மாயா ஜாலத்தால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது | தினகரன்


மாயா ஜாலத்தால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நாட்டுக்காக இதனைச் செய்வோம் அதனைச் செய்வோம் என மாயாஜாலம் காண்பிப்பவர்களால் நாட்டை கட்டியெழுப்புவது இயலாத காரியம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பதுவது என்பது வெறுமனே மாயாஜாலம் காண்பிப்பது போன்று அல்ல. உண்மையான நோக்கத்துடன் அர்ப்பணிப்பான துறைசார் நிபுணர்களின் உதவிகளையும் பெற்றுக்கொண்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'தேசிய மக்கள் சக்தி' மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் என்பது மோசடிக்காரர்களையும், நாட்டுக்கு சௌபாக்கியத்தை வழங்குபவர்களையும் தீர்மானிக்கும் தேர்தலாக அமையவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி சௌபாக்கியமான பாதையைத் தெரிவுசெய்யும் தரப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் எந்தவொரு நாட்டையும் எவராலும் கட்டியெழுப்ப முடியாது. மிகவும் சிறிய, சனத்தொகை குறைந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். கீழ் மட்டத்தில் உள்ளவர்களை சரியாகப் பணியைச் செய்யுமாறு கூறி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

நாட்டின் முதுகெலும்பைப் பாதித்திருக்கும் ஊழல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். நாட்டின் பல பகுதிகளில் ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சகல இடங்களுக்கும் ஹெலிக்கொப்டர்களில் சென்று வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கூட்டமொன்றுக்குச் செல்வதாயின் 45 நிமிடங்களில் ஹெலிகொப்டரில் சென்றுவிடலாம்.

இரண்டு மணித்தியால கூட்டமாயின் அதனை முடித்துக்கொண்டு 2.45 மணித்தியாலத்தில் கொழும்பு திரும்பிவிடலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் ஏன் ஒவ்வொரு இடத்திலும் ஜனாதிபதி மாளிகைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சில ஜனாதிபதி மாளிகைகளில் வருடமொன்றுக்கு ஆகக் குறைந்தது இரண்டு இரவுகள் கூட எவரும் தங்கியிருக்கவில்லை.

இந்த ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்கு 100ற்கும் அதிகமான காவலாளிகள், வளவுகளைச் சுத்தம் செய்ய நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எனப் பலர் பணியாற்ற வேண்டியுள்ளது.

எமக்கு ஒருமுறை அதிகாரத்தை வழங்கிப்பாருங்கள் இந்த மாளிகை அனைத்தையும் பொதுமக்கள் சொத்துக்களாக மாற்றிக் காண்பிக்கின்றோம்.

அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதிகளின் பாரியார்களையும் அரசாங்கத்தின் செலவில் பராமரிக்க வேண்டியுள்ளது. பொது மக்களின் பணம் வீணாகச் செலவு செய்யப்படுகிறது.

இந்தச் செலவுகள் அனைத்தையும் குறைத்து, இதற்காக விசேட கொடுப்பனவை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...