கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் | தினகரன்


கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள்

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் உணவாகவும், உணவை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலைகள் உடல் நலத்திற்கு பல்வேறுபட்ட நன்மைகளை வழங்க கூடியதாக காணப்படுகின்றது. அத்தோடு, மருந்துப் பொருளாகவும் கொத்தமல்லி, அதன் இலை பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மாத்திரமின்றி, எமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகின்றது.

வீட்டுத் தோட்டங்களில் மாத்திரமின்றி சிறு சாடிகளில் வளர்க்கப்படும் கொத்தமல்லி இலையை வழக்கமாக ரசம், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மணத்திற்காக, சுவைக்காக பயன்படுத்துகின்றோம். கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்குகின்றது. கொத்தமல்லி பசியை தூண்டக்கூடியது. வாயு பிரச்சினைகளை குணமாக்குகின்றது.

கொத்தமல்லியை தினந்தோறும் உணவில் சேர்த்து வருவதால்,உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கின்றது.  உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கின்றது. கல்லீரலின் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றது. அதனை பலப்படுத்தவும் செய்கின்றது. மலக்குடலை ஒழுங்குபடுத்துகின்றது. இன்சுலின் சுரப்பை ஒழுங்குபடுத்துகின்றது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது. இதில் உள்ள விட்டமின் கே- அல்சீமியர் நோயை குணமாக்க உதவுகின்றது.

இதில் உள்ள விட்டமின் ஏ, பி, சி - நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றது. நுரையீரலை பாதுகாக்கச் செய்கின்றது. வாய்ப்புண்ணை குணமாக்க உதவுகின்றது. வயிற்றில் வாயு தொல்லை மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கின்றது. வாய்க்குமட்டல் உணர்வை குறைக்க உதவுகின்றது. சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்கின்றது.

கண்பார்வை கோளாறுகள், வெண்படல அழற்சி போன்ற கண் பிரச்சினைகளை சரி செய்கின்றது. கொத்தமல்லி இலை மிகச் சிறந்த கிருமிநாசினியாகவும் செயற்படுகின்றது. சருமத்தில் படை, தோல் அரிப்பு போன்றவை உண்டானால் கொத்தமல்லி இலையை பசை போல் அரைத்து தடவி வர குணமாகும்.

மேலும் முகத்தில் உண்டாகும் முகப்பருக்கள் மற்றும் தோலில் உண்டாகும் தழும்புகளுக்கு கொத்தமல்லி இலையை அரைத்து பசை போல் தடவி வர குணமாகும். இதன் இலையை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு கட்ட அவை சீக்கிரம் கரைந்து போகும். இவ்வாறு கொத்தமல்லி இலை பல வழிகளிலும் மருத்துவ ரீதியாக  முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.


Add new comment

Or log in with...