உலகையே உலுக்கிய செப்டம்பர்-11 தாக்குதல் | தினகரன்


உலகையே உலுக்கிய செப்டம்பர்-11 தாக்குதல்

2973 பேரைப் பலியெடுத்த மிக கோரமான சம்பவமாக அமெரிக்க வரலாற்றில் பதிவான பயங்கரம். நான்கு விமானங்களை 246 பேருடன் கடத்தி பயங்கரவாதிகள் 9 பேர் நடத்திய கொடூரம்!

இன்றுடன் 18 வருடங்கள்

அமெரிக்க நியூயோர்க் நகரிலுள்ள இரட்டைக் கோபுரங்கள் மீது அல்_கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைக் குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

செப்டம்பர் 11, 2001 அன்று இடம்பெற்ற இத்தாக்குதல்கள், உலக வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதபடி பதிவான ஒரு மாபெரும் மிலேச்சத்தனமான சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன. உலகப் போரின் போது அமெரிக்காவின் பேள்ல் துறைமுகத்தில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்ற பெரும் தாக்குதலாக அமெரிக்கா இதனைக் கருதுகிறது.

யாரும் எதிர்பாராத தருணத்தில் பயங்கரவாதிகள் விமானத்தைக் கடத்தி உலக வர்த்தக கட்டடமான இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உயிரிழப்பையும் மதிப்பிட முடியாத பொருள் சேதங்களையும் ஏற்படுத்தினர்.

நான்கு விமானங்களை பயங்கரவாதிகள் கடத்தி இத்தாக்குதல்களை நடத்தியதால் அவ்விமானங்களிலிருந்த அனைவரும் இந்தத் தாக்குதலின் போது கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்த விமானங்களில் பயணித்த 246 பொதுமக்களும் இத்தாக்குதல்களில் பரிதாபமாக உயிரிழந்தனர். கடத்தலில் ஈடுபட்ட 19 பயங்கரவாதிகளும் இந்த தாக்குதலின் போது இறந்தனர். இந்தத் தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் இரண்டும் தீப்பற்றி எரிந்து முழுமையாக சேதமடைந்தன.

அக்ேகாபுரங்கள் இரண்டு மணிநேரம் தொடர்ந்து தீப்பற்றி எரிந்தன.தீயை அணைப்பது பெரும் சிரமமாக இருந்தது. இந்த தாக்குதலில் சிக்கி மொத்தம் 2973 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் முந்நூறு பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.எல்லாமாக நான்கு விமானங்களை பயங்கரவாதிகள் பயணிகளுடன் கடத்தி தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர்.

முதல் விமானத்தில் 11 பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் இருந்தனர்.இவ்விமானம் அதிகாலை 7:59 மணிக்கு பாஸ்டனிலிருந்து புறப்பட்டதும் 5 பயங்கரவாதிகள் இவ்விமானத்தைக் கடத்தினர். அவ்விமானத்தை காலை 8:46 மணிக்கு உலக வர்த்தக மையத்தின் வடக்குக் கோபுரம் மீது மோத விட்டு அக்கட்டடத்தைத் தகர்த்தனர்.

இரண்டாவது விமானம் காலை 8:14 மணிக்கு ​ெலாஸ் ​ெபாஸ்டன் லோகன் விமான நிலையத்திலிருந்து 9 பணியாளர்கள் மற்றும் 51 பயணிகளுடன் ஏஞ்சலஸ்க்கு புறப்பட்டது. இந்த விமானத்தைக் 5 பயங்கரவாதிகள் கடத்தி, காலை 9:03 மணிக்கு உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தில் மோதித் தகர்த்தனர்.

மூன்றாவது விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 53 பயணிகளுடன், காலை 8:20 மணிக்கு வேர்ஜினியாவிலிருந்து ஏஞ்சல்ஸ்க்கு புறப்பட்டது. இந்த விமானத்தை 5 பயங்கரவாதிகள் கடத்தி, காலை 9:37 மணிக்கு பென்டகன் மீது மோதினர்.

