Friday, March 29, 2024
Home » ஆப்கான் அணியை 198 ஓட்டங்களுக்கு சுருட்டி இலங்கை அணி ஸ்திர நிலையில்

ஆப்கான் அணியை 198 ஓட்டங்களுக்கு சுருட்டி இலங்கை அணி ஸ்திர நிலையில்

by gayan
February 3, 2024 8:48 am 0 comment

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கும் இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான நிலையை எட்டியுள்ளது.

கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நேற்று (02) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணித்த ஆப்கானிஸ்தான் அணியை 198 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது.

இதில் இலங்கையின் 18 ஆவது டெஸ்ட் அணித் தலைவராக தனஞ்சய டி சில்வா களமிறங்கியதோடு, வலது கை வேகப்பந்து வீச்சாளர் சாமிக்க குணசேகர தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கான் அணி ஓட்டங்கள் பெறும் முன்னரே முதல் விக்கெட்டை வீழ்த்துவதற்கு அசித்த பெர்னாண்டோவால் முடிந்தது. எனினும் முதல் வரிசையில் வந்த ரஹ்மத் ஷா சிறப்பாக ஆடினார்.

ஆப்கான் அணி ஒரு கட்டத்தில் நிதானமாக ஆடிய ஓட்டங்களை அதிகரித்தபோதும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 62.4 ஓவர்களில் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. ரஹ்மத் ஷா மாத்திரம் 139 பந்துகளில் 13 பெளண்டரிகளுடன் 91 ஓட்டங்களை பெற்றார்.

இதில் தேனீர் இடைவெளிக்குப் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த ஆப்கான் அணியின் கடைசி ஐந்து விக்கெட்டுகளும் 29 ஓட்டங்களுக்கு சரிந்தன. ஒரு கட்டத்தில் ஆப்கான் அணி 109 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வலுவான நிலையில் இருந்தது.

மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். சுழற்பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனினும் தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய 24 வயதான சாமிக்க குணசேகர விக்கெட் வீழ்த்தத் தவறினார். 9 ஓவர்கள் பந்துவீசிய அவர் 50 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று தேநீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி ஆட்டநேர முடிவின்போது —14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி —80 ஓட்டங்களை பெற்றது. நிஷான் மதுஷ்க –36- ஓட்டங்களுடனும் — திமுத் கருணாரத்ன —42 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று போட்டியில் இரண்டாவது நாளாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT