Home » இலங்கை – ஆப்கான் அணிகளின் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை – ஆப்கான் அணிகளின் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

by sachintha
February 2, 2024 6:32 am 0 comment

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் முதல் முறையாகவே டெஸ்ட் போட்டி ஒன்றில் சந்திக்கவுள்ளன. தவிர, புதிய டெஸ்ட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தனஞ்சய டி சில்வா இலங்கை அணியை முதல் முறையாக வழிநடத்தும் ஆட்டமாகவும் இன்றைய போட்டி அமையவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் நிலையில் அதில் 3 போட்டிகளில் வெற்றியீட்டி நான்கு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் பங்களாதேஷை எதிர்கொண்ட அந்த அணி 546 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போதிய அனுபவம் அற்ற அணி என்றபோதும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் எதிரணிக்கு சவால் விடுத்து வரும் ஆப்கான் அணி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் திருப்பம் காட்டக் கூடியதாக உள்ளது. இலங்கை ஆடுகளங்களில் உதவக் கூடிய வலுவான சுழற்பந்து வரிசையை கொண்டிருக்கும் அந்த அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தனஞ்சய டி சில்வாவுடன், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், திமுத் கருணாரத்ன என வலுவான துடுப்பாட்ட வரிசை மற்றும் பிரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித என டெஸ்ட் போட்டிகளுக்கான பிரத்தியேக பந்துவீச்சு வரிசையுடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

இதில் இலங்கையின் 18ஆவது டெஸ்ட் அணித் தலைவராக களமிறங்கவிருக்கும் தனஞ்சய டி சில்வா மீது அதிக அவதானம் சென்றுள்ளது.

எனினும் இந்தப் போட்டி ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை.

இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த டெஸ்ட் போட்டியை மைதானம் சென்று இலவசமாக பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT