தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு கோட்டாபயவிடம் சிறந்த கொள்கையுண்டு | தினகரன்


தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு கோட்டாபயவிடம் சிறந்த கொள்கையுண்டு

அரசியல் தீர்வுமுதல் அபிவிருத்திவரை அனைத்து வகையிலும் தமிழ் மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக குற்றஞ்சாட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனையை கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வழியில் வரும் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தது.  

அச்சம் கொள்ளக்கூடிய வகையில் கோட்டாபய ராஜபக்ஷ மோசமானவர் அல்ல. அவர் மிகவும் எளிமையானவர் என்பதுடன், தமிழ் மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை வைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.  

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு கூறினார்.  

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  

2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தை அமைக்க வடக்கு, கிழக்கு, மலையகமென தமிழ் மக்கள் பாரிய அளவில் அணிதிரண்டு ஆதரவளித்திருந்தனர்.  

அரசியல் தீர்வை வழங்குவோம், காணிகளை விடுவிப்போம், கைதிகளை விடுவிப்போம் என பல வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், மீண்டும் தமிழ் மக்களின் காணிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளமையே நடைபெற்றுள்ளது.  

13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல் படுத்துவதற்காக இந்த அரசாங்கத்தை தமிழ் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை சஜித் போன்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.   13ஆவது திருத்தச்சட்டம் ஏற்கனவே உள்ளது. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவருவோம் என்ற அடிப்படையில்தான் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தனர். ஆனால், மகிந்த ராஜபக்ஷ தெளிவாகக் கூறியுள்ளார் 13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்குவேன் என்று.  

மலையக மக்களுக்கும் இந்த அரசாங்கம் பாரிய வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. 1000ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவேனென தலவாக்கலையில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருந்தார்.  

ஆனால், 50ரூபாவைகூட அவர்களால் வழங்க முடியவில்லை. 50ரூபாவுக்குக்கூட தமிழ் மக்கள் பெறுமதியில்லையா என்று இவர்களிடம் நாம் கேட்க விரும்புகின்றோம்.   வடக்கு, கிழக்கை போன்று மலையக இளைஞர்களின் கல்வித்தரத்தையும் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்தும் நோக்கில் கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த கொள்கைகளை கொண்டுள்ளார்.  

 அவருக்கு சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றியடைய முடியும். ஆனால், அதனை அவர் விரும்பவில்லை. தமிழ்,முஸ்லிம் மக்களின் ஆதரவும் அவசியம் என்பதில் உறுதியாகவுள்ளார்.  

கோட்டாவை வேண்டாமென கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அன்று யுத்தத்தை கையாண்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு எவ்வாறு ஆதரவளித்தது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதில்லை என்பதில் இம்முறை மக்கள் தெளிவாகவுள்ளனர். 

-சுப்பிரமணியம் நிசாந்தன்  


Add new comment

Or log in with...