பிபா தகுதிகாண் போட்டி: வடகொரிய 1- 0 என இலங்கையை வீழ்த்தியது | தினகரன்


பிபா தகுதிகாண் போட்டி: வடகொரிய 1- 0 என இலங்கையை வீழ்த்தியது

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் சுற்றில் இலங்கை அணியின் கடுமையான போட்டிக்கு மத்தியில் வட கொரிய வீரர்கள் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் நேற்றுமுன்தினம் (10) இடம்பெற்ற வட கொரியாவுக்கு எதிரான இந்த முதல் கட்டப் போட்டியின் ஆரம்பம் முதல் இலங்கை வீரர்கள் பலம் மிக்க வட கொரிய வீரர்களுடன் சரி சமமாக கடுமையாக மோதினர்.

கடந்த வாரம் இடம்பெற்ற தகுதிதாண் இரண்டாம் சுற்றின் தமது முதல் ஆட்டத்தில் லெபனான் அணியை 2-0 என வட கொரியா வீழ்த்தியிருந்தது. கடந்த வாரம் குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் இடம்பெற்ற துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை களம் கண்டிருந்தது.

கடந்த போட்டிக்கான முதல் பதினொருவரில் ஆடிய ஷரித்த ரத்னாயக்க, சுந்தராஜ் நிரேஷ் மற்றும் மொஹமட் ஆகிப் ஆகிய வீரர்கள் இப் போட்டிக்கான இலங்கை முதல் பதினொருவரில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக மனரம் பெரேரா, அமான் பைசர் மற்றும் திலிப் பீரிஸ் ஆகியோர் களம் கண்டனர்.

ஆட்டத்தின் 14 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தை பெற்ற வட கொரிய அணித் தலைவர் ஜொங் இல் ஜான் கோல் நோக்கி வேகமாக உதைக்க, இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா பாய்ந்து பந்தை வெளியே தட்டினார்.

அடுத்த 6 நிமிடங்களில் இலங்கை அணியின் கோலுக்கு அண்மையில் பின்கள வீரர் மனரம் பெரேரா முறையற்ற விதத்தில் எதிரணி வீரரை வீழ்த்த, கொரிய வீரர்களுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது உள்ளனுப்பிய பந்தை இல் ஜான் ஹெடர் செய்ய, தடுப்பில் பட்டு பந்து வெளியேற்றப்பட்டது.

போட்டியின் 25 நிமிடங்கள் கடந்த நிலையில் இலங்கை வீரர்களிடையே இடம்பெற்ற சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஹர்ஷ பெர்னாண்டோ வழங்கிய சிறந்த பந்துப் பரிமாற்றத்தில் கிடைத்த சிறந்த வாய்ப்பை இலங்கை அணித் தலைவர் கவிந்து இஷான் கோலாக்கத் தவறினார். இதுவே, இலங்கைக்கு முதல் பாதியில் கிடைத்த கோலுக்கான சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

மீண்டும் 30ஆவது நிமிடத்தில் கொரிய வீரர்கள் மத்திய களத்தில் இருந்து பெற்ற மிக வேகமான உதையையும் சுஜான் பெரேரா பாய்ந்து வெளியே தட்டி விட்டார்.

அதன் பின்னரும் கொரிய வீரர்கள் ஏற்படுத்திய கோலுக்கான வாய்ப்புகள் பலவற்றை சுஜான் பெரேரா, தனது அனுபவத்தைக் கொண்டு சாதுர்யமாகத் தடுத்தார்.

இலங்கை பின்கள வீரர்களும் கொரிய வீரர்களின் அனைத்து முயற்சிகளையும் தடுக்க, முதல் பாதி கோல்கள் ஏதும் இன்றி நிறைவுபெற்றது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் இலங்கை தரப்பின் கோலுக்கு அண்மையில் இருந்து இல் ஜான் கோல் நோக்கி எடுத்த முயற்சியின்போது பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

அடுத்த நிமிடங்களில் திலிப் பீரிஸ் எதிரணி கோல் காப்பாளரிடமிருந்து தட்டி கோலுக்கான முயற்சியை எடுக்க முன்னர் கொரிய பின்கள வீரர் பந்தை எடுத்து திசை மாற்றினார்.

போட்டியின் 67ஆவது நிமிடத்தில் இலங்கை அணியின் கோல் எல்லையில் இடது புறத்தில் இருந்து ஷாங் ஹொ உயர்த்தி உள்ளனுப்பிய பந்தை, கோலுக்கு அருகில் இருந்த கொரிய வீரர் ஜாங் சுக் சோல், கம்பங்களுக்குள் ஹெடர் செய்து போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

மீண்டும் 73ஆவது நிமிடத்தில் கொரிய வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை வாங் சோங் கோலுக்கு ஹெடர் செய்ய, அதனையும் சுஜான் தடுத்தார்.

அடுத்த 3 நிமிடங்களில் கொரிய வீரர் தமது கோல் காப்பாளருக்கு வழங்கிய பந்து, அவரிடம் செல்வதற்குள் மதுஷான் டி சில்வா அதனை பறிக்க முற்பட்டார். எனினும், இறுதித் தருவாயில் வேகமாக செயற்பட்ட கோல் காப்பாளர் டே சோங் பந்தைப் பற்றிக்கொண்டார்.

போட்டியின் இறுதி பகுதிகளில் இலங்கை அணி அடுத்தடுத்து மாற்று வீரர்களை மைதானத்திற்குள் உள்வாங்க, இலங்கை வீரர்களின் வேகம் அதிகரித்தது. இதன் பயனாக, கோலுக்கான முயற்சிகளை இலங்கை வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.

எனினும், போட்டி நிறைவுவரை இரு அணி வீரர்களினதும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட, போட்டியில் வட கொரிய அணி 1 – 0 என வெற்றி பெற்றது.

இது வட கொரிய அணிக்கு உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்றில் பெறப்பட்ட தொடர்ச்சியான இரண்டாம் வெற்றியாகும். இதேவேளை, இலங்கை அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாகும்.


Add new comment

Or log in with...