ஒக்டோபர் 31க்குள் பெரும்போக விதைப்பு நிறைவுற வேண்டும் | தினகரன்


ஒக்டோபர் 31க்குள் பெரும்போக விதைப்பு நிறைவுற வேண்டும்

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்கா

அம்பாறை மாவட்டத்தில் 2019/2020ம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகள் ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பித்து 31ம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டுமென அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா தெரிவித்தார். 

அக்கரைப்பற்று பிரதேச கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பிரிவுகளில் பெரும் போக நெற்செய்கைக்கான கூட்டம்  நேற்றுமுன்தினம் (10) அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

குறைந்த நீரினைக் கொண்டு பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. 

அம்பாறை மாவட்ட விவசாயிகள் நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றார்கள். 16மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்கை பண்ணப்படுகின்ற போதிலும் அம்பாறை மாவட்டம் 25வீதமான நெல் உற்பத்தியை ஈட்டி தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கி வருகின்றது. 

குறைந்த நீரைப் பயன்படுத்தி இந்த இலக்கை நாம் அடைந்துள்ளோம். இது பாராட்டக் கூடிய விடயமாகும். இதே இலக்கை  பெரும் போகத்திலும் நாம் அடைய வேண்டும். தற்போது சேனநாயக்கா சமுத்திரத்தில் 21,760ஏக்கர்  அடி நீர் மட்டுமே காணப்படுகின்றது. இந்த நீரைக் கொண்டு பெரும் போகத்திலும் சாதனைகள் படைப்பதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

பெரும் போக நெற்செய்கை,மழை நீரைக் கொண்டே மேற்கொள்ள வேண்டிய கட்டாய தேவை காணப்படுகின்றதென்றார். 

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுஜித கமகே, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ், பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸான் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

(ஒலுவில் விசேட, அட்டாளைச்சேனை மத்திய நிருபர்கள்) 

 


Add new comment

Or log in with...