சு.க. - பெரமுன பொது சின்னம் தொடர்பிலேயே இழுபறி | தினகரன்


சு.க. - பெரமுன பொது சின்னம் தொடர்பிலேயே இழுபறி

பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ள நிலையில் பொது சின்னம் உள்ளிட்ட சில விடயங்கள்    தொடர்பிலேயே இழுபறி நிலை காணப்படுகிறது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.  

பொது சின்னமொன்றில் போட்டியிடுவதற்கு அவர்கள் இணங்கினால் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்குமெனவும் அவர் தெரிவித்தார்.  

சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  

பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தை தீர்க்கமான நிலையை எட்டியுள்ளது. கொள்கை ரீதியில் இருதரப்புக்குமிடையில் சில சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.   தேசியவாதத்துக்கு முக்கியத்துவம ளிக்கும் இடதுசாரிக் கொள்கையைத்தான் சு.க பின்பற்றுகிறது. அவர்களுக்கும் எமக்கும் கொள்கையளவில் பாரிய முரண்பாடுகள் இல்லை.  

19ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அரச முகாமைத்துவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த எண்ணங்களைக் கொண்டுள்ளார்.  

ஆனால், கடந்த அரசாங்கம் தோல்வியடைய காரணமான பல திருடர்களும் அங்கு உள்ளனர். அவர்கள் எமது பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக உள்ளனர்.  

சிலவேளை, அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்யும் வகையில் செயற்படுகிறார்களா எனத் தெரியவில்லை.  

சின்னம் தொடர்பில் பிரச்சினையுள்ளமை உண்மைதான். சின்னம் தொடர்பில் நான் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல. கட்சியினதும், சு.கவின் ஆதரவாளர்களினதும் எண்ணமாகும். உணர்வுபூர்வமான பல சு.கவினர் உள்ளனர். அவர்கள் தாமரை மொட்டுக்கு வாக்களிக்கும் நிலைப்பாட்டில் இல்லை.  

பொது சின்னமொன்று இல்லாவிட்டால் அவர்கள் மாற்றுத் தரப்பினருக்கு ஆதரவளிக்கக்கூடும். அனைவரையும் ஓர் இடத்துக்கு கொண்டுவரும் வகையிலேயே நான் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.  

ஒரு பொதுவான சின்னத்தில் போட்டியிட இணக்கம் வெளியிட்டால் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும்.  

சின்னம் தொடர்பில் பிரச்சினையுள்ளமையாலேயே உதய கம்மன்பில போன்றோர் தாமரை மொட்டில் மாத்திரமே போட்டியிட வேண்டுமென கூறுகின்றனர். பிரச்சினை இல்லையென்றால் எந்தவொரு சின்னத்திலும் போட்டியிடலாம் தானே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  


Add new comment

Or log in with...