Thursday, March 28, 2024
Home » அல்-அக்ஸாவின் மகத்துவம்

அல்-அக்ஸாவின் மகத்துவம்

by sachintha
February 2, 2024 6:06 am 0 comment

இஸ்லாத்தில் ரஜப் மிக முக்கிய மாதங்களில் ஒன்றாகும். இம்மாதத்தில்தான் அல்லாஹ்தஆலாவின் ஏற்பாட்டில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்ரா (இரவு)ப் பயணம் மூலம் மக்காவில் இருந்து ஜெரூஸலத்திலுள்ள பைத்துல் முக்கதிஸுக்கு அழைத்து சென்றார்கள்.

இதனை அல்லாஹ்தஆலா அல் குர்ஆனில், ‘(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் (முஹம்மத் – ஸல்) என்னும் தன் அடியாரை(க் கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து (வெகுதூரத்தில் இருக்கும் பைத்துல் முக்கத்திஸிலுள்ள) மஸ்ஜிதுன் அக்ஸாவுக்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். (அவ்வாறு அழைத்துச் சென்ற) நாம் அதனைச் சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). நிச்சயமாக (உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான் (17:1) என்று குறிப்பிட்டுள்ளான்.

இவ்வசனத்தின் ஊடாக மாபெரும் உண்மைகளை அல்லாஹ் எடுத்தியம்பியுள்ளான். இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் இப்போது போன்று உலகம் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஒரு பிரதேசத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு பயணிப்பது என்பது நாட்கணக்கில் மாதக் கணக்கில் செல்ல வேண்டியதாகும். அதுவும் கால்நடையாகவோ அல்லது கழுதை, ஒட்டகம் போன்ற மிருகங்களிலோ தான் பயணிக்க வேண்டும். அவற்றைத் தவிர இப்போது போன்று வாகனங்கள், விமானங்கள் வசதிகள் எதுவும் அன்று இருக்கவில்லை.

அப்படியான ஒரு சூழலில் மக்காவில் இருந்த நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் வெகுதொலைவிலுள்ள பைத்துல் முக்கத்திஸுக்கு அல்லாஹ்வின் ஏற்பாட்டின் ஊடாக அழைத்து செல்லப்பட்டார்கள். இதன் நிமித்தம் புராக் எனும் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாகனமானது கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்தில் அமைந்த நீளமானது’ என்று ‘முஸ்லிம்’ கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

இப்போது போன்று அறிவியல் ரீதியில் வளர்ச்சி அடையாத அன்றைய காலகட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தை பலரும் ஆச்சரியத்துடன் நோக்கினார்கள். சந்தேகம் தெரிவித்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள ஒரு இடத்திற்கு ஒரே இரவில் சென்று திரும்புவதும் அன்று இலகுவான காரியமாக இருக்கவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கும் பைத்துல் முக்கதிஸுக்கும் இடையில் மேற்கொண்ட பயணத்தின் போது தாம் அவதானித்த விடயங்களை எடுத்துக்கூறி தமது பயணத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தினார்கள். அதன் ஊடாக சந்தேகத்திற்கு இடமின்றி நபி (ஸல்) அவர்களின் இஸ்ரா பயணத்தை ஸஹாபாக்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதேநேரம் அல்லாஹ்தஆலா, இறைத்தூதர் (ஸல்) அவர்களை நாம் ஏன் இவ்வாறு அழைத்து சென்றோம் என்பதையும் இதே வசனத்தில் குறிப்பிட்டிருக்கின்றான். ‘நாம் அதனைச் (பைத்துல் முக்கதிஸை) சூழவுள்ளவை சிறப்புற்று ஒங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்கு காண்பிப்பதற்காகவே அங்கு அழைத்து சென்றோம்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளான்.

இதன் ஊடாக மக்காவிலிருந்து பைத்துல் முக்கதிஸுக்கு நபி (ஸல்) அவர்கள் அழைத்து செல்லப்பட்டதன் நோக்கம் தெளிவுபடுத்தப்படுகிறது. அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் காண்பிக்க அன்னார் அங்கு அழைத்த செல்லப்பட்டிருக்கிறார். பைத்துல் முக்கதிஸும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் நிறைந்தவை என்பதை இவ்வசனம் எடுத்தியம்பப்படுகிறது.

இவ்வாறு மகத்துவம் மிக்க இஸ்ரா பயணமாக அழைத்து செல்லப்பட்ட நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்றதும் பைத்துல் முக்கதிஸின் கதவில் தாம் பயணித்த வாகனத்தை கட்டி வைத்து விட்டு நபிமார்கள் அனைவருக்கும் இமாமாக நின்று இரண்டு ரக்அத் தொழுகை நடாத்தினார்கள்.

