திருமணம் என்பது புனிதமான உடன்படிக்கை | தினகரன்


திருமணம் என்பது புனிதமான உடன்படிக்கை

அருட்தந்தை ஜெயசீலனின் மறையுரையிலிருந்து.... 

ஆலயங்களில் இறை சன்னதியில் திருமணம் செய்துகொள்வோரை நான் வாழ்த்துகிறேன்.

இக்காலங்களில் பலர் ஆலயங்களில் திருமணம் செய்ய வேண்டுமா? ரெஜிஸ்டர் காரியாலயத்தில் திருமணம் செய்துகொண்டாலே போதுமே என்ற மன நிலையுடன் உள்ளனர். அப்படித்தான் அநேகமான திருமணங்கள் நடக்கின்றன.  

சிறந்த விசுவாசத்தில் வாழும் குடும்பங்கள், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களின் விருப்பம் மற்றும் தீர்மானத்திற்கமைய ஆலயங்களில் இறை மக்கள் முன்னிலையில் இறைவனை சாட்சியாக வைத்து திருமணம் செய்கின்றார்கள். அத்தகைய சிறந்த தீர்மானங்களுக்குப் பாராட்டுக்கள். 

நாம் வாழும் சமுதாயம் குறிப்பாக, நாம் கையாளும் தொடர்பு சாதனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் திருமணத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் வழங்குவதைக் காண முடிகின்றது.  

திருமணம் என்பது வெளியடையாளம் மட்டுமே என்ற போர்வையில் அவை அமைந்துவிடுகின்றன. 

சிலரிடம் நாம் "எப்போது திருமணம் முடித்தீர்கள்?" எனக் கேட்டால், "எனக்கு அந்த விபத்து நடந்து பத்து வருடமாகிறது” என்பார்கள். திருமணத்தை அவர்கள் விபத்தாகவே பார்க்கின்றனர். நடக்கவே கூடாதது நடந்து விட்டது என்பதைப் போல பெரும் சலிப்புடன் அவ்வாறு தெரிவிப்பர்.  

திருமணம் முடித்து 25 வருட நிறைவைக் கொண்டாடிய ஒரு தம்பதியினர் இவ்வாறு பேசிக் கொண்டதைக்  கேட்க  முடிந்தது. அன்றைய தினத்தில் கணவரின் கண்ணிலிருந்து கண்ணீர் சொட்டுவதைக்கண்ட மனைவி 'ஏன் உணர்ச்சிவசப்பட்டு விட்டீர்களா" எனக் கேட்டார். 

அதற்கு கணவர் “இல்லை இல்லை கடந்த 25 வருடங்களுக்கு முன்பு. நான் உன்னைத் திருமணம் செய்யாவிட்டால் என்னை ஜெயிலில் போடப்போவதாக என் தந்தை பயமுறுத்தினார். அதனால்தான் நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்.

திருமணம் செய்யாதிருந்தால் நான் இப்போது அனுபவிக்கும் ஜெயில் வாழ்க்கை இன்றோடு முடிவுக்கு வந்திருக்கும். அதனை நினைத்தே கண்ணீர் விட்டேன்" என்றார் கணவர். இது போன்ற சம்பவங்கள் திருமணத்தை கொச்சைப்படுத்துபவையாகவே அமைகின்றன.

இலங்கையில் தினமும் 300 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. அதில் 80 வீதமானவை பெண்களாலேயே தாக்கல் செய்யப்படுகின்றன. திருமண வாழ்க்கை பலருக்கு நரகமாகிவிட்டதையே காண முடிகின்றது. இது நாம் எதிர்கொள்ளும் ஒரு பயங்கரமான நிலைமை.

எமது நாடு போன்ற ஒரு சிறிய நாட்டில் 300 பேர் தினமும் விவாகரத்து செய்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.

திருமண வாழ்க்கையிலே அவர்களுக்கு ஒரு திருப்தியில்லாத நிலை இருக்கலாம். அதைவிட ஒரே வீட்டுக்குள்ளேயே விவாகரத்து போன்று கணவனும்- மனைவியும் பிரிந்து வாழும் நிலையையும் சமூகத்திலே காண முடிகின்றது. திருமணத்தை ஒரு ஜெயில் அல்லது விபத்து என நாமே கிரகித்துக் கொள்ளும் நிலை இது. 

