பிரதமர் விட்டுக் கொடுத்து சஜித்தை வேட்பாளராக அறிவிப்பார் | தினகரன்


பிரதமர் விட்டுக் கொடுத்து சஜித்தை வேட்பாளராக அறிவிப்பார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விட்டு கொடுத்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவர் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவுகளை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் விட்டு கொடுப்பு செய்வதன் மூலம் அவருடைய நிலை உயர்வடையுமே தவிர கீழிறங்காது என்று கூறிய அவர்,

இந்த விட்டு கொடுப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் பாதுகாக்கப்படும். இந்த விட்டு கொடுப்பை செய்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதையே மலையக மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.  

தலவாக்கலை லோகி தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் மூலமாக வீடுகளுகளுக்கான சமயலறை பொருட்களும், அத்தியாவசிய பொருட்களும் சுமார்  25,000 ரூபாவுக்கு பெறுமதியான பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவர் மேலும் தெரிவித்ததாவது, 

இன்று ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர் இது எல்லாம் உச்ச கட்டத்தில் இருக்கின்றது. இரண்டு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்ற நிலையில் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.   இவ்வாறான ஒரு நிலையில் சஜித் பிரேமதாச மக்கள் ஆதரவு கூட்டங்களை நடத்தி வருகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவார் என்று உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியான முடிவை எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பங்காளி கட்சிகளும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.  

ஹட்டன் சுழற்சி நிருபர் 


Add new comment

Or log in with...