தொடரும் நிர்வாக உத்தியோகத்தர் போராட்டம் | தினகரன்


தொடரும் நிர்வாக உத்தியோகத்தர் போராட்டம்

செயற்பாடுகளில் பாதிப்பில்லையென  பொது நிர்வாக அமைச்சு தெரிவிப்பு 

நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது.  

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. 

சம்பள முரண்பாடு உட்பட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவிக்கையில்; அதனால் அமைச்சுக்கள், திணைக்களங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை  என்றும் அது சம்பந்தமாக இதுவரை எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

சம்பளப் பிரச்சினை தொடர்பான நிர்வாக சேவை தொழிற்சங்கத்தின் யோசனையை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதேவேளை, பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தது. 

தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவிக்கின்றது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  


Add new comment

Or log in with...