1965 இல் ஜெயலலிதா, ஜெய்சங்கர் அறிமுகம் | தினகரன்


1965 இல் ஜெயலலிதா, ஜெய்சங்கர் அறிமுகம்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டம் கோலோச்சிய தருணத்தில்தான் ஜெமினிகணேசன், முத்துராமன் என பலரும் இருந்தார்கள். ஆனால் முதல் படத்திலேயே எல்லோரையும் கவர்ந்த நடிகராக வெற்றிக் கொடி நாட்டினார் அவர். அந்த நடிகர்... மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். இவரின் முதல் படம் இயக்குநர் ஜோஸப் தளியத்தின் ‘இரவும் பகலும்’. 

இந்தப் படம் வெளியான ஆண்டு 1965. இந்த வருடத்தின் இன்னொரு ஒற்றுமை... இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’யின் மூலமாக ஜெயலலிதா அறிமுகமானதும் இதே வருடம்தான்.

வெண்ணிற ஆடை மூர்த்தியும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் அறிமுகமானார்கள் என்பது கூடுதல் தகவல்.  

 எம்ஜிஆர் இந்த வருடத்தில் ஏழு திரைப்படங்களில் நடித்தார். நாகிரெட்டியின் ‘எங்கவீட்டுபிள்ளை’ பொங்கலன்று திரையிடப்பட்டு சக்கை போடு போட்டது.

இரட்டை வேடங்களில் கலகலவெனச் செல்லும் இந்தப் படம், மிகப்பெரிய வசூலைக் குவித்தது.

ஆசைமுகம், கன்னித்தாய், கலங்கரை விளக்கம், தாழம்பூ, பணம் படைத்தவன் என வரிசையாக படங்கள் வந்தன. 

முக்கியமாக, முத்தாய்ப்பாக, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ இந்த வருடத்தில்தான் வெளியானது.

இதில் முக்கியமான விஷயம்... மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.வி.யும் ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்த கடைசிப்படம் இதுதான். அதுமட்டும் அல்ல... ‘வெண்ணிற ஆடை’யில் அறிமுகமான ஜெயலலிதா, அடுத்ததாக எம்ஜிஆருடன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ஜோடி போட்டார். இதுதான் இருவரும் சேர்ந்த முதல் படம்.  

 இன்னொரு சுவாரஸ்யம்... எட்டுப் படங்களில், எம்ஜிஆருக்கு ‘எங்கவீட்டுபிள்ளை’யும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் வண்ணப்படங்களாக அமைந்தன.

ஜெயலலிதா நடித்தது மூன்று படங்கள். ‘வெண்ணிற ஆடை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெய்சங்கருடன் ‘நீ’.

இதில் ‘வெண்ணிற ஆடை’யும், ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படமும் வண்ணப்படங்கள். 


Add new comment

Or log in with...