சமூக வலைத் தளங்கள் மீது அவதானம் தேவை! | தினகரன்


சமூக வலைத் தளங்கள் மீது அவதானம் தேவை!

இன்றைய நவீன யுகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அபரிமித வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. இவ்வாறான ஒரு வளர்ச்சி முன்னொரு போதுமே இத்துறையில் ஏற்படவில்லை. இதன் விளைவாக 'உலகம் விரல் நுனிகளில்' என்றளவுக்கு நி​ைலமை காணப்படுகிறது.

இவ்வாறு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அடைந்துள்ள வளர்ச்சியால் உலகம் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது போன்று பல தீமைகளும் தோற்றம் பெற்றிருக்கவே செய்கின்றன. அதாவது இந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நோக்கத்துக்கு அமைய பிரதிபலன்கள் அமைவுறுகின்றன. குறிப்பாக இந்த தகவல் தொடல்பாடல் தொழில்நுட்பத்தில் சமூகவலைத்தளங்கள் மிகமுக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

அவற்றில் தகவல்களை விரும்பியபடி விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்துக்கு பரப்ப முடியும். அவற்றில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அதனால் சமூக வலைத்தளங்களையும் குறிப்பாக பேஸ்புக்கையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

கூகுள் நிறுவனத்தின் தகவல்களின்படி 2019 ஆம் ஆண்டில் உலகில் 3.5 பில்லியன் மக்கள் சமூகவலைத்தள பாவனையாளர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் ஆறு மில்லியன் பேர் இலங்கையராவர். அதேநேரம் இவ்வாறு சமூக வலைத்தளங்களைப் பாவிப்பவர்களில் 2.41 பில்லியன் பேர் முகநூல் செயற்பாட்டு பாவனையாளர்களாக 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் காணப்பட்டனர். அதேநேரம் 2018 செப்டம்பராகும் போது இலங்கையில் 5,983,000 பேர் முகநூல் பாவனையாளர்களாக விளங்கினர்.

இந்த தரவுகளின்படி சமூக வலைத்தளங்கள் குறிப்பாக முகநூல் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றிருப்பது நன்கு புலனாகின்றது. இதன் விளைவாக சமூக வலைத்தளங்களை வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடுகளில் தவறான அல்லது பிழையான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதும் அவ்வப்போது இடம்பெறுகின்றன. இதனை இந்த சமூக ஊடகங்களின் இயக்குனர்களும் கூட ஏற்றுக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கூட அவர்கள் முன்னெடுக்கின்றனர்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அம்பாறை மற்றும் திகன, தெல்தெனிய பிரதேசங்களின் வன்முறைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரிதும் பங்களித்தன. இது தொடர்பில் கவனம் செலுத்திய அரசாங்கம் தின தினங்கள் சமூகவலைத்தளங்களுக்கு தற்காலிக தடை விதித்தது. இதேநேரம் அவ்வன்முறைகளுக்கு சமூகவலைத்தளங்கள் துணைபுரிந்ததை அவ்வூடக நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதோடு வன்முறைகளுக்கு துணைபுரியக் கூடிய வகையில் பதிவேற்றப்படும் சகல பதிவுகளையும் நீக்குவதற்கும் தடைசெய்வதற்கும் ஏற்ற வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தொடங்கின.

அரசாங்கத்தினதும் சமூக வலைத்தளங்களின் இயக்குனர்களதும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அந்த வன்முறைகளும் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இதேபோன்று ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரும் மே மாதம் 12, 13 ஆம் திகதிகளின் பின்னரும் சிற்சில தினங்கள் சமூகவலைத் தளங்கள் மீது அரசாங்கம் தற்காலிக தடைகளை விதித்தது. இவற்றினூடாக வன்முறைகள் பெரிதும் கட்டுப்பாட்டு நிலைக்குள் வந்தன.

இதன்படி இன்றைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்கள் குறிப்பாக முகநூல் சமூகத்தில் எந்தளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்த வலைத்தளங்களூடாக குரோதங்களையும் பகைமையையும் விதைத்து வளர்க்கக் கூடிய வெறுப்புப் பேச்சுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை பரப்புவதற்கு நாட்டில் அமைதி சமாதானத்தை விரும்பாத சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. ஏனெனில் இந்த வலைத்தளங்களில் எந்தவொரு விடயத்தையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி பரப்புவதற்கும் வசதியிருப்பதே காரணமாகும்.

இவ்வாறான நிலையில் இந்நாட்டில் ஏழாவது ஜனாதிபத் தேர்தல் இந்நாட்டு மக்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் சுமார் 16, 17 அபேட்சகர்கள் போட்டியிடும் நிலைமை காணப்படுகின்றது.

அதனால் இத்தேர்தலில் சமூக வலைத்தளங்களை குறிப்பாக முகநூலை அதிகம் பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளும் தென்படுகின்றன. ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் வாக்களிப்பு நெருங்கும் காலப் பகுதியிலும் சமூக வலைத்தளங்களின் பாவனை பெரிதும் அதிகரிக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களினூடாக சேறு பூசுதல்கள், பொய்ப் பரப்புரைகள், இன மத ரீதியிலான வெறுப்புப் பேச்சுக்கள், குரோதங்களை வளர்க்கக் கூடிய நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படக் கூடிய அச்சுறுத்தல்களும் நிலவவே செய்கின்றன.

இவை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சமூக வலைத்தளங்களின் குறிப்பாக முகநூலின் இலங்கை, இந்திய பிரதானிகளுடன் நேற்றுமுன்தினம் கலந்துரையாடியுள்ளார். இக்காலந்துரையாடலில் தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்கள் குறிப்பாக முகநூல் ஊடாக தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடுவதற்கும் இச்சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளரின் இநநடவடிக்கை பெரிதும் வரவேற்கத்தக்கதும் காலத்துக்கு தேவையானதும் பொருத்தமானதுமாகும் என்பது தான் மக்களின் கருத்தாகவுள்ளது. சமூக ஊடகங்களைப் பாவித்து குரோதங்களையும் பகைமைகளையும் வளர்க்கும் வகையிலான வெறுப்புப் பேச்சுக்களையும் சேறுபூசும் நடவடிக்கைகளையும் முற்றாக கட்டுப்படுத்துவதற்கு இவ்வகை நடவடிக்கை பெரிதும் வழிவகுக்கும். நாட்டின் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களும் தேர்தல் அமைதியாகவும் நீதி நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுவதற்கு இவ்வகையான நடவடிக்கைகள் பெரிதும் பக்கபலமாக அமையும்.தேர்தல் ஆணையாளரின் இவ்வகை நடவடிக்கைகளுக்கு நாட்டின் அமைதி சமாதானத்தை விரும்பும் அனைத்து மக்களும் உதவி ஒத்துழைப்புக்களை நல்குவது இன்றியமையாததாகும்.


Add new comment

Or log in with...