தமிழின் சுவையை உலகறிய செய்த மாபெரும் கவிஞன் | தினகரன்

தமிழின் சுவையை உலகறிய செய்த மாபெரும் கவிஞன்

98ஆவது நினைவு தினம்

தமிழ் உள்ளவரை பாரதியின் நாமமும் வாழும்

தமிழ் மொழிக்கு அழியாத உயிரும், ஒளியும் வழங்கி பற்பல பணிகளைச் செவ்வனே ஆற்றியவர் மகாகவி பாரதியார்.பாரதியாரின் 98வது நினைவு தினம் நேற்றாகும். பாட்டுக்ெகாரு புலவன் பாரதி மறைந்து ஒரு நூற்றாண்டு நெருங்குகின்ற போதிலும் எம்மனங்களில் அவன் இன்றும் அழியாமல் நிலைத்திருக்கின்றான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலும், தமிழ்மொழி வளர்ச்சிப் பணியிலும் மகாகவி பாரதி சிந்தை செலுத்தினார்.தேசபக்தியை வளர்க்கும் படைப்புகளை உருவாக்கிய அதேவேளையில், தமிழ்ப் பக்தியையும் மகாகவி பாரதி வளர்த்தார் என்பதை அவருடைய எழுத்துகள் நமக்கு அறிவிக்கின்றன.

"இயன்றவரை தமிழே பேசுவேன்; தமிழே எழுதுவேன்; சிந்தனைசெய்வது தமிழிலே செய்வேன்" என்று சங்கற்பம் செய்து கொண்டவர் மகாகவி பாரதி.

"தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார், இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்று தமிழின் சுவையை அமுதுக்கு ஒப்பாகச் சிறப்பித்துப் பாடிய மகாகவி பாரதி, தமிழ் பேசும் மக்களைத் தமிழ்ச் சாதி என்றே குறிப்பிட்டு எழுதியும் மகிழ்ந்தார்.

தமிழ்மொழி வளர்ச்சியில் மகாகவி பாரதி அக்கறை செலுத்திய அதேசமயம், தமிழறிஞர்களும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையே பெரிதும் விரும்பினார். தமிழ்மொழி வளர்ச்சியில் மகாகவி பாரதி அக்கறை செலுத்த வேண்டியதற்கான காரணம் யாதாக இருக்க முடியும்?

மகாகவி பாரதி காலத்தில் வாழ்ந்த ஆங்கிலம் கற்ற அறிஞர்களில் பலர் பிரதேச மொழிகளுக்குப் பதிலாக, அந்த இடத்தில் ஆங்கிலம் அமர்ந்து கொள்ளும் என்று நம்பினர்; நம்பியதோடு மட்டுமல்லாமல், சுதேச பாஷைகள் இருந்த இடம் தெரியாமல் போய், ஆங்கிலமே நிலைபெற்று நிற்கும் என்று பேசவும் தலைப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழ்மொழியின் சிறப்புப் பற்றி உ.வே.சாமிநாதையர் திருவாரூரில் பேசியதை மகாகவி பாரதி 07.11.1908ஆம் திகதிய 'இந்தியா' பத்திரிகையில் பிரசுரம் செய்தார். பிரசுரம் செய்த போது தம்முடைய கருத்தாக மகாகவி பாரதி இவ்வாறு எழுதினார்:

"தமிழ்ப் பாஷை இறந்து போய் விடும் என்றும், நமது நாட்டின் எல்லாப் பாஷைகளுக்குமே பிரதியாக ஆங்கிலப் பாஷை ஏற்படும் என்றும் நம்பிய மூடர்கள் சுமார் 10 வருஷங்களின் முன்பு நமது ஜனங்களிலே பலர் இருந்தார்கள். இப்போதும் கூட அந்த நம்பிக்கையுடையவர் ஆங்கிலேயர்களிலே அனேகர் இருக்கின்றார்கள். இந்தியாவிலுள்ள பாஷைகளெல்லாம் மடிந்து போய், அவற்றினிடத்திலே ஆங்கிலம் நிலவ வரும் என்பது இவர்களுடைய எண்ணம்" என்று எழுதினார் பாரதியார்.

தம் கருத்தைப் இவ்வாறு பதிவு செய்த மகாகவி பாரதி, உ.வே.சா.வின் பேச்சின் பகுதியையும் பிரசுரம் செய்துள்ளார். அந்தப் பகுதி வருமாறு:

"அன்னியர்களைக் குறை கூறிப் பயனில்லை. தமிழ்ப் பாஷையின் செல்வங்களையெல்லாம் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளாத குற்றம் நம்மவர்களையே சார்ந்ததாகும். அவ்வாறாயினும், நமது தாய்மொழி ஸாமானியத்தில் இறந்துவிடக் கூடியதன்று. பெரியோர்கள் இதனைக் 'கன்னித் தமிழ்' என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். இது எக்காலமும் வனப்பும் இளமையும் மாறாத கன்னிகை ஆகும். இதற்கு முதுமையே கிடையாது; மரணமும் இல்லை".

திருவாரூரில் உ.வே.சா. ஆற்றிய உரையின் பகுதியை மகாகவி பாரதி இவ்வாறு வெளியிட்டதன் வாயிலாக நம் தமிழ் அறிஞர்கள் தமிழ்மொழிக்கு முதுமையும் இல்லை; மரணமும் இல்லை என்று சொல்லத்தக்கவாறு காலத்திற்கு ஏற்றவாறு தமிழின் மேன்மைக்கு உழைத்தல் வேண்டும் என்பதைப் புலப்படுத்தினார்.

உ.வே.சா. 1908ஆம் ஆண்டில் திருவாரூரில் பேசிய பேச்சை வெளியிட்ட நிலையில், சுமார் பத்து ஆண்டுகள் கடந்த பின்னர், ஆங்கில ஆசிரியரான ஒருவரும் 'தமிழ் மெல்ல இனிச் சாகும்' என்று கூறக் கேட்டு மகாகவி பாரதி கொதித்து எழுந்தார். அந்த ஆங்கில ஆசிரியரைக் கூறத்தகாதவன் கூறினான் என்றும், அந்தப் பேதை உரைத்தான் என்றும் மிகக் கடுமையான சொற்களைப் பிரயோகித்து நிந்தனையும் செய்தார்.

மகாகவி பாரதி இயற்றி அருளிய தமிழ்த்தாய் என்ற பாடலில்தான்...

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்இனி

ஏதுசெய் வேன்? என தாருயிர் மக்காள்!

கொன்றிடல் போலொரு வார்த்தைஇங்கு

கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;

மெத்த வளருது மேற்கேஅந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை அவை

சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை;

மெல்லத் தமிழினிச் சாகும் அந்த

மேற்குமொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான்ஆ!

இந்த வசையெனக் கெய்திட லாமோ?

சென்றிடு வீர் எட்டுத் திக்கும்கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!"

என்ற பாடல் அடிகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு தமிழுக்காக வாழ்ந்த மாபெரும் கவிஞன் பாரதி. 98 வருடங்கள் அல்ல... எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழ் பேசுவோர் நெஞ்சங்களில் அவர் வாழ்வார்.


There is 1 Comment

I appreciate very much of your article on Parathiyar. If you want to serve him,Please bring forward the Progressive Tamil Nationalism in your paper. Thanks

Add new comment

Or log in with...