பதவிகளுக்காக பேரம் பேசும் அரசியல் கலாசாரம்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. மக்களும் இவர்களைத்தான் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இறுதியில் வழமை போன்று ஏமாற்றப்படுவது அப்பாவி மக்கள்தான். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பலாபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டு விடுகின்றது.

இந்த மனநிலையிலிருந்து மக்கள் மாற வேண்டும். கட்சிகளையும் தலைவர்களையும் எமது பிடிக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய ஆளுமையை நாம் கைகளில் எடுக்க வேண்டும். "நீங்கள் சொன்னபடி இதுவரை காலமும கேட்டோம். இந்தத் தடவை நாம் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். முடியாமல் போனால் எங்கள் வழியில் எம்மை விட்டு விடுங்கள்" என்று அழுத்தமாகக் கூற வேண்டும். இன்னுமொரு தடவை அவர்களிடம் சமூகம் ஏமாற முடியாது. சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதற்கு இடமளிக்க முடியாது.

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்வதில் காலம் கடத்தப்படுகின்றது. வாக்குறுதிகள் தாராளமாக அள்ளிக் கொட்டப்படுகின்றன. அவற்றுக்கு காலக்கெடு கூட விதிக்கின்றனர். ஆனால் இறுதியில் நடந்தது எதுவுமில்லை. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தொடர்ந்து வீதியில் விடப்பட்ட சமூகங்களாகவே காணப்படுகின்றன. எந்த அரசு அதிகாரத்துக்கு வந்தாலும் சிறுபான்மைச் சமூகங்களை விலைக்கு வாங்கும் பலம் அவர்களுக்கு இருக்கின்றது. அவர்களின் முகவர்களாகத்தான் சமூகத்தின் தலைவர்கள் காணப்படுகின்றனர்.

இந்தத் தலைவர்களை இனிமேல் வழி நடத்தும் பொறுப்பை சமூகம் கையிலெடுக்க வேண்டும். சிறுபான்மைச் சமூகங்கள் ஒன்றுபட வேண்டும். தாம் சார்ந்த சமூகத் தலைவர்களுடன் பேச வேண்டும்."தலைவர்கள் எடுப்பதல்ல முடிவு, நாம் சொல்வதைச் செய்ய முடிந்தால் இணைந்து செயற்படுவோம். இன்றேல் நாம் வேறு வழியை தேடிக் கொள்வோம்" என்ற அழுத்தங்களை பிரயோகிக்க முன்வர வேண்டும். சிறுபான்மைச் சமூகம் இன்னுமொரு ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்க முடியாது. கஷ்டப்பட முடியாது. நியாயத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சரியான வழியை தேடிக் கொள்வதே சிறப்பானது.

நாடு சுதந்திரமடைந்து 71 வருடங்களை நிறைவு செய்து விட்ட போதிலும் இன்றும் கூட ஏற்றத்தாழ்வுதான் காணப்படுகின்றது. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு கரணமாக சமூகங்கள் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இடையில் இன, மத, மொழி பேதங்களை தூண்டி மக்களை பிளவுபடுத்தி அதில் அரசியல் குளிர்காயும் தரப்புக்கு இனிமேலும் வாய்ப்பளிக்கக் கூடாது. வெறுப்புப் பேச்சுகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது.அதனை தடுப்பதற்குரிய ஆயுதத்தை சிறுபான்மைச் சமூகம் கைகளில் எடுக்க வேண்டும்.

புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிப்பதற்கு அனைத்து இன மக்களும் ஒன்றுபட வேண்டும். கட்சி அரசியலுக்கப்பால் நின்று அந்த புதிய அரசியல் கலசாரம் உருவாக்கப்பட வேண்டும். அந்தக் புதிய கலாசாரத்தின் கோட்பாடுகளுக்கமைய அரசியல் கட்சிகள் செயற்படக் கூடிய விதத்தில் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

எமது எதிர்காலச் சந்ததியினருக்காக இந்தப் புதிய அரசியல் கலாசாரம் மிக அவசியமானது என்பதை நாம் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும்.


Add new comment

Or log in with...