ஏழைகளின் கண்ணீர்! | தினகரன்


ஏழைகளின் கண்ணீர்!

ன்று தசாப்த காலமாக நாட்டில் நீடித்த யுத்தம் முற்றாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு தசாப்த காலம் உருண்டோடி விட்டது. யுத்தம் ஓய்ந்து போன இன்றைய சூழல் குறித்து நாட்டு மக்களில் கூடுதலானோர் நிம்மதி கொள்கின்றார்கள்.

உயிர் அச்சம் இன்றி பாதுகாப்பாக இக்காலத்தில் வாழ முடிவதாக அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். நடந்து முடிந்த கொடிய யுத்தத்தைப் போன்று எதிர்காலத்தில் இனிமேலும் உள்நாட்டுப் போரொன்று மீண்டும் வெடிக்கக் கூடாதென அம்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

உண்மையில் கடந்த கால யுத்தத்தின் கொடுமைகளை நேரில் அனுபவித்தவர்களுக்கே அதன் துன்பமும் வேதனையும் புரியும். போர்ச் சூழலில் உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் வேதனைகள் இன்னுமே தீரவில்லை. வீடுவாசல்களையும் உடைமைகளையும் இழந்து, எங்கெல்லாமோ சிதறுண்டு போய் வாழ்பவர்களால் இன்னும்தான் பொருளாதாரக் கஷ்டங்களில் இருந்து மீண்டெழ முடியாமல் இருக்கின்றது. இவர்களெல்லாம் முப்பது வருட யுத்தத்தின் வீழ்ந்து போனவர்கள். யுத்தம் ஏற்படுத்திச் சென்ற துயரவடுக்களின் அடையாளமே இவர்கள்!

கடந்த கால யுத்த சூழலையும், இன்றைய அமைதிச் சூழலையும் நாட்டு மக்கள் இப்போதும் கூட ஒப்பீடு செய்து பார்ப்பதுண்டு.

யுத்தம் நீங்கிய இன்றைய அமைதிச் சூழலை நினைத்தும், நகரப் பகுதிகள் அடைந்துள்ள அபிவிருத்திகள் பற்றியும் மட்டுமே அவர்களது பார்வை இருக்கின்றது. இவர்களெல்லாம் தங்களுக்கு சாதகமான பக்கங்களை மாத்திரமே பார்க்கின்றார்கள். மகிழ்ச்சியும், நிம்மதியும் கொண்ட பக்கங்களை மாத்திரமே புரட்டிப் பார்த்து நிம்மதி கொள்கிறார்கள்.

யுத்தம் ஏற்படுத்திய நிம்மதியின் மறுபக்கம் எவ்வாறானதென நினைத்துப் பார்க்க கடந்த பத்து வருட காலத்தில் பெரும்பாலானோர் முற்பட்டதில்லை. அதாவது யுத்த வெற்றியின் அடுத்த பக்கமான பாதக விளைவுகள் எவ்வாறுள்ளன என்பதைப் பற்றிய ஆய்வுக்கு இவர்கள் முற்பட்டதில்லை. அவ்வாறு ஆராய முற்படுவோமானால் இன்றைய அமைதிச் சூழலில் வாழ்வது குறித்து நிம்மதியடைகின்ற அதேசமயம், போர்ச் சூழலினால் நலிவுற்றுப் போய் இன்னுமே அவலத்தில் வாழ்கின்ற ஒரு பகுதி மக்களின் வேதனை பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கும்.

யுத்தம் விளைவித்த அவலங்களை ஒருபோதும் நாம் நகரங்களில் இருந்து கொண்டு அறிந்து கொள்ள முடியாது. அத்துன்பங்களை அறிய வேண்டுமானால் வடக்கு, கிழக்கின் பின்தங்கிய கிராமங்களுக்கே செல்ல வேண்டும். அவைதான் யுத்தம் ஏற்படுத்திச் சென்ற மாறாத அவலங்களுக்குரிய ஆதாரங்களாக இன்றும் விளங்குகின்றன. வடக்கே வன்னியிலும் கிழக்கே மூன்று மாவட்டங்களின் பின்தங்கிய கிராமங்களுமே யுத்தக் கொடுமைகளுக்கான சான்றுகளாகும். வீடமைப்பு, சுயதொழில் உதவிகள், இழப்பீடு போன்றவையெல்லாம் ஒரு பகுதி மக்களை மட்டுமே சென்றடைந்திருக்கின்றன. அவற்றை மட்டும் வைத்துக் கொண்டே யுத்தத்துக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த அத்தனை அரசாங்கங்களும் பெருமிதப்பட்டுக் கொண்டன.

