எழுத்தாளரும் சொல்வான்மையாளருமான புனிதர் ‘பொன்வாய்’ அருளப்பர் | தினகரன்


எழுத்தாளரும் சொல்வான்மையாளருமான புனிதர் ‘பொன்வாய்’ அருளப்பர்

திருச்சபையின் முக்கிய எழுத்தாளரான  ஜோன் கிறிசோஸ்தம் என்பவரை அழகிய தமிழில் ‘பொன்வாய் அருளப்பர்” என அழைப்பதுண்டு. கி.பி. 349ம் ஆண்டு பிறந்து செப்டெம்பர் 14, 407ம் ஆண்டில் மரித்த இவர் திருச்சபையின் அருட் தந்தையரில் முக்கியமானவர்.  

திருச்சபை மற்றும் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராடியவர் இவர், இவரது சொல்வன்மையினால் இவரை “பொன்வாய்” அருளப்பர் என அழைத்தனர்.

திருவழிபாட்டு முறைமைகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என வகுத்தவர். மிகச் சிறந்த எழுத்தாளராகிய இவரது நூல்கள் பல இன்றும் புகழப்பட்டு வருகின்றன.  

புனித அகுஸ்தீனாருக்கு அடுத்தபடியாக இவருடைய எழுத்துக்களே அதிகமான முக்கித்துவம் பெற்றவை.

இவற்றை கத்தோலிக்க கீழைத்தேய மரபு வழுவா சபையினர், அங்கிளிக்கன், லூத்தரன் திருச்சபைகள் போற்றிப் பேணுகின்றனர்.

புனித கிரகோரி நசியான்சென், புனித மகா பசில் ஆகியோருடன் இணைந்து முப்பெரும் தலைவர்களில் ஒருவராக இவர் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.  

கிறிசோஸ்தம் தம் பிரசங்கங்களால் மக்கள் மத்தியில் மிகச் செல்வாக்கு பெற்றார். குறிப்பாக இவர் அந்தியோக்கியாவில் பணியாற்றிய 12 ஆண்டுகளில் வேதாகமம் பற்றிய இவரது பேருரைகள் புகழ்வாய்ந்தவை.   ‘ஒரு கிறிஸ்தவனிடம ஆமோஸ் யாரென்றோ, ஒபாதியா யாரென்றோ கேட்டால் அவன் விழிப்பான். ஆனால் சக்கரவர்த்தியின் பரிவாரத்தில் எத்தனை குதிரைகள் இருக்கின்றன என்று கேட்டால் மிகச் சரியாக பதிலளிப்பான்” என வேதாகம அறிவற்ற கிறிஸ்தவர்களைக் கண்டித்தார்.   ஏழைகள் பால் மிக இரக்கம் கொண்டவர். பணக்காரர்களது பொறுப்பற்ற வாழ்க்கையை கடுமையாக எதிர்த்தார். “நீ கிறிஸ்துவின் உடலை மதிக்க தவறுகிறாய். அவர் நிர்வாணமாய் இருப்பதை கண்டுகொள்ள மறுக்கிறாய்.  

அவரது உருவத்திற்கு ஆலயத்தில் பட்டாடை அணிந்து பெருமைகொள்கிறாய். ஆலயத்திற்கு வெளியே அவர் குளிரிலும் ஆடையில்லாலும் அவதிப்படுகின்றார்.

“இது என் உடல்” என்று சொன்ன அதே கிறிஸ்து “என் சின்னஞ்சிறு சகோதரர்களில் செய்தது எனக்கே செய்தாய்” என்றும் கூறினார்.   “நற்கருணை பீடம் பொற் பாத்திரங்களால் நிறைந்திருக்க உன் சகோதரன் பசியால் சாகலாமா? முதலில் போய் பசியாய் இருப்பவனுக்கு உணவு கொடு. பின்னர் ஆலயத்தை அலங்கரிககலாம்” என்று கடுமையாக சாடியவர்.   பைபிள் வசனங்களுக்கு தத்துவார்த்தமாக அல்லாமல் அன்றாட வாழ்வின் அர்த்தங்களால் விளக்கம் கொடுப்பார்.  

கி. பி. 397ம் ஆண்டு அருளப்பர் கொன்ஸ்தாந்திநோப்பிள் பேராயராக நியமனம் பெற்றார். உடனே அவர் வரவேற்பு வைபவங்களையும் மறுத்தார்.

இதனால் சமுதாயத்தின் உயர் மட்டத்தினரது, குறிப்பாக அரசியாரது வெறுப்பை சம்பாதித்தார்.  ஆனால் ஏழை எளிய மக்களோ அவரை வரவேற்றனர். இதுபோல குருக்களது தேவையற்ற பயணங்களையும் ஆடம்பரச் செலவுகளையும் அவர் கட்டுப்படுத்தியதால் அவர்களது கடும் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது.  

சகோ. டிவோட்டா                 


Add new comment

Or log in with...