மொட்டுச் சின்னத்தை மாற்றும் சு.க ​யோசனையை கோட்டாபய நிராகரிப்பு | தினகரன்


மொட்டுச் சின்னத்தை மாற்றும் சு.க ​யோசனையை கோட்டாபய நிராகரிப்பு

மொட்டு சின்னத்தைக் கைவிட்டு, வேறோரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது மொட்டு சின்னத்தை மாற்றி, வேறொரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வலியுறுத்தியிருந்தார். அத்துடன், பொதுஜன பெரமுனவுடனான கூட்டணிப் பேச்சுகளில் இது குறித்து சு.கவின் தரப்பில் நிபந்தனைகளும் வைக்கப்பட்டுள்ளன.  

மொட்டு சின்னத்துக்கு மாற்றுச் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி சு.கவின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், ஆரம்பத்திலேயே பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ ஆகியோர் அதனை நிராகரித்திருந்ததாக அறிய வருகிறது 

கடந்தவாரம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த விவகாரத்தை தயாசிறி ஜயசேகர மீண்டும் கையில் எடுத்திருந்தார். எனினும், சின்னத்தை மாற்றுகின்ற பேச்சுக்கே இடமில்லையென கோட்டாபய ராஜபக்ஷ, நிராகரித்துள்ளார். 

பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளாமலேயே அந்தக் கட்சி என்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மொட்டு சின்னம் நாடெங்கும் எமது சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை மாற்ற முடியாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 


Add new comment

Or log in with...