கோட்டாபயவை தோற்கடிக்க உரிய வேட்பாளரை தகுந்த தருணத்தில் களமிறக்குவோம் | தினகரன்


கோட்டாபயவை தோற்கடிக்க உரிய வேட்பாளரை தகுந்த தருணத்தில் களமிறக்குவோம்

2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க உரிய நேரத்தில் பொருத்தமான முடிவை எடுத்தது போன்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவையும் தோற்கடிக்கக் கூடிய வேட்பாளரை உரிய தருணத்தில் களமிறக்குவோம் என   பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பலரும் பேசுகிறார்கள்.  

பொதுஜன பெரமுனவினர் அவசர அவசரமாக கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து, தற்போது எமது வேட்பாளர் தொடர்பாக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.  

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை யாரும் மறந்துவிட வேண்டாம். அப்போது, மஹிந்த ராஜபக்ஷ தனது வெற்றி உறுதியாகிவிட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினராகிய எமது தரப்பு வேட்பாளர் தயாராக இல்லை என்றும் கூறிவந்தார்.  

நாம் இறுதி நேரத்தில்தான் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கினோம் ஆனால், அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றோம்.  

தற்போதும், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கிறார்கள்.

எனவே, நாம் எதற்கும் அச்சப்படமாட்டோம். கடந்த நான்கரை வருடங்களாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளோம்.  

எம்மால் அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தார்.  

எமது தலைவர், எமது கட்சியினர் என அனைவர் மீதும் அவர் குரோதத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வந்தார்.  

ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் களமிறங்க சுதந்திரக் கட்சியினரின் ஆலோசனைகளையும் அவர் பெற்று வருகிறார். அவருக்கு தற்போது பதவி ஆசை வந்துவிட்டது என்றார். 

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)    


Add new comment

Or log in with...