எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தத் தவறிய கூட்டமைப்பு | தினகரன்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தத் தவறிய கூட்டமைப்பு

இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் இராசையாவுடன் சந்திப்பு

தமிழர்களின் நேர்மையை முஸ்லிம்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்

'அரசை எதிர்ப்பதால் எதுவும் விளையப் போவதில்லை' என்கிறார் இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். இராசையா.

கிழக்கின் காரைதீவைச் சேர்ந்த இராசையா நீர்ப்பாசனத் திணைக்களத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்றவராவார். தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ்க் கட்சிகளோடு இணைந்து பணியாற்றியவர் அவர்.

காரைதீவு பிரதேச சபையைின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். சமூக சேவையில் கொண்ட நாட்டத்தினால் காலஞ் சென்ற தனது தங்கையின் பெயரில் 'புஸ்பா கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை ஆரம்பித்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

சுவாமி விபுலானந்தருக்கு அவர் பிறந்த மண்ணில் உருவச் சிலை வைத்த பெருமை இராசையாவையே சாரும்.

கேள்வி: நீங்கள் உருவாக்கிய கட்சியைப் பற்றிக் கூறுங்கள்.

பதில்: இலங்கை பூராக 26000 பேர் இதன் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.இதன் தலைமைக் காரியாலயம் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இயங்கி வருகிறது. பரந்துபட்ட ரீதியில் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்ந்த போதிலும், அவர்கள் எல்லோருக்கும் பொருத்தமான அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஒரு சில பிரதேசங்களில் அவர்கள் சிறபான்மையினருக்குள் நசுக்கப்பட்ட சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றனர்.அவர்களது தேவைகளையும், அபிலாசைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டியுள்ளது.நாம் இப்போது எமது கட்சியை ஸ்திரப்படுத்தியுள்ளோம். அரசோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

கேள்வி: தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பற்றி உங்களின் கருத்து?

பதில்: அதன் செயற்பாட்டு வேகம் போதாதிருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அது தமிழ் மக்களுக்காகப் பயன்படுத்தவில்லை. இதை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றிருக்கலாம். இணக்கப்பாடான அரசியலை தமிழ்க் கூட்டமைப்பு நடத்தியதே தவிர, முஸ்லிம் சமூகம் பெற்ற பயனில் ஒரு 10 வீதத்தைத் தானும் தமிழ்ச் சமூகம் பெறவில்லை என்பதை வேதனையோடு கூறுகிறேன். இறுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் கூட கையறு நிலைக்கு வந்து விட்டது. இன்னமும் அவர் முஸ்லிம் தலைவர்களை நம்புகிறார். அது தமிழ்ச் சமூகத்திற்கு பாரிய பாதிப்பைத் தோற்றுவித்து வருகிறது.

கேள்வி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களது கட்சியின் ஆதரவு எப்படி இருக்கும்?

பதில்: நாம் எமது நிலையிலிருந்து விலக மாட்டோம். அதாவது தமிழ் மக்கள் சார்ந்த நலனே எமது இலக்கு. அந்த இலக்கை எட்டுவதற்கு எந்த வேட்பாளர் எமக்கு வெளிப்டைத் தன்மையோடு உறுதிமொழி தருகிறாரோ நாம் அவர்களுக்கு ஆதரவைத் தெரிவிப்போம். அதில் மாற்றமில்லை. விடயங்களை நாம் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். வேட்பாளர்கள் சிலரை சில கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆதலால் நாம் அவசரப்படக் கூடாது. இவ்விடயத்தில் அவசரப்படுவது புத்திசாலித்தனமாகாது.இற்றைவரை இது தொடர்பாக எவரும், எந்த வேட்பாளரும் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எம்மை அழைக்கவுமில்லை. இன்னும் காலம் கிடக்கிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கேள்வி: கடந்த ஏப்ரலில் முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் சிலரால் பயங்கரவாதச் செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன. கிறிஸ்தவ மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

பதில்: இது விரிவாக கூறப்பட வேண்டிய விடயம், ஆனாலும் சுருக்கிக் கொள்கிறேன். இது முற்றுமுழுதான பயங்கரவாதம்தான். இதற்கு ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகத்தின் மீது சுட்டு விரலை நீட்ட முடியாது.ஆனால் அந்தப் பயங்கரவாதத்தை எதிர்ப்போரும், அதன் செயற்பாடுகளை அரசுக்கு காட்டிக் கொடுத்தோரும் அதே சமூகத்திற்குள்ளே இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனினும் அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் பயங்கரவாதத்தை நிறுத்த முடியாமல் போய் விட்டது. அது துரதிர்ஷ்டம்.தமிழ் மக்கள் இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இம்மியளவேனும் இயங்கவில்லை. முஸ்லிம்களை இம்சிக்கவில்லை.தமிழர்களின் நேர்மையான மனப்பாங்கை இப்போதாவது முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினர். அவர்கள் ஏனைய சமூகங்களோடு விரோதித்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக இன்னொரு சிறுபான்மைச் சமூகமான தமிழ் மக்களோடு இணக்கப்பாட்டோடு, ஐக்கியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனை தமிழ் சமூகத்திற்கும் சொல்லி வைக்கிறேன். இரண்டு சிறுபான்மைச் சமூகமும் தங்களிடையே விரோதத்தை வளர விடக் கூடாது. அதனால் இரண்டு சமூகங்களும் பாதிப்படையும். ஒரு சமூகத்திற்கு உரித்தான வரப்பிரசாதங்களை அடுத்த சமூகம் அள்ளி எடுக்க நினைப்பது தார்மிகமாகாது.சில தலைவர்கள் அரசியல் சுயஇலாபத்திற்காக செயற்படுவதை விட்டு விட வேண்டும். சுயஇலாபத்திற்காக செயற்படுவது ஆரோக்கியமான சமூகப் பிணைப்பை ஏற்படுத்த உதவ மாட்டாது என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது.


Add new comment

Or log in with...