சஜித்தையே களமிறக்க வேண்டும் - ராம் | தினகரன்


சஜித்தையே களமிறக்க வேண்டும் - ராம்

மக்கள் மனமறிந்த, மக்கள் விரும்புகின்ற அரசியல்வாதியாக வலம்வரும் சஜித் பிரேமதாசவையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவேண்டுமென அக்கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான சி.வை.பி. ராம் வலியுறுத்தியுள்ளார்.  

கொழும்பு புளுமண்டல் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,  

ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சையால் ஐக்கிய தேசியக்கட்சி  இரண்டாக உடைந்துள்ளது என சிலர் மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  

எமது கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஐக்கியமாக செயற்பட்டு, ஒருமித்த அணியாகவே ஜனாதிபதி தேர்தலைச் சந்திக்க எதிர்பார்க்கின்றோம்.  

கட்சியையும் பாதுகாத்து ஜனாதிபதி தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டுமெனில் அதற்கு தகுதியான ,மிகவும் பொருத்தமான வேட்பாளர் சஜித் பிரேமதாசவே ஆவார்.  

மேல்மட்டம் முதல் கீழ்மட்டம்வரை அனைத்து தரப்பினரும் சஜித்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவரும் சிறந்த செயற்பாடுகள் மூலம் தன்னால் முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.  

மக்கள் பக்கம்நின்று - கட்சியின் நலனையும் கருதி இம்முறையும் விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வரவேண்டும்..  

குறிப்பாக 2010மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது ரணில் விக்கிரமசிங்க சில தியாகங்களை செய்தார். ஆனால் பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.  

எனவே, “ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி” என்ற கட்சி ஆதரவாளர்களின் கனவை நனவாக்குவதற்கு பிரதமர் களம் அமைத்துக்கொடுக்க வேண்டும்.  

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய ஆகியோரையும் குறைத்து எடைபோடக்கூடாது. அவர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டலும் கட்சிக்கு என்றும் தேவை. அவர்களுக்கு கட்சிக்குள் உரிய இடம் வழங்கப்படவேண்டும். என்றார்.(ஸ) 


Add new comment

Or log in with...