குறிப்பாக நாம் பார்க்கும் தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் எமக்குக் காட்டும் விதமும் இதுதான். வட இந்திய நாடகங்கள் சில மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன.

அவைகளில் பெரும்பாலானவை இவ்வாறுதான் உள்ளன. அவை சரியென எமக்கு உணர்த்துவதை எடுத்துக் கொண்டு நாம் எமது வாழ்விலும் அதனை சரி என தீர்மானிக்கின்றோம். 

இந்த நிலையில் திருமணம் தொடர்பில் திருச்சபை உணர்த்தும் மாண்பை நாம் கடைப்பிடிக்க சில வேளைகளில் தவறிவிடுகின்றோம். திருச்சபை திருமணத்தை ஒரு விபத்தாக அன்றி புனிதமானதாக கற்பிக்கின்றது.

திருமணத்தை ஏற்படுத்தியவர் இறைவன். முதல் திருமணத்தை நடத்தி வைத்தவரும் அவரே. 

திருமணம் ஒரு அருட்சாதனம் என திருச்சபை எமக்குக் கூறுகிறது. திருமணத்தை தொடங்குபவரும் நடத்திவைப்பவரும் இறைவன் என்பதால் அது ஒரு மாண்பு மிக்க அருட்சாதனமாக உள்ளது. திருமண வழ்வு இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு உன்னத அமைப்பு. அது மிக பலமானது. 

எங்கோ வாழும் இருவர் ஒன்றிணைந்து திருமண பந்தத்தில் இணைகின்றனர். கடவுளால் அது ஆசீர்வதிக்கப்படுகிறது. திருமணம் கடவுளால் தரப்படும் ஒருகொடை. 

திருமணத்தை ஒரு உடன்படிக்கையாகத் திருச்சபை தருகிறது.

ஒப்பந்தமல்ல. உடன்படிக்கை. ஒப்பந்தங்கள் இரு சாராருக்கிடையில் செய்யப்படுவது. அதில் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டு ஒரு தரப்பால் அது மீறப்பட்டால் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.

உடன்படிக்கை என்பது அவ்வாறல்ல.மாறாக அது மீறப்பட்டாலும் ஏதாவது ஒரு வழியில் அதனை மீளமைக்க முடியும். அதற்காக இணக்கம் காணப்பட்டு மீண்டும் தொடர முடியும்.   பழைய ஏற்பாட்டில் அன்று இஸ்ராயேல் மக்களுக்கும் இறைவனுக்கும் இடையில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆண்டவர் மக்களைப் பாதுகாப்பார் அன்பு செய்வார். அவர்களை வழிநடத்துவார் என்பது ஒரு தரப்பு உடன்பாடு.

மறுபக்கம் கடவுளுக்கு கீழ்ப் படிவது அவரை அன்பு செய்வது அவரை மட்டுமே வணங்க வேண்டும் என்பது நியமங்களாகும். இந்த உடன்படிக்கையை அந்த மக்கள் மீறுகிறார்கள். எனினும் கடவுள் அவர்களை விட்டுவிடவில்லை. 

நாம் திருமணத்தை ஒரு ஒப்பந்தமாகப் பார்த்தால் பிரச்சினைகள் வரும்போது அதிலிருந்து விடுபட்டு விடுவோம். அது போன்றே தற்போது சமூகத்தில் இடம்பெறுகிறது. திருமணத்தை ஒரு உடன்படிக்கையாகப் பார்த்தோமானால், அது பிரச்சினைகளை சமாளித்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வழிவகுக்கும்.  இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் நாம் பிரியாதிருப்போம் என்பதே கிறிஸ்தவ திருமண உடன்படிக்கை. அது மதிக்கப்பட வேண்டும். ஒருவர் ஒருவரை மதித்து வாழ்தல். அன்பு செய்து பிரமாணிக்கமாக வாழ்தல் இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கமாகும். இதனை மனதில் பதித்து வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால் திருமண வாழ்க்கை ஆசீர்வாதமாகும். 

“கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என நற்செய்தி போதிக்கின்றது. அதன் வழி நாம் இணைந்து வாழ்ந்தால் இறைவனின் ஆசீர்வாதம் எமக்குஅதிக அதிகமாகக் கிடைப்பது உறுதி.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...