மே.தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள், ரி-20 தலைவராக கிரன் பொல்லார்ட் | தினகரன்


மே.தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள், ரி-20 தலைவராக கிரன் பொல்லார்ட்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் கிரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கேரிட் , நேற்று ட்ரினினெட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சபையின் நிர்வாக கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மேலும், இதன்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, முழுநேர பயிற்சியாளர் தேவை என்பதனையும் விளம்பரப்படுத்தியுள்ளது.

மட்டுப்படுத்தபட்ட போட்டிகளின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள 32 வயதான கிரன் பொல்லார்ட், இறுதியாக 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

அணி நிர்வாகத்துடனான மனக் கசப்பு காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல், வெளிநாட்டு ரி-20 தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்தக்கட்ட முன்னேற்றத்தை எண்ணி, மூன்று வருடங்களுக்கு பிறகு அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு அணித்தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்ததாக எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்று ரி-20, மூன்று ஒருநாள் மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.

இந்த கிரிக்கெட் தொடரின் போது, புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொல்லார்ட், தனது பணியினை தொடருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987மே 12ஆம் திகதி ரினிடாட்டில் பிறந்த கிரன் பொல்லார்ட், ஒரு சகலதுறை வீரராக கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் போட்டி மூலமாக சர்வதேச உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு ரி-20 சர்வதேச போட்டியிலும் அறிமுகம் பெற்றுக்கொண்டார்.

அவர் இதுவரையில் 101 ஒருநாள் மற்றும் 62 ரி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் ஜேஸன் ஹோல்டர், டெஸ்ட் அணியினை மட்டும் வழிநடத்துவார் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இதற்கு முன்னதாக ரி-20 அணியின் தலைவராக இருந்த கார்லோஸ் பிரத்வெயிட், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது டெஸ்ட் அணியின் தலைமைத்துவம் முதல் முறையாக இளவயதுடைய சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டருக்கு வழங்கப்பட்டது. அப்போது, ஹோல்டர் தனது 23 வயது 72 நாட்களில் அணித்தலைவராக பொறுப்பேற்று மேற்கிந்திய தீவுகளின் இரண்டாவது இளம் அணித்தலைவராக பெயர் பெற்றார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற 11ஆவது ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலும் ஜேசன் ஹோல்டர் அணித்தலைவராக கடமையாற்றினார்.

அண்மையில் நிறைவுக்குவந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அணியினை வழிநடத்தினார். எனினும் இந்த இரு தொடர்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி சாதிக்கவில்லை.

அத்தோடு, அண்மையில் சொந்த மண்ணில், இந்தியாவை எதிர்த்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ரி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களையும் இழந்தது. இந்த நிலையிலேயே தற்போது அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...