அதன் பின்னர் அங்கிருந்து அல்லாஹ்வை சந்திப்பதற்காக மிஃராஜ் (விண்ணுலக) யாத்திரையை மேற்கொண்டார்கள். இப்பயணத்தின் போது பல நபிமார்களையும் சந்தித்து சென்ற நபி (ஸல்) அவர்களுக்கு நரகம், சுவர்க்கம் காட்டப்பட்டது. ஐம்பது நேரத் தொழுகையையும் அல்லாஹ் வழங்கினான். ஆனாலும் நபிமார்களின் ஆலோசனைகளுக்கு அமைய அதனை ஐந்து நேரத் தொழுகையாக அல்லாஹ்வின் அங்கீகாரத்துடன் குறைத்து பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முக்கதிஸுக்கு திரும்பித்தான் மக்காவை வந்தடைந்தார்கள்.

ஆனால் அல்லாஹ் நாடி இருந்தால் மக்காவில் இருந்த நபி (ஸல்) அவர்களை நேரே மிஃராஜ் மூலம் தன்னிடம் அழைத்திருக்கலாம். அல்லது மிஃராஜ் அழைத்திருந்த நபி (ஸல்) அவர்களுக்கு தொழுகையை வழங்கி நேரே மக்காவுக்கு அனுப்பி இருக்கலாம். அவை எதுவும் அல்லாஹ்வுக்கு முடியாத காரியமல்ல.

அல்லாஹ்வின் அத்தாட்சிகள் பூமியின் பல பிரதேசங்களிலும் நாடுகளிலும் விரவிக் காணப்படுகின்றது. அப்படியிருந்தும் ஜெரூஸலத்திற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்து சென்றதோடு அல்லாஹ்வை சந்திப்பதற்கான மிஃராஜ் பயணத்தை ஆரம்பிக்கும் பூமியின் தளமாக அல் அக்ஸாவை அவன் நிர்ணயித்ததன் ஊடாக பைத்துல் முக்கதிஸின் முக்கியத்துவம் தெளிவாகிறது.

பைத்துல் முக்கதிஸும் பலஸ்தீனும் இறைநம்பிக்கையின் பூமியுடன் இச்சம்பவத்தின் ஊடாக இணைத்து வைக்கப்பட்டது. இறைநம்பிக்கையுடனும் இறைநம்பிக்கையின் பூமியுடனும் பைத்துல் முக்கதிஸும் பலஸ்தீனும் பிண்ணிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி இணைக்கப்பட்டதேயன்றி நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தில் இடம்பெற்றதல்ல. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணம் மேற்கொள்ள முன்னரான மக்கா காலத்தில் இறைநம்பிக்கையுடனும் இறைநம்பிக்கை பூமியுடனும் இணைக்கப்பட்ட போதிலும் நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பூமியில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது மஸ்ஜித் தான் பைத்துல் முக்கதிஸாகும்.

ஐவேளைத் தொழுகையை அல்லாஹ்விடம் பெற்று வந்த நபி (ஸல்) அவர்கள் 16, 17 மாதங்கள் பைத்துல் முக்கதிஸை கிப்லாவாக நோக்கியே தொழுகையை நிறைவேற்றினார்கள். அதனையே ஸஹாபாக்களும் பின்பற்றினார்கள். (ஆதாரம்: புஹாரி)

உலகம் இருக்கும் வரையும் பிறக்கும் முஸ்லிம்கள் மூன்று இடங்களுக்கு தான் புனித யாத்திரை மேற்கொள்ள முடியும். அதற்கே இஸ்லாம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று மக்காவிலுள்ள கஃபா, இரண்டு மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவி, மூன்று ஜெரூஸலத்திலுள்ள அல் அக்ஸா ஆகும். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) இவற்றைத் தவிர வேறு எந்தவொரு இடத்திற்கும் இறைநம்பிக்கையாளர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள முடியாது.

அத்தோடு கஃபாவில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு இலட்சம் நன்மைகளும் மஸ்ஜிதுன் நபிவியில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆயிரம் நன்மைகளும் அல் அக்ஸாவில் நிறைவேற்றப்படும் ஒவவொரு தொழுகைக்கும் 500 நன்மைகளும் கிடைக்கப்பெறும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதேநேரம் அல் அக்ஸாவை சூழவும் பலஸ்தீனிலும் பல இறைத்தூதர்கள் வாழ்ந்துள்ளார்கள். இறைவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு சிறப்புக்கள் பெற்று விளங்கும் இம்மஸ்ஜித் குறித்து நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் சிலாகித்துக் கூறியுள்ளார்கள். இருந்தும் கூட அல் அக்ஸாவின் பெறுமதியும் மகத்துவமும் உணரப்படாத நிலையைப் பரவலாக அவதானிக்க முடிகிறது. ஆகவே அல் அக்ஸாவினதும் பலஸ்தீனினதும் மகத்துவம் சிறப்பு அறிவோம். அவற்றுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

மர்லின் மரிக்கார்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT