தேசியப் பாடசாலைகளை உருவாக்க தவறியமை மலையகத்தில் பெரும் குறை | தினகரன்

தேசியப் பாடசாலைகளை உருவாக்க தவறியமை மலையகத்தில் பெரும் குறை

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்ட போதும் ஒருசில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் அந்த முயற்சி கைகூடவில்லை. தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டிருந்தால் மாகாண அமைச்சை எதிர்நோக்காமல் மத்திய அரசாங்கத்தின் உதவியை நேரடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். நான் பாடசாலைகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கிக் கொடுப்பதில் பின்வாங்கியதில்லை. ஆனால், மாகாண அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த நிதியைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டார்கள் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார்.  

கல்வியமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத் திட்டத்தின் கீழ் நானுஓயா நாவலர் கல்லூரியில் 60 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகளைக் கொண்ட ஆரம்ப பிரிவுக்கான வள நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து உ ரையாற்றுகையில்,  

நான் பாடசாலைகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கிக் கொடுப்பதில் பின்வாங்கியதில்லை. ஹற்றன் கல்வி வலயத்தைச் சேர்ந்த போடைஸ் த.ம.வி., கில்லார்னி த,ம.வி., கவரவில த.ம.வி., பொஸ்கோ கல்லூரி ஆகியவற்றுக்கு கோடிக் கணக்கான நிதியை ஒதுக்கிக் கொடுத்திருந்தேன்.ஆனால், மாகாண அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த நிதியைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டார்கள். அதிபர், ஆசிரியர்களை பயமுறுத்திய காரணத்தால் அவர்களும் பயந்து விட்டார்கள். அவ்வாறு தேசியப் பாடசாலை தேவையில்லை என்று கூறிய அதிபர்கள் இன்று ஓய்வு பெற்று விட்டாலும் அவர்கள் சமூகத்துக்கு துரோகம் செய்தவர்களாகவே இருக்கின்றார்கள்.  

எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனி வீட்டுத் திட்டம், அதற்கான காணி அவற்றுக்கான உறுதிப் பத்திரங்கள், பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள், மலையகத்துக்கான தனியான அபிவிருத்தி அதிகார சபை என பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் என்மீதும் விமர்சனம் செய்கின்றவர்கள் இல்லாமல் இல்லை. எனினும் அவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் எனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றேன். இந்திய அரசாங்கம் 40 பஸ்களை யார் வசமாக கொடுத்திருந்தது. எமது மாணவர்களின் நலன்கருதி வழங்கப்பட்ட பஸ்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. அவற்றை விற்று விட்டதாகக் கூறப்படுகின்றது.  

ஹற்றன் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மாதாந்தம் 1500 ரூபா வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இலவசமாக கற்கை நெறிகளை மேற்கொள்ள அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் உதவிகளை வழங்கி வரும் நேரத்தில் அவர்களின் ஏழ்மையையும் பொருட்படுத்தாது அவ்வாறு வசூல் செய்வது முறையற்ற செயல். நான் பதவிக்கு வந்த பிறகு வசூல் ராஜாக்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளேன்.  

மலையகத்தில் சகல வசதிகளையும் கொண்ட ரோயல் கல்லூரி ஒன்றை அமைப்பதே எனது குறிக்கோள். இந்த அரசாங்கத்தின் காலத்தில் முடியாவிட்டாலும் நிச்சயம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியை கைவிடமாட்டேன் என அவர் தெரிவித்தார்.  

ஹற்றன் சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...