முடிவின்றித் தொடரும் முரண்பாட்டு அரசியல்! | தினகரன்


முடிவின்றித் தொடரும் முரண்பாட்டு அரசியல்!

முரண்பாடான விவகாரங்களை வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசியல் நடத்துகின்ற கலாசாரம் எமது நாட்டில் நெடுங்காலமாகவே தொடர்ந்து வருகின்றது. இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரம் கடந்த 1983ம் ஆண்டு ஜூலையில் இடம்பெற்ற வன்செயலுக்குப் பின்னர் தீவிரமடைந்ததையடுத்து, நாட்டின் பிரதான இரு தேசியக் கட்சிகளும் இனமுரண்பாட்டை வாய்ப்பாகப் பயன்படுத்தியே தங்களது அரசியலை நடத்தி வந்திருக்கின்றன.

1983 வன்செயலையடுத்து வடக்கு, கிழக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்ட இயக்கங்களை உருவாக்கிக் கொண்டதையடுத்து, இலங்கை அரசியலின் முக்கிய அம்சமாக இனவிவகாரம் இடம்பிடிக்கத் தொடங்கியது.

தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மேற்கொண்டு வந்த மோசமான தாக்குதல்கள் மற்றும் அதன் விளைவாக பெரும்பான்மையின சமூகத்துக்கும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளையெல்லாம் அந்தந்த வேளையில் அதிகாரத்தில் வீற்றிருந்த அரசாங்கங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்வதை எதிரணிகள் ஒருபோதுமே தவற விட்டது கிடையாது.

தமிழ் இயக்கங்களின் வன்முறை செயற்பாடுகள் ஒவ்வொன்றுமே அரசுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்திருந்தன. தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் பெரும்பான்மை இனத்தை அழித்தொழிக்க முற்படுவதாக சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிரான தேசிய எழுச்சியொன்றை உருவாக்கி, அதன் மூலம் சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது மட்டுமே எதிரணிகளின் நோக்கமாக இருந்து வந்தது.

இனமுரண்பாட்டின் தொடர்ச்சியாக நாட்டில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமையைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது மாத்திரமே, அடுத்தடுத்து எதிரணியில் வீற்றிருந்த தேசியக் கட்சிகளின் ஒரே நோக்கமாக இருந்தது.இனப்பிரச்சினைத் தீயில் குளிர் காய்கின்ற சுயநலவாத அரசியல் போக்கை இறுகப் பற்றிப் பிடித்தபடியே எதிரும்புதிருமான இரண்டு தேசியக் கட்சிகளும் தங்களது அரசியலை நகர்த்தி வந்திருக்கின்றன. தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்போமென்ற இதய சுத்தியான எண்ணத்தை எந்தவொரு கட்சியுமே கொண்டிருக்கவில்லை.

அவ்வாறு இரு கட்சிகளுமே உண்மையில் நினைத்திருக்குமானால் எமது தேசம் முப்பது வருட காலமாக பெரும் அழிவைச் சந்தித்திருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கவே மாட்டாது. இளைஞர்கள் ஆயுதமேந்தியதற்கான காரணங்கள் ஆரம்பித்திலேயே கண்டறியப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் காணப்பட்டிருக்குமானால் இத்தனை அழிவுகளையும் தடுத்து நிறுத்தியிருக்க முடிந்திருக்கும். இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளும் இத்தனை மோசமாக வளர்ந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்க மாட்டாது.

ஆனால் எமது அரசியல் கட்சிகளிடம் ‘அரசியல் தர்மம்’ என்பது இருந்ததில்லை. முரண்பாடுகள் அற்ற நிம்மதியான தேசமொன்றை உருவாக்க அக்கட்சிகள் ஒருபோதுமே விரும்பியதில்லை. இனவாதத்தீயை வளர்ப்பதிலேயே அக்கட்சிகள் குறியாக இருந்தன. அதுவே அரசியலுக்கான வாய்ப்பாகவும் இருந்தது. அரசியல் கட்சிகளே முரண்பாடுகளை எண்ணெய் வார்த்து பெருந்தீயாக வளர்த்துள்ளன என்றும் கூறலாம். இதனாலேயே இனப்பிரச்சினையானது எமது நாட்டின் தேசிய அசியலுடன் இரண்டறக் கலந்து போனது.

