Thursday, March 28, 2024
Home » அரசியலில் களமிறங்கினார் நடிகர் விஜய்! கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றிக் கழகம்’

அரசியலில் களமிறங்கினார் நடிகர் விஜய்! கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றிக் கழகம்’

by gayan
February 3, 2024 7:55 am 0 comment

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதனை அதிகாரபூர்வமான நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற சொல்லை விஜய் பயன்படுத்தியது ஏன் என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் நேற்றைய தினம் பதில் கிடைத்து விட்டது. டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டு, அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மக்கள் இயக்கம் சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்தது. இந்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் முடிவு செய்தார். நிர்வாகிகளிடம் பேசிய விஜய் “பூத் கமிட்டிகளை வலுப்படுத்துங்கள்; எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருங்கள்; நமது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் காலம் வந்துவிட்டது” என்று கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜய்யின் கட்சி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.

விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாசாரம் மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால்தான் சாத்தியப்படுத்த முடியும். இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் தொடங்கும். இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு கூறியுள்ளார் விஜய்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT