ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர்; ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை | தினகரன்

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர்; ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரிக்கை

ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் எச்சரித்து உள்ளது.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்- 2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22 ஆம் திகதி ​ெராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது. கீழ் நோக்கி வந்து கொண்டிருந்த விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூரிலுள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் கவனமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்- 2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.

விக்ரம் லேண்டரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுட்டு வருகின்றனர். நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய தெர்மல் இமேஜ் மூலம் விக்ரம் லேண்டர் சேதம் அடையாமலும் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து கிடக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. லேண்டர் விழுந்துள்ள தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் தொன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள செய்தியில், விக்ரம் லேண்டர் ஆபத்தான இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவப் பகுதிக்கு ஹெராக்கிள்ஸ் ரோபோடிக்கை அனுப்புவதற்கான பணிகளில் தயாராவதற்கு ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தற்போது கனடா மற்றும் ஜப்பானிய விண்வெளி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

 


Add new comment

Or log in with...