சாரதிகளை விலங்கிட்டு அழைத்துச் செல்ல பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது யார்? | தினகரன்


சாரதிகளை விலங்கிட்டு அழைத்துச் செல்ல பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது யார்?

காரைதீவு பிரதேச சபையில் கேள்வி

மதுபோதையில்  வரும் வாகன சாரதிகளைப் பிடித்தால் சட்டப்படி நீதிமன்றில் ஒப்படைத்து தண்டனைபெற்றுக்கொடுக்கலாம் ஆனால் அவர்களுக்கு கைவிலங்கிட்டு இழுத்துச்செல்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது யார்? என காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் த.மோகனதாஸ்  சபை அமர்வில் கேள்வியெழுப்பினார். 

மேற்படி அமர்வு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில்  திங்கட்கிழமை (9) சபாமண்டபத்தில் நடைபெற்றது. அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

 காரைதீவு உள்வீதிகளில் பலர் இவ்விதம் கைவிலங்கிட்டு இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். மனித உரிமைகளை மீறும் பொலிஸாருக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஊருக்குள் இருக்கின்ற ஆலயத்திற்கு, பள்ளிவாசலுக்கு வைத்தியசாலைகளுக்கு அவசரத்திற்கு செல்ல முடியாமலுள்ளது. திடீரென ஹெல்மட் கேட்டு தண்டம் அடிக்கிறார்கள். இதனால் மக்கள் ஆலயங்களுக்கு சுதந்திரமாகச் செல்லமுடியாதுள்ளனர்.  

தண்டம் விதிக்க உரியசட்டமுறைப்படி அணுகவேண்டும். அதைவிடுத்து கொலைக்குற்றம் செய்தவனைப்போல்  கைவிலங்கிட்டு இழுத்துச்செல்வதை யாரும் அனுமதிக்கமுடியாது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றார்.

இது தொடர்பில் பேசிய மற்றுமொரு சுயேச்சைக்குழு உறுப்பினர் இ.மோகன் கூறியதாவது: 

வாழ்க்கையில் மதுவை நினைத்துக்கூடப் பார்க்காதவர்களுக்கு மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியதாகக்குற்றம் சுமத்தி பல்லாயிரம் ரூபாவை தண்டமாகக் கட்டவைக்கப்பட்டுள்ள சம்பவம் அண்மையில் இருவருக்கு நடந்துள்ளது. 

ஏலவே மதுபோதையில் வந்த ஒருவர் ஊதிய பலூனை குறித்த மதுவைத்தொடாதவரிடம் கொடுத்து ஊதவைத்து இக்குற்றத்தை வலுக்கட்டாயப்படுத்தி ஏற்கவைத்து வருகின்றார்கள். அண்மையில் காரைதீவில் ஒருவர் இவ்வாறு 42ஆயிரம் ரூபா செலுத்தியுள்ளார் என்றார். உதவித்தவிசாளர் எம்.ஏ.ஜாகீர் உரையாற்றுகையில்: எனது வீட்டிற்கு அருகில் இயலாத ஒருவர் சலூனுக்குச்சென்று முடிவெட்டிவிட்டு கஸ்ட்டப்பட்டு எனது உறவினரொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிஒரு நிமிடம்கூட இல்லை. அங்குவந்த பொலிஸார் அவரைப்பிடித்து 1000ரூபா தண்டம் கட்டவைத்துள்ளனர் என்றார். 

இறுதியாக தவிசாளர் கி.ஜெயசிறில் உரையாற்றுகையில்: 

காரைதீவிற்குள் போக்குவரத்துப் பொலிஸாரின் அட்டகாசம் தொடர்பாக  உறுப்பினர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சட்டம் இருக்கிறது எனினும் பொலிஸாரும் மனிதாபிமானத்துடன் சிலவேளைகளில் செயற்படவேண்டும். இதனை நான் சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்து தீர்வு காணலாமென நம்புகிறேன் என்றார். 

(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...