யுத்தத்தினால் துன்பத்துக்குள் வீழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களுக்காக அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் சிறுமைப்பட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளெல்லாம் தங்களுக்கு அநுகூலமான பக்கங்களை மாத்திரமே புரட்டுகிறார்கள். நாட்டுக்குக் காட்சிப்படுத்துகிறார்கள்; பெருமிதம் கொள்கிறார்கள்.

வன்னியின் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்துக்கும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் தொலைதூரக் கிராமங்களுக்கும் சென்றோமென்றால் வறுமையினதும் இழப்புகளினதும் உண்மையான வலி எமக்குப் புரியும்.

இன்று அங்கே வாழ்பவர்கள் யுத்த காலத்துத் தலைமுறையினர் மாத்திரம் அல்லர். யுத்த காலத்துக்கு அடுத்தபடியான தலைமுறையினரும் மோசமான வறுமை நிலைமையிலேயே வாழ்கின்றனர். யுத்தத்தின் விளைவானது அடுத்த தலைமுறை மக்களையும் விட்டு வைக்கவில்லை என்பதே இதன் பொருள்.

கால்நடைகள் தங்குவதற்கே பொருத்தமான குடிசைகளிலும் கொட்டில்களிலும் வாழ்வோர் அங்கெல்லாம் அதிகம். அன்றாட வருமானம் எதுவுமேயின்றி, வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக மற்றையோரிடம் கையேந்தி வாழ்வோர் பலர்.

இதேசமயம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் நலிவுற்ற மக்களில் பலரைச் சென்றடையவில்லையென்ற குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக நிலவுகின்றது.போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர் பலர் தங்களது பிள்ளைகளை இழந்து அநாதரவாக அங்கெல்லாம் வாழ்ந்து வருகின்றனர். உழைப்பாளிகளான பிள்ளைகளை அவர்கள் இழந்து விட்டனர். எந்த வருமானமும் அவர்களுக்குக் கிடையாது.

ஆனால் முதியவர்களுக்கும், தனிமையாக வாழ்வோருக்கும் வீட்டுத் திட்டங்கள் போய்ச் சேரவில்லையென்ற குற்றச்சாட்டு முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது. வீடமைப்பு உதவிகளை மாத்திரமன்றி ஏனைய அரசாங்க நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொள்வதிலும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

யுத்தத்தினால் பிள்ளைகளையும் ஏனைய உறவினர்களையும் பறிகொடுத்து தனிமையில் வறுமையுடன் போராடுகின்ற முதியவர்கள் பலர் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேற்றம் என்பதன் பேரில் தாங்கள் மீண்டும் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்ட போதிலும், அரசாங்க உதவிகள் தங்களுக்குக் கிடைப்பதில்லையென அவர்கள் கூறுகின்றனர். அதாவது தனிமையில் வாழ்வதைக் காரணம் காட்டி அரசாங்க உதவிகள் வழங்கப்படுவது தட்டிக்கழிக்கப்படுவதாக அவர்கள் வேதனைப்படுகின்றனர்.

வீட்டுத் திட்டங்களுக்கு பயனாளிகளைத் தெரிவு செய்யும் வேளையில் புள்ளியிடல் முறை பின்பற்றப்படுகின்றது. அவ்வேளையில் அதற்கு தாங்கள் உள்வாங்கப்படுவதில்லையென அவர்கள் கூறுகின்றனர்.

இவையெல்லாம் பெரும் பரிதாபக் கதைகள். அவர்களும் இந்த மண்ணின் மக்களேயாவர். இன்றைய அவலத்தை அவர்கள் தாங்களாகவே வலிந்து ஏற்படுத்திக் கொண்டதில்லை. அம்முதியவர்கள் யுத்தத்தில் சம்பந்தப்படாதவர்கள். ஆனால் கொடிய யுத்தமே அவர்களை இத்துன்பத்தினுள் தள்ளியது.

இவ்வாறு துன்புறும் மக்களை அலட்சியப்படுத்துவது கொடுமை! இவர்களை கைதூக்கி விடும் விசேட திட்டங்கள் அவசியம். அம்மக்களை அரசியல்வாதிகள் எட்டியும் பார்ப்பதில்லையென்பது மற்றொரு வேதனையான விடயம். ஏழைகளின் கண்ணீரை அலட்சியப்படுத்துவது நியாயமல்ல.


Add new comment

Or log in with...