நிலத்தின் வளம் பேணுவதில் விவசாயிகள் உதாசீனம் | தினகரன்


நிலத்தின் வளம் பேணுவதில் விவசாயிகள் உதாசீனம்

விவசாயப் போதனாசிரியர் முபாறக் கூறும் ஆலோசனைகள்

'அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவம் அவசியம். நெல்வயல்களில் வைக்ேகாலை எரிப்பது விவசாயத்தை பாழ்படுத்தும் செயல்'

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யக் கூடிய பிரதான தொழில் துறையாக விவசாயம் விளங்குகிறது. இலங்கையில் மன்னராட்சிக் காலம் தொட்டு இன்றுவரை விவசாயச் செய்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. அதற்காக பல்வேறுபட்ட மானியங்களை விவசாயச் செய்கை மேற்கொள்வோருக்கு அரசுகள் வழங்கி வந்துள்ளன.

விவசாயச் செய்கையில் பாவிக்கப்படுகின்ற இரசாயனப் பதார்த்தங்களால் பல்வேறுபட்ட நோய்கள் மக்களுக்கு ஏற்படுகின்றன.எனவே இரசாயனப் பசளைகளுக்குப் பதிலாக சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கின்றது அரசாங்கம்.

இவ்வாறான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடுகின்ற போது, விவசாயிகள் இந்த நிலங்களையும், அதிலுள்ள வளங்களையும் நாசம் செய்கின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்ற செயற்பாட்டிலிருந்து இன்னுமே விடுபடுவதாயில்லை.

இப்போது வேளாண்மை அறுவடை செய்து முடிகின்ற காலப்பகுதியாகும். அடுத்த சிறுபோக விவசாயம் மேற்கொள்ள தயாரான நிலை இதுவாகும். விவசாய நிலங்களை உழுது, மீளவும் விவசாய நடவடிக்கை மேற்கொள்ள விவசாயிகள் தயாராகின்றனர்.ஆனால் அறுவடைக்குப் பிந்திய முகாமைத்துவம் பற்றி எந்த அறிவும் இல்லாமலே அவர்கள் தங்கள் தொழிலை முன்னெடுக்கின்றார்கள்.

ஒரு தொழில் தன்னுடைய ஜீவனோபாயத்துக்கான ஒரு மார்க்கமாக இருக்குமானால், அந்தத் தொழில் பற்றிய முழுமையான அல்லது பகுதியளவிலான அறிவு சம்பந்தப்பட்டவருக்கு இருப்பது மிக அவசியம். அதனை விடுத்து தான்தோன்றித்தனமாக நடக்க முயற்சித்தால் அதில் எந்த வெற்றியும் பெற முடியாது. அப்படியான ஒரு நிலையை பணம் கொடுத்து வரவழைக்கும் நிலையை இன்றுள்ள விவசாயிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

மண்ணின் வளத்தைப் பாதுகாத்து நிலையான உச்சத்தினை அடைந்து கொள்வதற்கு வெறுமனே இராசயனப் பசளை, பீடைநாசினிகளை மாத்திரம் நம்பியிருத்தல் என்பது மிக ஆபத்தானது என்கின்றார் அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் நிலையப் பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ. முபாறக்.

"எமது பகுதியில் நெற்காணிகளில் தொடர்ச்சியான பயிர்ச் செய்கையினாலும், தொடர்ச்சியான இரசாயனப் பசளையின் பிரயோயகத்தினாலும், மண்வளமானது அமில, காரத் தன்மையின் தாக்கத்துக்கு உட்பட்டுள்ளது. இதனால் இம்மண் வளம் இழந்து காணப்படுகின்றது. இம்மண் வளத்தினை பாராமரித்து சூழலுக்கு உகந்தவாறு மாற்றியமைக்க வேண்டும். உச்ச விளைச்சலை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இரசாயனப் பசளைகளுடன் இயற்கைப் பசளைகளான வைக்கோல், மாட்டெரு , கோழி எரு, கருகிய உமி, இலை குழை என்பவற்றையும் சேர்த்துப் பயன்படுத்தவதற்கும், அதனுடைய பயனைப் பெறுவதற்கும் விவசாயிகள் முன்வருதல் அவசியம்" என்கின்றார் விவசாயப் போதனாசிரியர் முபாறக்.

இரசாயனப் பசளைகளை மாத்திரம் பாவிப்பதனால் ஏற்படுகின்ற விளைவுகள் சிலவற்றை அவர் விபரித்தார்.

மண் அமில, காரத் தன்மையின் தாக்கத்துக்கு உட்படுவதால் காபன் நைதரசன் வீதம் குறைவடையும்.

