பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி; உயர் கல்வியமைச்சு முஸ்தீபு | தினகரன்


பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி; உயர் கல்வியமைச்சு முஸ்தீபு

பல்கலைக்கழகங்களில் தொடராக இடம்பெற்று வரும் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுப்பதற்குத் திட்டமிட்டிருக்கின்றது. உயர் கல்வியமைச்சு எடுக்கவிருக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக பகிடிவதையில் சம்பந்தப்படும் மாணவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பத்து வருடகால சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

உயர் கல்வியமைச்சின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள், புத்திஜீவிகள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இவ்வாறானதொரு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் அச்சமின்றி படிப்பைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாடுகளை இறுக்கமாகப் பின்பற்றினாலும் பகிடிவதை தொடர்ந்தவண்ணமே உள்ளது. இப்பகிடிவதை பாலியல் துன்புறுத்தல் வரை சென்று உயர்கல்விக் கனவோடு வந்த எத்தனையோ மாணவர்களின் எதிர்காலத்தை தொலைத்த சம்பவங்கள் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் ஏராளம். இலங்கையில் பகிடிவதையால் வருடாந்தம் 2,000 வரையான மாணவர்கள் கல்வியை இடைநிறுத்திச் செல்வதாக வெளியாகியுள்ள அமைச்சுப் புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

இவ்வாறான நிலையில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை இல்லாதொழிக்கும் நோக்குடன் உயர்கல்வி அமைச்சு கொடூர பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கும் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவுள்ளது. இதனூடாக பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காத நிர்வாகிகளை உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக உயர் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பகிடிவதையானது இலங்கை பல்கலைக்கழகங்களில் மிக மோசமான விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில், பல்சார் சமூகத்தவர்கள் கல்விகற்கும் பல்கலைக்கழகங்களில் இன, மத முரண்பாடுகளை உருவாக்கும் செயற்பாடாக பகிடிவதை காணப்படுகின்றமை ஆபத்தானது. ஒரு மாணவன் உயர்கல்வியை இழக்குமளவுக்கு பகிடிவதை கட்டு மீறிப் போவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்கள் உள ரீதியாகப் பாதிப்படையுமளவுக்கு பகிடிவதைகள் இருக்கும்நிலையில், இவை மாணவர்கள் மத்தியில் கல்வி மீதான விரக்தியை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.

இவ்வாறான நிலையில், உயர்கல்வி அமைச்சின் முடிவு கல்வியியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இலங்கையின் எப்பாகத்திலும் எவரும் சுதந்திரமாக உயர்கல்வியைத் தொடரும் சூழல் அனைத்துப் பல்கலைக்கழங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். இன, மத, வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையாக அனைவரும் கல்விகற்கும் இடமாகப் பல்கலைக்கழகங்கள் மாறும் போதே பல சமூகம் சார்ந்த நற்பிரஜைகளாக பட்டதாரிகளை உருவாக்க முடியும்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முற்றாக ஒழிக்கும் கல்வியமைச்சின் செயற்பாட்டிற்கு பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் என சகல தரப்பினரும் அதன் அவசியம் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனுக்கும் பாடசாலை இறுதித் தருணத்தில் உயர்கல்வி என்பது ஒரு சந்தர்ப்பம். பல இலட்சம் மாணவர்களில் சில ஆயிரம் பேருக்கு கிடைக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பகிடிவதை என்ற ஒன்றால் இழக்கும் நிலை ஏற்பட்டால் அதை விட பெரிய ஏமாற்றம் வேறேதுமில்லை. சகோதரத்துவம், மனிதாபிமானம் மிக்க எவரும் அடுத்தவனின் கல்விக்குத் தடையாக இருப்பதில்லை. ஒருவரின் கல்வியைப் பறிக்கின்ற எவரும் மிருகத்துக்கு ஒப்பானவர்களே. இவ்வாறானவர்களைத் தண்டிப்பதில் தவறேதும் கிடையாது.

வருடாந்தம் 2,000 மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் பகிடிவதையை எதிர்ப்பதில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் முன்னின்று உழைக்க வேண்டும். பகிடிவதையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன்நிறுத்த பல்கலைக் கழக நிர்வாகங்கள் பின்னிற்கக்கூடாது.

பகிடிவதையை ஒழிப்பதால் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்த ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமும் ஒன்றுபடுவது காலத்தின் தேவை.

எமது நாட்டின் உயர்கல்வித்தரம் மிக உன்னதமானதாகும். அதனை ஒழுங்காக பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினரும் பல்கலைக்கழக உயர்கல்வியின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் உயர் கல்வியமைச்சின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். கிராமத்துப் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்ற இலட்சியத்துடன் தான் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்றனர். இத்தகைய கனவுகள் பல கட்டங்களில் கனவாகவே முடிந்துபோனமை கவலை தரக்கூடியதாகும். ஆரம்பகாலத்தில் “பகிடி” என்பது மாணவர்களின் உச்ச சுபாவங்களையும், அச்சங்களையும் போக்கி இணைந்து கற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படவே இடம்பெற்றன.

இன்று ‘பகிடி’ பெரும் வதையாக மாறி உயிராபத்துகளையும், அவமானத்தை தோற்றுவிப்பதற்குமே வழிசெய்கிறது. இதற்கு அதிகபட்சத் தண்டனை வழங்கப்படுவதை எவரும் எதிர்க்கமாட்டார்கள். எமது எதிர்பார்ப்பு அவர்களை தண்டிப்பதல்ல, பகிடி வதையை இல்லாதொழிப்பதேயாகும்.


Add new comment

Or log in with...