​பொலநறுவையில் சில்பசேனா | தினகரன்


​பொலநறுவையில் சில்பசேனா

ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் பங்கேற்பு

கண்காட்சியின் நோக்கங்களை விளக்குகிறார் அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ். லொக்குஹெட்டி

விஞ்ஞானம், தொழில்நுட்பத்தை கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தின் 2ஆம் கட்டம்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை கிராமத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தின் புதிய புரட்சிக்கான 'சில்பசேனா' வேலைத் திட்டத்தின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை (ஐந்து தினங்கள்) பொலநறுவை, கதுருவெல விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சில்பசேனா கண்காட்சியின் முதலாவது கட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஜுலை மாதம் 18 முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதனூடாக இலங்கையில் விஞ்ஞானம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த அதேநேரத்தில், தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்க நடவடிக்ைக முன்னெடுத்து கிராம மட்டத்திலும் அபிவிருத்தியை உள்வாங்க முடிகிறது. இக்கண்காட்சியானது விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமையவே முன்னெடுக்கப்படுகிறது.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அறிவு பரவலாக்கும் பணிகளை அடிப்படையாகக் கொண்டு கண்காட்சிகள் நடைபெறும். இரண்டு பிரதான வலயங்களாக ஏற்பாடு செய்யபபட்டுள்ள இக்கண்காட்சியில், தொழில்நுட்ப தொனிப்பொருட்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு அறிவூட்டப்படவிருக்கின்றது. சில்பசேனா இரண்டாவது கண்காட்சி குறித்து விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ். லொக்குஹெட்டி தினகரனுக்கு கருத்து தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி முதன்மையானது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அதில் முக்கியம். வளர்ச்சியடைந்த நாடுகளில் இது 70_ -75 வீதமாகும். STEM (Science, Technology, Engineering and Maths) கல்வி முறையில் இலங்கை இப்போது 30 வீதமாகவே காணப்படுகிறது. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் 60 முதல் 70 வரை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். அதுவே பொருளாதாரத்திற்கு பெரும் சக்தியாக மாறும். இதற்காகவே இந்த சில்பசேனா கண்காட்சி முன்னெடுக்கப்படுகிறது. இதன் மூலமாகவே நாட்டுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் தெளிவுபடுத்துகிறோம்.

இவ்வாறு விஞ்ஞானம் தொழில்நுட்பம் மூலம் நாட்டினை அபிவிருத்தி செய்ய முடியும். இன்று நாட்டிலும் பாடசாலைகளிலும் கூட உட்கட்டமைப்பு முன்னேற்றமாகவுள்ளது. கணனிக் கல்வியும் அதிகளவிலான பாடசாலைகளுக்கும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவைகளை இணைத்துக் கொண்டு விஞ்ஞானம் தொழில்நுட்பத்தை விஸ்தரித்து உற்பத்தியை உள்வாங்க வேண்டும். தொழிற்சாலைகளை அமைக்கும் போது தொழில்நுட்பங்களையும் உள்வாங்கி, இவையூடாக பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவைகளையும் இணைத்துக் கொண்டு விஞ்ஞானம், தொழில்நுட்பத்தையும் விஸ்தரித்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

எமது ஏற்றுமதிகளான இறப்பர், தேயிலை, தென்னை மற்றும் தைத்த ஆடைகள் உட்பட இவற்றினூடாக தொழில்நுட்பத்தை அதிகரித்து,பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம். அப்போது மேலதிகமாக அந்நிய செலாவணியை சம்பாதிக்க முடியும். இவ்வாறான உற்பத்திகளுக்கு கேள்வியுமுண்டு.

இதனால் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்துடன் இணைந்து STES கல்வியை மேம்படுத்துவதற்காக எமது அமைச்சு புரிந்துணர்வு உடன்படிக்கையையும் செய்துள்ளது. இந்த அனைத்து நடவடிக்கைகளின் ஊடாகவும் கிராமத்திற்கு விஞ்ஞான அறிவைக் கொண்டு செல்லவே எமது அமைச்சு நடவடிக்ைகயை முன்னெடுத்துள்ளது.

விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் கிராமத்திற்கு கொண்டு செல்லவென தற்போதிருக்கும் ஒரே வலையமைப்புதான் விதாதா மத்திய நிலையங்களாகும். அவற்றைப் பலப்படுத்துவது குறித்து முதலில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை முழுவதுமுள்ள விதாதா வள நிலையங்களின் சகல ஊழியர்களையும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அமைச்சர் முன்வைத்த விடயங்கள், கோரிக்கைகளை செயற்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது அமைச்சுடனும் அதனுடன் இணைந்துள்ள ஏனைய நிறுவனங்களுடனும் விதாதா வள நிலையங்களுடனும் எவ்வாறு தொடர்புபடலாம் என்பது தொடர்பிலான அறிவூட்டும் வேலைத் திட்டமும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இவ்வருடம் 55 விதாதா மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கருத்திட்டங்களுக்கென வழங்கப்படும் நிதி எல்லையை பத்து இலட்சம் ரூபா வரை அதிகரிக்கவும் எம்மால் முடிந்துள்ளது. Skype தொழில்நுட்பத்தின் ஊடாக விதாதா உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு கலந்துரையாடப்படுகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளினதும் பிரதான நோக்கம் கிராம மட்டத்தில் தொழில்நுட்பத்தைக் கொண்டு சென்று உற்பத்தியின் அளவையும் அவற்றின் தரத்தையும் மேம்படுத்தி அவர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதேயாகும்.

முதலாவது சில்பசேனாவினூடாக சுமார் 600 தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடிந்தது ஒரு சாதனையாகும். எதிர்காலத்திலும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்யும்" இவ்வாறு அவர் நம்பிக்ைக தெரிவித்தார்.

"பொலநறுவை பாரம்பரிய நீர்ப்பாசனக் கைத்தொழில் நிறைந்த பிரதேசமாகும். அதனால் இலங்கையில் காணப்பட்ட பாரம்பரிய தொழில்நுட்பங்களை ஒன்று சேர்த்து (Traditional Technology Zone) மற்றொரு தொழில்நுட்ப வலயமும் உள்வாங்கப்படும்.

பொலநறுவையில் விசாலமான இடவாய்ப்பு காணப்படுவதால் ஒவ்வொரு கூடாரத்திற்கும் போதியளவு இடவசதி அளிக்க முடியும். அதேபோன்று பொலநறுவை பாடசாலைப் பிள்ளைகளின் புத்தாக்கங்களுக்கும் விஷேட வாய்ப்பு அளிக்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் விஞ்ஞானக் கழகங்களை உருவாக்குவதற்கான இலக்குகளை வழங்குதல் உள்ளிட்ட இன்னும் பல நடவடிக்கைகளை இவ்வருடம் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் முன்னெடுக்க நடவடிக்ைக எடுக்கப்படும்.

நிறுவனமொன்றை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அந்நிறுவனத்திற்கு நோக்கும் இலக்கும் இருக்க வேண்டும். அதன் காரணத்தினால் எமது நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதேநேரம் எமது குறைந்த செலவு தொழில்நுட்பத்துடன் பாலம் அமைத்தல் போன்ற நிர்மாணங்கள் இடம்பெறுகின்றன. தரத்தை மேம்படுத்தி அதனையும் மேம்படுத்த வேண்டும்.

அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு நாம் குறிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும். அவரது எண்ணக்கருவுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியே சில்பசேனாவாகும்". இவ்வாறு விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் சிந்தக எஸ். லொக்குஹெட்டி விபரித்தார்.


Add new comment

Or log in with...