நான்காவது விமானம் 7 பணியாளர்கள் மற்றும் 33 பயணிகளுடன், காலை 8:42 மணிக்கு நீ​ேவர்க் விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்ட வேளையில், அவ்விமானத்தை நான்கு பயங்கரவாதிகள் காலை 10:03 மணிக்கு கடத்தி பென்னிசிலாவனியா மாகாணத்திலுள்ள ஷான்க்ஸின் நிலப்பகுதியின் மீது மோதினர்.

அமெரிக்காவில் நடந்த இந்த மாபெரும் தாக்குதலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் யார், அவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற பட்டியலை வெளியிட்டது எப்.பி.ஐ.ஸ்தாபனம். சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்- 15 பேர், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த இருவர்,எகிப்தியர் ஒருவர், லெபனான் ஒருவர்.

2002ம் ஆண்டில் இந்த பெரும் தாக்குதல் குறித்து ஆய்வு நடத்த '9/11 ஆணையம்' என்ற பெயரில் ​ேதாமஸ் கேன் என்பவரின் தலைமையில் அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஜூலை 22, 2004 இல் ​ேதாமஸ் கேனின் தலைமையிலான குழு 9/11 தாக்குதல் குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்த தாக்குதலுக்கும் அல்_கொய்தா அமைப்பினருக்கும் சம்பந்தம் இருக்கிறது என்றும், இந்த சதி வேலையில் ஈடுபட்டவர்கள் அவர்கள்தான் என்றும் கூறப்பட்டிருந்தது.

அமெரிக்க மண்ணில் வெளிநாட்டவர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய உயிர் சேதம் ஏற்படுத்திய சம்பவம் இதுவாகும். நியூ​ேயார்க் ரைம்ஸ்' பத்திரிகை நிறுவனம், 9/11 தாக்குதலில் பாதிப்படைந்த ஒவ்வொரு நபர் குறித்தும் தொகுப்புக் கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக வர்த்தக மையத்தில் செப்டம்பர் 11,2001-க்கு முன்னர் ஒரு வேலைநாளில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வரை வேலை செய்து வந்தனர்.தாக்குதலுக்குப் பிறகு தீயணைப்புப் படைவீரர்களால் 18 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது. விபத்து ஏற்பட்ட ஓரிரு மணி நேரங்களில் மொத்த கட்டடங்களும் இடிந்து விழுந்ததால் பெரும் உயிர்ச் சேதத்தை தவிர்க்க முடியாமல் போனது.

தாக்குதலுக்குப் பிறகு, அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்ட குப்பையின் எடை மட்டும் 1.4 மில்லியன் தொன் ஆகும். சம்பவ இடத்தில் இருந்து 19,435 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் அல்_கொய்தா அமெரிக்காவின் அணு மின்நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததென தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பலியான 1,100 பயணிகளின் உடல் அடையாளம் காணப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.இந்தச் சம்பவத்தில் பலியானோரின் உடல்கள் எரிந்து, சிதைந்து யாருடைய உடல் எது என்பதை அறிய முடியாத அளவிற்கு உருக்குலைந்து போயிருந்தது தான் இதற்குக் காரணம்.

கொல்லப்பட்டவர்களின் எலும்புகளை எடுத்து டி.என்.ஏ சோதனை நடத்திய போதிலும் கூட அதில் வெற்றி கிடைக்கவில்லை.

அமெரிக்காவில் இத்தனை பாரிய அழிவு ஏற்பட்ட போதிலும், மீண்டு எழுந்தது அமெரிக்கா. அல்_கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை வேட்டையாடத் தேடியது. 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் மறைந்து வாழ்ந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா முற்றிலுமாக விழிப்படைந்து, தனது பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்தது. இரட்டைக் கோபுர தாக்குதலில் இன்னும் மர்மம் நீடிப்பதாக ஒரு தரப்பு கூறிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலின் பின்னர் அமெரிக்க மக்கள் மத்தியில் பல வருடங்களாக அச்சமும், பதற்றமும் நிலவின. பலர் இச்சம்பவத்தினால் உளரீதியாக தாக்கத்துக்கு உட்பட்டிருந்தனர்.இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடத்தப்படலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் நிலவியது. அமெரிக்க மக்களின் மனோநிலை வழமைக்குத் திரும்புவதற்கு நீண்ட காலம் எடுத்து.


Add new comment

Or log in with...