ஆவியாதல் மூலம் போசணைச் சத்துகளின் இழப்பு ஏற்படும். மண்ணின் போசணைச் சத்துகளில் சமமின்மை ஏற்படும் மண்ணரிப்பு ஏற்பட்டு வளமான மேல் மண் அகற்றப்படும்.சூழல் மாசடையும், மண்ணின் கட்டமைப்பு பாதிக்கப்படும்.

கூடுதலாக நைதரசன் பசளை பாவிக்கும் போது 40சதவீதமான பசளை பயிரினால் பயன்படுத்தப்படாது வீணாக மண்ணில் இழக்கப்படுகின்றது. இதனால் பொருளாதார, சமூக ரீதியில் இழப்புகள் ஏற்படுகின்றன.

இயற்கைப் பசளைகளை மாத்திரம் பாவிப்பதனால் குறைந்தளவான போசாக்கு மண்ணில் காணப்பட்டாலும் நீண்ட காலம் மண்ணில் தங்கி நின்று பயிருக்குப் பயன் தரும்.

சேதனப் பசளை பயன்படுத்துவதால் மண்ணில் நீரைப் பற்றி வைத்திருக்கும் தன்மை அதிகரிக்கும்.

மண்ணரிப்புத் தடுக்கப்படும்.நிலம் பாதுகாக்கப்படும். ஆனால் விளைச்சல் குறையும். காபன், நைதரசன் வீதம் அதிகரிக்கும். மனிதர்கள் நோயின்றி உயிர் வாழ்தலே முக்கியம்" என்கின்றார் விவசாய போதனாசிரியர்.

"மனிதர் இல்லாத உலகில் மண் எதற்கு? எனவே மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அல்லது உயிர்வாழ்தலுக்கு அச்சறுத்தலான விடயங்களைத் தவிர்ப்பதே இதன் மிக முக்கிய நோக்கமாகும்" என்கிறார் அவர்.

"இரசாயனப் பசளைகள், சேதனப் பசளைகளில் உள்ள நன்மை, தீமைகள் மிகத் தெளிவாக விவசாயிகளுக்கு போதிக்கப்பட்டுள்ளன. சேதனப் பசளைகளை மிக இலகுவாக பெற்றுக் கொள்ளும் பொருட்டு உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

"விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் வயல்நிலங்களில் வைக்ேகாலையோ அல்லது குப்பைகளையோ எரிப்பது மிகவும் பாதிப்பான விடயம். இப்பாதிப்பு விவசாயிகள் பலருக்குப் புரியாதுள்ளது" என்று கவலையுடன் குறிப்பிடுகின்றார் முபாறக்.

"வயல்களில் வைத்து வைக்கோலை எரிப்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் எந்தக் கவலையும் விவசாயிகளுக்கு இல்லை.வயல் நிலங்களை எரிப்பதனால் மண் மலட்டுத்தன்மை அடைவதுடன் பயிர்ச் செய்கை பாதிக்கப்படுகிறது.

உலகின் முன்னணி காலநிலை விஞ்ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து புவி வெப்பமடைதலுக்கு மனித நடவடிக்கைகள் முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றனர். பெரும்பாலும் மூன்றே மூன்று காரணிகளை அங்கு சுட்டிக்காட்டுகின்றனர். முதலாவது, எரிபொருட்களினால் ஏற்படுகின்ற புகை, இரண்டாவது காடழிப்பு, மூன்றாவது தீவிர விவசாயம் ஆகிய காரணிகளையே குறிப்பிடுகின்றனர்.

தீவிர விவசாயம் என்பது இன்றுள்ள விவசாயிகள் மேற்கொள்ளும் நெற்காணிகளை எரிக்கின்ற நிலையைக் குறிப்பிடுகின்றனர். நெற்செய்கை நடவடிக்கை மேற்கொள்ள வயல்நிலங்களை உழுதல் அவசியம். அதற்கு நீர் மிக முக்கியம். ஆனால் நீர் கிடைப்பதற்கு சற்றுத் தாமதமானால் வயல் நிலங்களை எரித்து விட்டு உழுது விவசாயம் மேற்கொள்கின்றனர். இதனையே இங்கு மூன்றாவது காரணியாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

எனவே சூழலை, புவியை மாசுபடுத்தி மலட்டுத் தன்மையான காணிகளை நமது சந்ததிகளுக்கு ஒப்படைப்பதில் நியாயம் இல்லை.

இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் முபாறக்.


Add new comment

Or log in with...