வடக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரிய வாய்ப்பு | தினகரன்


வடக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரிய வாய்ப்பு

வடபகுதியை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் நடத்திய என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா (தொழில் முனைவோர்) கண்காட்சி மிக வெற்றிகரமாக நடந்தேறி இருக்கின்றது. முப்பதாண்டு கால யுத்தம் காரணமாக வீழ்ச்சியடைந்த வடபகுதி மண்ணை செழிப்பு மிக்க பூமியாக மாற்றும் மிகப் பெரிய திட்டமாகவே இந்தக் கண்காட்சி அமையப் பெற்றிருந்தது.

கண்காட்சியைப் பார்வையிட வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருவகையுடன் காணப்பட்டதோடு, கண்காட்சியை மேலும் சில தினங்களுக்கு நீடிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

என்ரபிரைஸ் கண்காட்சியை அங்கு வாழும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதான களமாகவே நோக்கலாம். மக்கள் மனங்கள் கண்காட்சியோடு ஒன்றித்துப் போயிருந்தன. மனம் சோர்ந்து போய் பெரும் அதிருப்தியுடன் வாழ்ந்த யாழ். மக்கள் முன்னொரு போதுமில்லாத மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருக்கின்றனர். அம்மக்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஊற்றெடுத்துக் காணப்படுகின்றது. தங்களுக்கு நல்லதொரு விடிவு காலம் உதயமாகி விட்டதான பெருமிதம் அவர்களிடம் காணப்படுகின்றது.

கண்காட்சியில் சிறிய குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், யாழ். மக்கள் அக்குறைபாடுகளை கண்டுகொள்ளவில்லை. அக்குறைபாடுகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை. அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனையில் உருவானதே இந்த என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி. இதன் பிரதான நோக்கம் உள்ளூர் உற்பத்திகளுக்கு ஊக்கமளித்து அப்பிரதேசங்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவதாகும். சிலர் இத்திட்டத்தை பத்தோடு பதினொன்றாகவே பார்த்தனர். ஆனால் அவர்களது குறுகிய நோக்கம் பிழைத்துப் போன நிலையில் அனைவரும் மூக்கில் விரல் வைத்துப் பார்க்குமளவுக்கு இத்திட்டம் உயர்ந்து காணப்படுகின்றது.

இங்கு முக்கியமான விடயமொன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளூர் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். கண்காட்சியின் நோக்கமே அதுதான். அந்த மக்களின் கைகளைக் கொண்டே அவர்களின் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்காகும்.

எனினும் சில இடங்களில் தெற்கிலிருந்து இறக்குமதியான கண்காட்சிக் கூடங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவற்றைக் கொஞ்சம் தவிர்த்திருக்க முடியும். ஆனால் மக்களுக்கு அதுவும் ஓரளவு பயன் தரக் கூடியதாக அமைந்ததையும் பார்க்க முடிந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பை வளர்த்தெடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அரசாங்கத்தின் இந்த உறுதிப்பாடு தோற்றுப் போகாமல் பலம் பொருத்தியதாகவே காணப்பட்டது.

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் வடக்கு மக்களின் பொருளாதாரத்தை பலமுள்ளதாக மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் இலக்காகக் காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களால் தமது கால்களில் தங்கி நிற்கக் கூடிய உத்வேக பலத்தை இந்தக் கண்காட்சி பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நல்லெண்ணத்துடன் பொதுத்தளத்தில் நின்று செயற்பட முடிந்தால், பிரதேசத்துக்கான பொருளாதார உயர்வுக்கு உரிய வழிகாட்டல்களை துரிதமாக முன்னெடுக்கக் கூடியதாக அமையும். அந்தப் பிரதேச மக்கள் சமூகம் அதனையே முழுமையாக எதிர்பார்க்கின்றது.

இக்கண்காட்சியால் மாணவர்கள், உற்பத்தியாளர்கள் இளைஞர்கள், யுவதிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஒருமுகமாக வரவேற்று பயனடைந்துள்ளதை வெளிப்படையாகவே காண முடிகின்றது. பதிக்கப்பட்ட மக்கள் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் உருப்படியான திட்டத்தையே இந்த என்ரபிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி மூலம் பெற்றுக் கொடுத்துள்ளது. ஆரம்பத்தில் இதன் பயனைப் பெற்றுக் கொள்வதில் பலரும் தயக்கம் காட்டியுள்ளனர். ஒரு சில மணி நேரத்தில் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு தமது எண்ணங்களை மாற்றிக் கொண்டதை நன்கு அவதானிக்க முடிந்தது.

இந்தக் கண்காட்சி உற்பத்தியுடனும் பொருளாதார மேம்பாட்டுடனும் மட்டும் நின்று விடவில்லை. இளம் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆனால் தெற்கிலிருந்து இறக்குமதியான இசைக் குழுக்களையே இங்கு காண முடிந்தமை பெரும் குறையாகும். உள்ளூரில் உள்ள திறமைமிக்க இசைக் கலைஞர்களுக்கும், இசைக்குழுவினருக்கும் வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தால் பிரதேச இசைக்குழுக்களுக்கு அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக்கும்.

யாழ். என்ரபிரைஸ் (தொழில் முனைவோர் கண்காட்சி) வெறுமனே பொழுதுபோக்குக் களியாட்ட விழாவல்ல. பிராந்தியத்தின் தொழில்துறையை உற்பத்தித்துறையை மேம்படுத்தும் வேலைத் திட்டமாகும். இதன் பயனை பிரதேச தொழில் முனைவோர் உரிய முறையில் பயப்படுத்திக் கொள்ள வேண்டும். தமது முயற்சிகளுக்கு கடனைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் காணப்படுமாயின் தமக்கு உடனடியாக அறியத் தருமாறு அரசாங்க அதிபர் தொழில் முனைவோர்களிடம் கேட்டிருக்கின்றார்.

எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் இந்த வேலைத் திட்டம் எமது தேசத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளாதார ரீதியில் உயர்நிலைக்குக் கொண்டு வருவதற்கான மகத்தான வேலைத் திட்டமாகும். இதனை வடபுல தொழில் முனைவோரும், உற்பத்தியாளர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தெற்கில் மட்டும் பொருளாதாரம் வளர்ந்தால் போதாது. முழுநாடும் பொருளாதார பலம் கொண்டதாக மாறவேண்டும். இதில் வடக்கு மக்களுக்கு தனித்துவம் உள்ளது. அவர்கள் அரசின் நோக்கத்தை பாராட்டியாக வேண்டும்.

நாளைய விடியலின் போது எமது நாடு பொருளாதாரம், உற்பத்தி போன்றவற்றில் தலைநிமிர்ந்து நிற்கும் வேளையில் அந்தப் பெருவிருட்சத்தின் ஒரு கிளையாக வடபுலமும் காணப்பட வேண்டும். அதன் மூலம் நல்லெண்ணம், நல்லிணக்கம், சமாதான சகவாழ்வு அனைத்தும் ஒன்றாக கைகோர்த்து நிற்பதைக் கண்டு இலங்கை பூரிப்படையும் என்பது நிச்சயமானதாகும்.


Add new comment

Or log in with...