ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பிரதமர் கூறவில்லை | தினகரன்


ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக பிரதமர் கூறவில்லை

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தாம்  களமிறங்கவுள்ளதாக பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லையென அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

கொழும்பில்  நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.தே.கவின்  ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளதாக வெள்ளிக்கிழமை வெளியான பத்திரிகைகளில் பிரதான செய்தியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. ஐ.தே.கவின் சிரேஷ்ட தலைவர்களுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. அது  தொடர்பில் தெளிவு படுத்திய அமைச்சர் கபீர் ஹாசிம் அதனை நிராகரித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, பிரதமருடனான சந்திப்பில் பொறுத்தமான ஜனாதிபதி  வேட்பாளர் யார் என்பது தொடர்பாகவே பேசப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க,  வேட்பாளராக களமிறங்குவேன் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.  

இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித்  பிரேமதாஸவுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...