பாகிஸ்தான் ஆக்கிரமித்த நிலத்தை மீளக்கைப்பற்றுவதே பா.ஜ.க இலக்கு! | தினகரன்


பாகிஸ்தான் ஆக்கிரமித்த நிலத்தை மீளக்கைப்பற்றுவதே பா.ஜ.க இலக்கு!

'பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதுதான் இந்திய மத்திய அரசின் அடுத்த இலக்கு' என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்போம்" என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், "பாகிஸ்தான் மற்றும் சீனா வசமிருக்கும் காஷ்மீர் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்போம்; இதற்காக உயிரையும் கொடுப்போம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எதிர்க் கட்சித் தலைவரான பிலாவல் பூட்டோ, "இம்ரான்கானின் பலவீனமான கொள்கைகளால் இப்போது பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.

"ஸ்ரீநகர் பற்றி பேசி வந்த பாகிஸ்தான், இனிமேல் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் தலைநகரான முசாஃபர்பாத் பற்றி சிந்திக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது" என்றார் அவர்.

இந்நிலையில் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலடியாக இந்திய தரப்பில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்- பால்டிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தானின் உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், "மத்திய அரசின் அடுத்த இலக்கு பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதிகளை இணைப்பதுதான். இது பா.ஜ.க அரசின் கொள்கை மட்டும் அல்ல. 1994-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு தீர்மானித்த விவகாரம்தான் இது" என்று கூறினார்.


Add new comment

Or log in with...