குழந்தைகளை பாதிக்கும் என்புத் தொற்றுநோய் | தினகரன்


குழந்தைகளை பாதிக்கும் என்புத் தொற்றுநோய்

துடுக்குத்தனமும், அதிக சுறுசுறுப்பும் உள்ள குழந்தைகளை அனைவருமே விரும்புவர். ஆனால் அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளின் மீது தனி கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமானது. ஏனெனில் குழந்தை தவறி கீழே விழுந்து அடிபட்டு இரத்தக் காயம், வெட்டுக் காயம் போன்றவை ஏற்பட்டு விடலாம். சில சமயம் மோசமான மிக ஆழம் கொண்ட வெட்டுக் காயங்கள் ஏற்படுமாயின் அவற்றில் நோய் தொற்று கூட ஏற்படலாம்.  

இவ்வகை நோய் தொற்றுகள் சில சமயம் என்புகளைப் பாதித்து ஒஸ்டியோமைலிட்டிஸ் என்கின்ற என்புத் தொற்று நோயை உருவாக்கி விடலாம். பொதுவாக ஸ்டெப்பெல்லோ காக்கஸ் ஏரியஸ் என்ற பக்றீரியாவே இவ்விதமான என்புத் தொற்றை ஏற்படுத்தும். அதேநேரம் வேறு சில பக்றீரியாக்களாலும் இந்த என்புத் தொற்றுகள் ஏற்படுத்தப்படலாம். அவ்வகைத் தொற்றுகள் நோயாளரின் வயது, நோயாளரின் தாக்கப்பட்டிருக்கும் என்புகளைப் பொறுத்து அமையலாம்.  

குறிப்பாக குழந்தைகளின் கை, கால்களில் உள்ள என்புகளையும், தோள்பட்டை என்புகளையும் இந்த என்புத் தொற்று தாக்கக்கூடும். இந்த பக்றீரியா தொற்று என்புகளில் பல வழிகளில் ஏற்படலாம். குறிப்பாக உடலின் ஒரு இடத்தில் தொற்றிக் கொண்ட பிறகு இரத்த நாளங்களின் வழியாக என்புகளுக்குள் இப்பக்றீரியா பிரவேசிக்கலாம். இவ்விதமான தொற்றுக்குத் தான் பெரும்பாலானவர்கள் உள்ளாகின்றனர்.  

என்றாலும் சில சமயம் நோயின் மேற்பகுதியில் ஏற்படும் மிக மோசமானதும் ஆழமானதுமான வெட்டுக் காயங்களின் ஊடாக உடலுக்குள் நுழையும் பக்றீரியாக்கள் திசுக்களின் ஊடாகவும், என்புகள் உடைந்து தோலின் மேற்பகுதி வரை தெரியுமளவிற்கு ஏற்படும் காயங்கள் ஊடாகவும் கூட என்புத் தொற்று ஏற்படக் காரணமாக அமைகின்றது.

அதேநேரம் வயதானவர்களின் கால் மற்றும் பாதங்களில் உள்ள என்புகளில் பாதிப்புக்கள் ஏற்படலாம். அவ்விடத்தில் இடம்பெறும் குருதியோட்டத்தினாலும் கூட இவ்வகைத் தொற்று ஏற்படலாம்.  

அதாவது என்புகளில் பக்றீரியா தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட என்புகளில் அதிக வலி ஏற்படும். அந்த இடத்தைச் சுற்றிலும் கதகதப்பாக இருக்கும். சிலருக்கு காய்ச்சல் கூட ஏற்படலாம். பாதிக்கப்பட்ட என்புகளின் மேற்புறத் தோலில் புண்கள் ஏற்படலாம் அல்லது அவ்விடங்கள் சிவந்து வீங்கியும், தடித்தும் காணப்படலாம். ஆனால் குழந்தைகளிடமும், பச்சிளம் சிறார்களிடமும் இத்தொற்று ஏற்பட்டால் அது தொடர்பில் வலியோ வேறு அறிகுறிகளோ வெளிப்படாது. அதேநேரம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களின் குருதிக்குழாய்கள் நரம்புகளாலும் இவ்வலியை உணர முடியாது.  

அதன் காரணத்தினால் பாதிக்கப்பட்ட என்புகளில் வலி அல்லது வீக்கம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் ஒரு என்பு சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனையின் அடிப்படையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான அறிகுறிகள் வெளிப்பட்டும் கவனயீனமாக நடந்து கொண்டால் இந்த என்புத்தொற்று என்புகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்து விடலாகாது.  

இந்த அறிகுறிகள் தொடர்பில் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகும் பட்சத்தில் அவர் உடலை பரிசோதித்து பாதிக்கப்பட்ட இடத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காயங்கள், என்பு முறிவுகள் குறித்தும் கவனம் செலுத்துவர். அத்தோடு குருதிப் பரிசோதனைக்கும் ஆலோசனை வழங்குவர். அப்பரிசோதனையில் குருதியின் வெண்குருதி சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் நோய் தொற்று தொடர்பில் கண்டறியலாம். அத்தோடு திடீரென தோன்றி மறையும் என்புத்தொற்று தொடர்பில் என்பு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றின் மூலமும் பாதிப்பைக் கண்டறியலாம். அத்தோடு பாதிக்கப்பட்டுள்ள என்புப் பகுதியில் இருந்து ஊசி மூலம் பெறப்படும் மாதிரியைப் பரிசோதிப்பதன் மூலம் எவ்வகையான பக்றீரியா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையும் இனம் காணலாம். இப்பரிசோதனைகளின் அடிப்படையில் தகுந்த நுண்ணியிர்க்கொல்லி மாத்திரைகள் பரிந்துரை செய்யப்படும். தற்போது இத்தொற்றுக்கான சிகிச்சை புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

என்றாலும் சிலருக்கு என்புகளில் துளை சிதைவு ஏற்பட்டு, சீழ் பிடித்து மோசமான பாதிப்பு கூட ஏற்படலாம். அவ்வாறானவர்களை ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட என்பு சிதைவுகளில் உள்ள சீழ் போன்றவற்றை அப்புறப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் அந்த என்புப் பகுதி சுத்தமடைந்துவிடும். இதன் மூலம் விரைவாக குணமடைந்து விடலாம்.  

அத்தோடு என்புத் தொற்று பாதிப்பு மிக அதிகமாகக் காணப்பட்டால் மருத்துவமனையில் தங்கி இருந்து குருதி நாளங்களின் ஊடாக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் செலுத்தி தொற்றை எதிர்த்து அழிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.

இவ்வாறானவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் (வாய் வழியாக) மாத்திரை மூலம் சில வாரங்களுக்கு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பாவிக்க வேண்டும்.  

ஆகவே இந்நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமையும் ஆழ்ந்த வெட்டு மற்றும் குருதிக் காயங்கள் ஏற்படும் பட்சத்தில் சவர்க்காரம் அல்லது குழாய் நீரில் குறைந்தது ஐந்து நிமிடங்கள் நன்றாக கழுவி சுத்தம் செய்து மருந்து இட்டுக்கொள்ள வேண்டும். அக்காயம் குணமடையாவிட்டாலோ அல்லது காயத்தில் தொடர்ந்து வலி காணப்பட்டாலோ தாமதியாது தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தவறக்கூடாது.  

முஹம்மத் மர்லின்

 


Add new comment

Or log in with...