உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம் | தினகரன்


உடல் ஆரோக்கியத்தில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியம்

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே அனைத்து பெண்களும் (womens) விரும்புகின்றனர். ஆனால் முறையற்ற உணவு பழக்க வழக்கத்தினாலும், உடற்பயிற்சி இன்மையாலும் உடல் எடை அதிகரித்தும், ஆரோக்கியம் அற்றநிலையிலும் பல பெண்கள் உள்ளனர். இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்லுகின்றது. என்றாலும் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி தனியாக நேரம் ஒதுக்குவதாக இல்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போது வீட்டில் இருந்த படி சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் சரிவிகிதப்படி உணவு வகைகளை உட்கொண்டு வந்தாலே பெண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்குப் போதுமானது. 

பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவே சரிவிகித உணவு எனப்படுகின்றது. அதாவது விட்டமின்கள், புரதம், மாப்பொருள் மற்றும் கல்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். உணவில் பச்சை நிற மரக்கறி வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் போன்றவற்றையும் தவிர்த்துக் கொள்வதே நல்லது. 

அதேநேரம் மூன்று வேளையும் அதிகளவு சாப்பிடுவதற்கு பதிலாக ஆறு வேளையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது நல்லது. இது உணவு தொடர்பான நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இவ்வாறு இல்லாவிட்டால் இடைவேளை நேரத்தில் பழங்கள், வித்துகள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்தவற்றை சாப்பிடலாம். ஏதாவது ஒரு தானியங்கள், மரக்கறி வகைகள், பழங்கள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

இன்றைய காலகட்டத்தில் இளம்பெண்கள் முகம் கொடுக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக கருப்பை நீர்க்கட்டி உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதனை மாத்திரை மூலம் கரைக்க முடியும். ஆனால் இந்நீர்க்கட்டி பெரிதானாலோ அல்லது கர்ப்பப்பைக்கு அருகில் இருந்தாலோ அதனை அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற வேண்டும்.  

அதேநேரம், விட்டமின் டி நிறைந்த உணவுகளான கடல் வாழ் உயிரினங்களை  அதாவது சிறிய மீன் வகைகளை வாரந்தோறும் சாப்பிட வேண்டும். அதிலுள்ள கல்சியத்தை உறிஞ்சி எலும்புகளை பலப்படுத்த விட்டமின் டி உதவும். மேலும் காலையில் குறைந்தது 15நிமிடங்களாவது சூரிய ஒளி படும் வகையில் வெயிலில் நிற்க வேண்டும். அதன் மூலம் சூரிய ஒளியில் காணப்படும் விட்டமின் டி யை உடல் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

இருப்பினும் விட்டமின் டி குறைபாடு ஏற்படுமாயின் தசை மற்றும் என்புகளில் பலவீனம் ஏற்படும். அதனை தவிர்க்க சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது பெரிதும் உதவும். அத்தோடு முட்டை, பால், மீன் எண்ணெய், மீன், காளான், தோடம் பழம் உள்ளிட்டவைகளிலும் விட்டமின் டி அதிகமுள்ளது.  

மேலும் பெண்கள் கீரை வகைகள், பேரீச்சை, அத்தி பழங்கள் போன்றவற்றையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு சத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.  

இவை இவவாறிருக்க, பெண்கள் மாத்திரமல்லாமல் அனைவரும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் என்புகளும், தசைகளும் வலுப்பெறும். இதற்கென தினமும் முப்பது நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதாவது ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், நடத்தல் என்பன உடலுக்கு சிறந்த பலன்களை அளிக்கும்.

அதேநேரம் நிற்றல் கூட ஒரு உடற்பயிற்சிகள் தான் என்பதை மறந்துவிடலாகாது. அதனால் கையடக்கத் தொலைபேசியில் அளவளாவும் போதாவது நின்று கொண்டு அளவளாவுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் பெரும்பாலான பெண்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது தான் வழக்கமாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக உடலில் சோர்வும், உடல் உறுப்புகள் வலு இழக்கப்படுதலும் போன்றவாறான பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவ ரீதியிலான ஆய்வுகளில் அவதானிக்கப்பட்டுள்ளன. அதனால் ஒரு மணித்தியாலயத்திற்கு குறைந்தது ஒரு தடவையாவது எழுந்து சிறிது நேரம் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக லிப்டை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பெரிதும் நன்மை பயக்கும்.  

பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் பருவம் அடைவதில் தொடங்கி இல்லற வாழ்க்கை, குழந்தை பேறு, மெனோபொஸ், முதுமை என பல்வேறு கட்டங்களைக் கடக்கக் கூடியவர்களாக உள்ளனர். இந்த ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறுவிதமான அசௌகரியங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியவர்களாக   உள்ளனர். அதனால் இவ்வாறான அசௌகரியங்களை குறைத்துக் கொள்ளவும் தவிர்த்துக் கொள்ளவும் உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகளிலும் யோகா செயற்பாடுகளிலும் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஈடுபடுவது நல்லது. அத்தோடு குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை தவிர்த்துக் கொள்வதோடு புட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள பானங்களுக்கு பதிலாக இளநீர் மற்றும் பழச்சாறுகளை பருகுவது நல்லது. இவை பெண்களின் உடல் உள ஆரோக்கியம் மேம்பட பக்க துணையாக அமையும். 


Add new comment

Or log in with...