இவ்வாறிருக்கையில், உள்நாட்டுப் போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னராவது இனமுரண்பாட்டு அரசியலும் முடிவுக்கு வந்து விடுமென்றே பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது. புலிகள் இயக்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர், நாட்டில் இனிமேல் வன்முறை மீண்டும் இடம்பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே தீவிரவாதத் தாக்குதல்களையோ அல்லது இனப்பிரச்சினை விவகாரத்தையோ துரும்பாகப் பயன்படுத்தி இரண்டு தேசியக் கட்சிகளும் அரசியல் பிழைப்பு நடத்துகின்ற போக்கு முடிவுக்கு வந்து விட்டதென்றே பலரும் எண்ணியிருந்தனர்.

ஆனால் அவ்வாறு எதுவுமே நிகழவில்லை. புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்பட்டு தீவிரவாத வன்முறைகளும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் ‘இனமுரண்பாட்டு அரசியல்’ நாட்டில் முடிவுக்கு வந்தபாடாக இல்லை.அவை வேறொரு பரிமாணத்துக்கு மாற்றமடைந்து விட்டன எனக் கூறுவதே பொருத்தமாகும்.

‘யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த வெற்றி நாயகர்கள்’ என்ற அடையாள முத்திரையைப் பயன்படுத்தியபடி ஏகபோக அரசியல் நடத்தும் போக்கில் ஸ்ரீலங்கா சுதநதிரக்கட்சி செயற்படத் தொடங்கியது. அவ்வாறானதொரு வெற்றி முழக்கமானது 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் வரை சுதந்திரக் கட்சிக்கு நன்றாகவே கைகொடுத்தது எனலாம்.

சிங்கள இனத்தின் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிரான இன உணர்வைத் தூண்டிவிடுவதன் மூலம் எழுச்சிமிகு அரசியலை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சுதந்திரக் கட்சியினால் இயலுமாக இருந்தது. யுத்தவெற்றியை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தினராவர்.

யுத்த வெற்றி முழக்கத்துடன் 2015 ஜனவரி வரை அவர்களால் அரசியல் நடத்த முடிந்தது. அதே போன்று 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான செயற்பாடுகளை அரசியலில் முன்னெடுப்பதற்கும் யுத்தவெற்றியே அவர்களுக்குக் கைகொடுத்தது எனலாம். 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலிருந்து இன்றைய தினம் வரை புதிய அரசியல் யாப்பொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளதென்றால் அதற்கான பிரதான காரணம் எதிரணியினரின் செயற்பாடுகள்தான் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அதாவது, முரண்பாட்டு அரசியலே இன்றுவரை அரசியல் பயணத்துக்கு கைகொடுத்து வருகின்றது.

இன்று நாட்டின் பிரதான கட்சிகளெல்லாம் தேர்தல் களத்தில் இறங்கித் தயாராக நிற்கின்றன. யுத்தவெற்றியானது பத்து வருடங்களுக்குப் பின்னர் தூசு தட்டி எடுக்கப்படுவது தெரிகின்றது. யுத்தவெற்றிக்கு மீண்டும் உயிரூட்டுவதானது நாட்டில் பேரினவாத எழுச்சியை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் நிலவுகின்றது. இனமுரண்பாட்டு அரசியலின் ஒரு வடிவமே ‘யுத்த வெற்றிக் கோஷம்’ என்பது அப்பட்டமாகவே தெரிவிகின்றது.

இனமுரண்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் கலாசாரம் எமது நாட்டில் என்றுதான் முடிவுக்கு வரப் போகின்றது என்பதே சிறுபான்மை மக்களின் கவலையாக இருக்கின்றது.


Add new comment

Or log in with...