விக்ரம் தோல்விக்கான காரணம் மர்மம்! | தினகரன்


விக்ரம் தோல்விக்கான காரணம் மர்மம்!

தொடர்பு துண்டிக்கப்பட்டு ஐந்து நாட்கள்; சிக்னல் வருவதற்கு வாய்ப்பு இல்லை; முயற்சியை கைவிடாத விஞ்ஞானிகள்

சந்திரயான் 2 இன் 'விக்ரம் லேண்டர்' உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இன்றுடன் ஐந்து நாட்களாகி விட்டன.இந்தத் தவறு ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2இல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இன்னும் அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை நிலவில் விக்ரம் லேண்டரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

ஆனால் லேண்டரை கண்டுபிடித்தாலும் இன்னும் அதனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் இடையே தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஆனால் லேண்டரில் இருந்து எந்தவிதமான 'சிக்னலும்' இன்னும் கிடைக்கவில்லை.

விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக இறங்கவில்லை. வேகமாக இறங்கி இருக்கிறது. ஆனாலும், நிலவில் இது மோதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நிலவில் இது கொஞ்சம் சாய்வாக நிற்கிறது. அதனால் இது உடைந்து இருக்கவும் வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆனாலும் விஞ்ஞானிகளுக்குப் புரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. விக்ரம் லேண்டர் உடையவில்லை, அதேபோல் அது நிலவில் மோதி தவறாக கீழே விழுந்து கிடக்கவில்லை. ஆனாலும் அதில் இருந்து எந்த விதமான சிக்னலும் கிடைக்கவில்லை. ஏன் இப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்தால் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற மர்மம் நிலவி வருகிறது.

இன்னமும் அதனுடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. விக்ரம் லேண்டர் உடையாமல் இருந்தும் கூட ஏன் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன், 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போதே 'சிக்னல்' துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் நிலவில் வேகமாக இறங்கியதால் இதன் சிக்னலில் பிரச்சினை ஏற்படவில்லை. அதற்கு முன்பே அதில் ஏதோ பிரச்சினை நிகழ்ந்துள்ளது. அதனால்தான் 2.1 கிமீ தூரத்தில் உள்ள போதே அதனுடன் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடர்ந்து விக்ரமில் இருக்கும் மற்ற 'சென்சர்கள்' உடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் 'பிரக்யான் ரோவர்' உடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதுஒருபுறமிருக்க,நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் எங்குத் தரையிறங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ஆர்பிட்டரை பயன்படுத்தி நேற்றுமுன்தினம் கண்டுபிடித்த செய்தியைக் கேட்டதும், சோகத்திலிருந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொண்டனர்.அதேநேரத்தில் சமூக வலைத்தளத்தில் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று போலியாக ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இஸ்ரோ தலைவர் சிவனின், அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படம் பதிவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரோ தலைவர் சிவனுக்கென்று அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இல்லை என்பதே உண்மை.

போலியான ட்விட்டர் பக்கத்திலிருந்து சிவன் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்தப் புகைப்படம் விக்ரம் லேண்டரின் புகைப்படமே இல்லை என்பதுதான் உண்மை. சமூக வலைத்தளத்தில் விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று வைரல் ஆகிக் கொண்டிருக்கும், இந்த படம் உண்மையில் 'அப்போலோ 16 லேண்டிங் சைட்' என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்திற்குச் சென்று, அப்பலோ 16 லேண்டிங் சைட்(Apollo 16 Landing Site) என்று ரைப் செய்தால், விக்ரம் லேண்டர் என்று பொய்யாகப் பரவி வரும் புகைப்படத்தைக் காணலாம். 'அப்பலோ லேண்டிங் சைட்' புகைப்படத்தை, விக்ரம் லேண்டரின் தற்போதைய நிலை என்று போலியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இது போலியான புகைப்படம் என்பதை இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல் இஸ்ரோ தலைவருக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.விக்ரம் லேண்டரின் அசல் புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த ஓர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வருகிறது என்பது தெரிந்த விடயம். முதலில் நிலவை ஒரு முழு வட்டம் அடித்து, ஒரு வட்ட சுற்றுப்பாதையை ஓர்பிட்டர் நிறைவு செய்வதற்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

முதல் முறையாக தெர்மல் இமேஜிங் முறைப்படி ஓர்பிட்டர் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டது. மீண்டும் அதே இடத்திற்கு வருவதற்கு ஓர்பிட்டருக்கு மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆதலால் ஒரு புகைப்படம் எடுக்க, மூன்று நாட்கள் ஆகும் என்ற காரத்தினாலேயே இன்னும் விக்ரம் லேண்டர் இன் அசல் புகைப்படம் வெளியிடப்படவில்லை.

நிபுணர்களின் கருத்துப்படி விக்ரம் லேண்டருடன் தொடர்பை மீட்பதற்கான நேரம் முடிந்து விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களின் முயற்சியை விடுவதாக இல்லை. இறுதி நிமிடத்தில் கூட போராடுகிறார்கள் இந்திய விஞ்ஞானிகள்.


Add new comment

Or log in with...