திருப்பணியில் நூற்றாண்டு நிறைவு | தினகரன்


திருப்பணியில் நூற்றாண்டு நிறைவு

களுத்துறை மாவட்டத்தில், புளத்சிங்கள நகரில் மெதடிஸ்த ஆலயம் அமைந்துள்ளது.1919 ஆம் ஆண்டுசுவாமிநாதன் சாமுவேல் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முதலாவது ஆராதனை மில்லகந்த தோட்டப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய அக்காலத்தில் 1919_1921 காலப் பகுதியில் ஆரம்ப திருப்பணியாளாராக ஞானநந்தா உபதேசியார் இறைபணியாற்றினார். 1928-_1930 காலப்பகுதியில் போதகர் ரெஸ்டரிக் இறைபணியாற்றிய போது 1930.02.23ஆம் திகதி தோட்ட நிர்வாகத்தின் ஊடாக ஆலயம் கட்டுவதற்கான காணி வழங்கப்பபட்டது. 1930.07.02 ஆம் திகதி ஆலயம் கட்டப்பட்டு பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. 1930 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை 221 ஆகக் காணப்பட்டது. அக்காலத்திலிருந்தே ஜூன் மாதத்தில் ஆண்டு விழாவும், அறுப்பின் பண்டிகையும் நடைபெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1931-_1933 வரை போதகர் கோர்னிஸ் இறைபணியாற்றிய காலத்தில் 1933.12.25 ஆம் ஆண்டு புதிதாக குருமனை கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

1938 ஆம் ஆண்டு பகுதியில் .சுவாமிதாஸ் உபதேசியார் சுவிசேச ஊழியராக இறைபணியாற்றினார்.

1948-_1949 காலப் பகுதியில் பணியாற்றிய சுவிசேஷகர் பிச்சைமுத்து உபதேசியார் தனது பணிக் காலத்தில் 30 ஆண்டுகள் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி அத்துர திருச்சபையில் இருந்து ஓய்வு பெற்றார்.1959–1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹென்றி தேவசகாயம் ஜோசப் உபதேசியார் சுவிசேச ஊழியராகவும், 1963-_1965 காலப்பகுதியில் அரசரட்ணம் போதகரும் பணியாற்றிய போது திருச்சபையின் வரலாறு தொகுத்து எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1975_-1977 வரை .ஸ்டென்லி ஜெயராஜ் போதகரும் அதனைத் தொடர்ந்து 1978-_1980 காலப்பகுதியில் அழகராஜா போதகரும் சேவையாற்றி இருவரும் இச்சபையிலிருந்தே குருத்துவ மாணவர்களாக பிலிமத்தலாவ இறையியல் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். 1981-_1988 ஆண்டு காலப்பகுதியில் சவரிமுத்து உபதேசியார் ஊழியராக சிறப்பாக இறைபணியாற்றியுள்ளார்.இக்காலப் பகுதியில் ஞானராஜா போதகர் சேகர முகாமைக்குருவாக பணியாற்றியபோது 1981.02.02 ஆம் திகதி 10 பிள்ளைகளுடன் ரோஸ் தியாகராஜா மற்றும் மெக்டலின் சாமுவேல் போல் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு குருமனையின் ஒருபகுதியில் சபை மக்களின் பூரணபங்களிப்புடன் பகல் பராமரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.1989-_1991 காலப்பகுதியில் அழகராஜா போதகர் மீண்டும் குருவானவராக இறைபணி செய்துள்ளார்.1992ம் ஆண்டு டேவிட் ஜெபநாயகம் போதகர் 9 மாதங்கள் இறைபணி செய்துள்ளார். இவர் மில்லகந்த பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கிறிஸ்தவ பாடங்களை கற்பித்துள்ளார்.

1998-_2000 காலப் பகுதியில் மகேந்திரன் போதகர் பணியாற்றிய காலத்தில் களுத்துறை தோட்டசேகரம் என்ற பெயரில் இருந்த சேகரமானது அத்துர-மத்துகம சேகரமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2001-_2005 காலப்பகுதியில் கதிர்காமர் போதகர் பணியாற்றிய காலத்தில் இப்பகுதியில் இனரீதியான முரண்பாடுகள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டவேளையில் போதகர் ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் உழைத்தார்.

2009_-2012 காலப்பகுதியில் முத்தையா செல்வராஜா போதகர் பணியாற்றியுள்ளார். இக்காலத்தில் சபை மக்களின் உதவியுடன் திருமுழுக்கு தொட்டில் கட்டப்பட்டு அப்போதைய திருப்பேரவை தலைவர் ஜெபநேசன் அவர்களினால் 2011.10.02 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

2013_-2016 வரை ஜேசுதாசன் போதகர் பணியாற்றினார்.

தொடர்ந்தும் அத்துற சபையானது பல்வேறு தடைகளையும் தாண்டி சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.அத்துர மெதடிஸ்த திருச்சபையில், தற்போது ஞாயிறு ஆராதனைகள், ஞாயிறு பாடசாலை, திருமறைப்படிப்பு, வீடுகள் சந்திப்பு, வீட்டு ஜெபக்கூட்டங்கள், நோயாளர்கள் சந்திப்பு, சமூகப் பணிகள், பெண்கள், ஆண்கள், வாலிபர் திருப்பணி, முன்பள்ளி என பல்வேறு திருப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...