கர்பலா நகர புனித தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி | தினகரன்


கர்பலா நகர புனித தலத்தில் கூட்ட நெரிசல்: 31 பேர் பலி

ஈராக்கின் கர்பலா நகரில் ஷியாக்களின் புனித நாளான ஆஷுராவில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிகழ்வில் மேலும் 100 பேர் காயமடைந்திருக்கும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மத வழிபாடுகளின்போது ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் விழுந்ததை அடுத்தே இந்த நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

கி.பி. 680இல் இறைத்தூதர் முஹமது நபியின் பேரரான இமாம் ஹுஸை போரில் உயிர்த்தியாகம் செய்தததை ஞாபகமூட்டும் வகையில் ஆஷுரா அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆஷுரா தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான ஷியா முஸ்லிம்கள் கர்பலா நகரில் ஒன்றுகூடுகின்றனர். இது இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான 10 ஆம் நாள் இடம்பெறுகிறது. ஹுஸைனின் தியாகத்தை மீண்டும் காண்பிப்பதான மத வழிபாடுகள் காலையில் இடம்பெறுகின்றன.

இந்த விபத்திலிருந்து தப்பித்த யாத்திரிகர் ஒருவர் கூறும்போது, “ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வேகமாகச் செல்லும்போது திடீரென ஒருவர் மீது ஒருவர் மோதி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கீழே விழ ஆரம்பித்தனர். எங்களால் அனைவரையும் மீட்க முடியவில்லை. சிலரை மட்டுமே மீட்டோம். அப்பகுதி முழுவதும் ரத்தமயமாகிவிட்டது” என்றார்.

நடைமேடை விழுந்ததை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தை அடுத்தே இந்த நெரிசல் ஏற்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

2004 இல் ஆஷுரா தினத்தில் பக்தாத் மற்றும் கர்பலா புனிதத் தலத்தில் இடம்பெற்ற தொடர்கு குண்டு தாக்குதல்களில் 140க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இங்கு இடம்பெற்ற கூட்ட நெரிசலில் 950 பேர் உயிரிழந்தனர்.


Add new comment

Or log in with...