பிரிட்டனில் முன்கூட்டிய தேர்தலுக்கு பிரதமரின் முயற்சி மீண்டும் தோல்வி | தினகரன்


பிரிட்டனில் முன்கூட்டிய தேர்தலுக்கு பிரதமரின் முயற்சி மீண்டும் தோல்வி

பிரிட்டன் பாராளுமன்றம் ஐந்து வாரங்களுக்கு இடைநிறுத்தப்படுவது ஆரம்பமாகும் நிலையில், முன்கூட்டிய தேர்தல் ஒன்றுக்காக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அழைப்பை எம்.பிக்கள் மீண்டும் நிராகரித்துள்ளனர்.

பிரதமரின் கோரிக்கை குறித்து கடந்த திங்கட்கிழமை பிரிட்டன் பாராளுமன்றத்தில் 434 எம்.பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 296 பேர் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தனர்.

எனினும் ஒக்டோபரில் தேர்தலை நடத்தும் திட்டத்திற்கு ஏற்கனவே எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததோடு, அதற்கு முன்னர் உடன்படிக்கை இன்றி பிரெக்சிட் இடம்பெறுவதை தடுக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த எம்.பிக்கை வலுயுறுத்துகின்றனர்.

இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றம் நேற்று தொடக்கம் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வமாக ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். உடன்படிக்கை இல்லாத பிரெக்சிட்டை கட்டாயப்படுத்த பிரதமர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆய்வு அல்லது பொறுப்புக்கூறலை எதிர்கொள்ளாததற்காக அவரை கோழைத்தனமாக செயல்படுகிறார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார். பிரிட்டன் ஒப்பந்தத்துடன் அல்லது ஒப்பந்தம் இன்றி வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையிலேயே பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட காலத்தை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு முயற்சிப்பதாக ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார். எனினும் உடன்பாடு இன்றி வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த பாராளுமன்றம் எனது கைகளை கட்டிப்போட என்ன செய்தாலம் பரவாயில்லை, தேசத்தின் நலனுக்காக உடன்பாடு ஒன்றை எட்ட நான் போராடுவேன். இந்த அரசாங்கம் பிரெக்சிட்டை மேலும் தாமதப்படுத்தாது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...